Last Updated : 09 Nov, 2014 06:15 PM

 

Published : 09 Nov 2014 06:15 PM
Last Updated : 09 Nov 2014 06:15 PM

கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சாகும் வைகை

அரசின் அலட்சியத்தால் ஆண்டுக்கணக்கில் ஆற்றில் கலக்கும் கழிவுநீர், குப்பைகள்

'மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தில் விருந்துண்ட குண்டோதரன் என்ற பூதகணத்துக்கு தீராத தாகம் ஏற்படுகிறது. அவர் சிவனிடம் முறையிடுகிறார். உடனே ஒரு இடத்தை சுட்டிக்காட்டி அங்கு 'கை வை' என சிவன் உத்தரவிட்டு வைகை நதியை படைத்தார்' என்கிறது புராணம்.

குடிநீருக்காக உருவாக்கப்பட்டதாக வரலாற்று பின்னணியைக் கொண்ட வைகை ஆறு, இன்று அலட்சியத்தாலும், அக்கறையின்மையாலும் குடிப்பதற்கு அல்ல.. 'கை வை'க்கவே தயங்கும் அளவுக்கு கழிவுகள் நிறைந்து மாசுபட்டு கிடக்கிறது.

வைகை ஆற்றின் பயணம்

'மேற்குத் தொடர்ச்சி மலையில் வருசநாடு, மேகமலை வனப்பகுதிகளில் உருவாகும் மூலவைகை 78 கி.மீ. தூரம் பயணித்து வைகை அணையை அடைகிறது. அங்கிருந்து வெளியேறும் நீர் வழிநெடுகிலும் பசுமையாக்கி சுருளியாறு, தென்னாறு, வரட்டாறு, நாகலாறு, வரதாநதி, மஞ்சளாறு, சிறுமலையாறு, சாத்தையாறு, உப்பாறு ஆகியவற்றையும், சிறு சிறு ஓடைகளையும் தன்னகத்தே கொண்டு மதுரை நோக்கி பாய்கிறது. இடையில் ஆங்காங்கே அணைகளும், மதகுகளும் ஏற்படுத்தப்பட்டு அவற்றின் மூலம் கண்மாய்களுக்கும், குளங்களுக்கும் நீர் திருப்பிவிடப்படுகிறது. இவற்றில் பேரணை, சித்தணை, விரகனூர், பார்த்திபனூர் ஆகியன முக்கியமானவை.

பார்த்திபனூரிலிருந்து வெளியேற்றப்படும் நீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயை அடைகிறது. இந்த கண்மாய் நிரம்பினால் மட்டுமே, உபரிநீர் 7 கி.மீ. தூரம் பயணித்து வங்கக்கடலில் கலக்கிறது. ஆனால் ராமநாதபுரம் கண்மாயின் கொள்ளளவு அதிகமாக இருப்பதாலும் வைகை ஜீவநதியாக இல்லாததாலும் பெரும்பாலும் கடலுக்குச் செல்வதில்லை. எனவே ஒரு சொட்டு நீர்கூட வீணாவதில்லை '' என்று வைகை ஆற்றின் பயணத்தை விவரிக்கிறார் பொதுப்பணித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பொறியாளரான சி.சுதந்திர அமல்ராஜ். அவர் மேலும் கூறியது: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள 374 கண்மாய்களை சுமார் 12 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட நீரை சங்கிலித் தொடர்போல் நிரப்பும் வகையில் வைகை அமைந் துள்ளது. இதன்மூலம் 1 லட்சத்து 36,000 ஏக்கர் அளவுக்கு பாசனம் செய்ய முடியும். ஆனால் வாய்க்கால்களை சீரமைக்காதது, நீர் நிலைக்குள் உருவான மண்மேடுகளை அகற்றாதது, கருவேல மரங்களை வளரவிடுவது போன்றவற்றால் குளங்கள் மற்றும் கண்மாய்களின் முழு கொள்ளளவு 12 டி.எம்.சி.யில் இருந்து குறைந்து, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது' என்றார்.

கருப்பு நிறமாக மாறும் நீர்

இது ஒருபுறமிருக்க, ஆற்றுக்குள் கலந்துவிடப் படும் தொழிற்சாலை மற்றும் நகர்ப்புற கழிவுகளால் வைகை மாசடைந்து வருகிறது. தேனியில் தொடங்கி ராமநாதபுரம் வரை வழிநெடுகிலும் உள்ள 242 சிறிய மற்றும் 132 நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை சாய, தோல், எண்ணெய், இரும்பு பட்டறை கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் ஆற்றில் விடுவதாக நீண்டகாலமாக புகார் உள்ளது. இதுதவிர பூச்சி மருந்து மற்றும் உரச் சாக்குகளை கழுவுதல், ரசாயனங்களைப் பயன்படுத்தி சலவை செய்தல், டயர்களை எரியூட்டுதல் மூலமும் மாசுபடுத்தும் செயல்கள் தடையின்றி அரங்கேறி வருகின்றன. சில இடங்களில் உணவகங்கள் மற்றும் மருத்துவக் கழிவுகளும்கூட வைகைக்குள் தஞ்சமடைகின்றன. இவற்றால் நீர் மற்றும் மண்ணின் இயற்பியல், வேதியியல் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு குருவிக்காரன் சாலை பகுதிக்கு வரும்போது நீரின் நிறம் கருப்பாக மாறிவிடுகிறது.

வேலியே பயிரை மேயும் அவலம்

தனியாரால் ஏற்படும் மாசுபாடுகளைவிட, ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகமே வைகைக்குள் கழிவுநீரை கலந்து விடுவதுதான் வேதனை. தமிழகத்தில் வேறெங்குமே இல்லாத இந்த செயல் மதுரையில் அதிகாரப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும் அரங்கேறி வருகிறது. மாநகரின் வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்தாததால் செல்லூர், சிந்தாமணி, ஆழ்வார்புரம், அண்ணாநகர், பேச்சியம்மன் படித்துறை உட்பட்ட பகுதிகளில் இருந்து கழிவுநீர் ஆற்றில் கலக்கிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்குமிடத்தில், இதன் உச்சகட்ட பாதிப்பைக் காணமுடியும். இதுபற்றி 'நீரின்றி..' என்ற நூலின் ஆசிரியரான ரா.சிவக்குமார் கூறும் போது, ''ஒட்டுமொத்த வைகை ஆற்றில் மதுரைக்குள் ஓடும் 8 கி.மீ. தூரம்தான் மிகப்பெரும் தூய்மைக்கேட்டினை ஏற்படுத்துகிறது. செல்லூர் கழிவுகள் பந்தல்குடி கால்வாய் வழியாக ஆழ்வார்புரத்திலும், அண்ணாநகர் கழிவுகள் மேலமடை கால்வாய் வழியாக தேனூர் மண்டபம் அருகிலும் ஆற்றில் அதிகளவில் கலக்கின்றன. கரையோர வீடுகள் கழிவுகளை நேரடியாக விடுகின்றன'' என்றார்.

அதிர்ச்சி தரும் ஆய்வுகள்

வைகை ஆற்றில் 4 மாதங்கள் மட்டுமே நீர் ஓடும். மீதமுள்ள 8 மாதங்கள் இந்தக் கழிவுகள் அனைத்தும் வைகை ஆற்றுக்குள்ளேயே தேங்கிக் கிடந்து, சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றன. மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி, ஒரு லிட்டரில் 30 மில்லி கிராமுக்கு குறைவாக பிஓடி (உயிர் வேதியியல் ஆக்சிஜன் தேவை) இருக்கும் கழிவு நீரை மட்டுமே ஆறுகளில் கலந்துவிட வேண்டும். ஆனால் வைகை ஆற்றின் பல்வேறு பகுதிகளில் கழிவு நீரை சோதித்து பார்த்ததில் அவற்றின் பிஓடி லிட்டருக்கு 100 முதல் 200 மில்லிகிராம் என்ற அளவுக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல, 2010-ல் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், மதுரை மாநகருக்குள் வைகை கரை பகுதிகளில் இருந்து ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எடுக்கப்படும் நீர் குடிப்பதற்கு தகுதியற்றவை எனத் தெரியவந்தது.

நோய் பரப்பும் கிருமிகள்

இதுபற்றி தியாகராஜர் பொறியியல் கல்லூரி இணைப் பேராசிரியர் எஸ்.சந்திரன் கூறும்போது, ''ஆற்றில் நீர் ஓடிக்கொண்டே இருந்தால் அழுக்குகள், குப்பைகள் மற்றும் பிற கழிவுகளை அடித்துச் சென்றுவிடும். ஆனால் பெரும்பாலான நாட்களில் கழிவுநீர் மட்டுமே ஓடுவதால்தான் பிரச்சினை. இந்த கழிவுநீர் ஆற்றில் கலந்து தனக்குத்தானே சுத்திகரித்துக்கொள்ள வாய்ப்பு இல்லாததால், அவை நோய் பரப்பும் உயிரினங்கள் உருவாகுவதற்கான காரணிகளாக மாறிவிடுகின்றன. குறிப்பாக மனிதக்கழிவுகளில் பாஸ்பரஸ், நைட்ரஸ், பொட்டாசியமும், நோய் பரப்பும் கிருமிகளும் அதிகளவில் உள்ளன. எனவே கொசுக்கள், பூச்சிகள் போன்றவை உற்பத்தியாக வழி ஏற்படுகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டத்தையும், நீர் ஆதாரங்களையும் வெகுவாக பாதிக்கச் செய்கிறது. இதனை இப்படியேவிட்டால் எதிர்காலத்தில் பேராபத்தை ஏற்படுத்திவிடும்'' என்கிறார்.

ஆண்டுக்கு 15 ஆயிரம் பேருக்கு காய்ச்சல்

இதுபற்றி அரசு மருத்துவர் ஒருவர் கூறும்போது, வைகையில் தேங்கியிருக்கும் கழிவுநீர், புழுக்கள் மற்றும் பூச்சிகளின் உற்பத்தி மையங்களாக மாறி வருகின்றன. இவற்றால் மாநகரில் மட்டும் ஆண்டுக்கு 1 சதவீதம் பேர் (15 ஆயிரம் பேர்) காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். இதுதவிர காலரா, டைபாய்டு, மஞ்சள்காமாலை, தோல் நோய், அலர்ஜியும் ஏற்படுகிறது. ஆற்றில் அதிகளவு நீர் வரும்போது கழிவுநீர் அடித்துச் செல்லப்பட்டு ராமநாதபுரம் வரை வழிநெடுகிலும் உள்ள நீர்நிலைகளை அசுத்தமாக்குகிறது. கிராமப்புற பகுதிகளில் ஆற்றில் ஊற்று தோண்டியும், நேரடியாகவும் கிடைக்கும் நீரை குடிப்பவர்கள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகின்றனர். மதுரை மாவட்டத்தில் மட்டும் ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணாவிட்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்' என்றார்.

நச்சுவின் பிடியில் வைகை

1924-ல் மதுரை மக்கள்தொகை 1.1 லட்சம் தான். அப்போது வைகையில் ஒரு சொட்டு கழிவுநீர்கூட கலக்கவிடாமல், சந்தைப்பேட்டையில் நீராவி மூலம் பம்பிங் ஸ்டேஷன் அமைத்து 8 கி.மீ. தூரத்திலுள்ள அவனியாபுரத்துக்கு கொண்டுசென்று ஆங்கிலேயர்கள் சுத்திகரிப்பு செய்துள்ளனர். ஆனால் இப்போது அதிநவீன வசதிகள் இருப்பினும் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியாமல் தடுமாறுகிறது அரசு. வைகை பாசனத்துக்கான ஆறு மட்டுமல்ல. லோயர் கேம்ப் தொடங்கி ராமநாதபுரம் வரை அணைகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலமாக சுமார் 50 லட்சம் மக்களுக்கு குடிநீர் அளிக்கக்கூடியதாக விளங்குகிறது.

இப்படிப்பட்ட வைகை கழிவுகளால் நஞ்சாக மாறுவதை தடுக்க வேண்டும். இல்லையேல் பிற்காலத்தில் பல்வேறு நோய்களால் பேராபத்தை சந்திக்க நேரிடலாம் என பல தரப்பினரும் எச்சரிக்கின்றனர். சிவனுக்கு நஞ்சு அளித்ததால் சினம் கொண்ட வைகை, தனது நீரை வங்கக் கடலுக்கு அளிக்க விரும்பாமல் இரு கரைகளிலும் உள்ள கண்மாய், ஏரி, குளம், நீர் நிலைகளை நிறைத்து வந்துள்ளது என்பதை ''நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று வாரியிடம் புகுதாத வைகையே- வாரி இடத்தும் புறத்தும் இரு கரையும் பாய்ந்து நடத்தும் தமிழ்பாண்டி நாடு'' என்ற பழங்கால பாடல் வரிகள் விளக்குகின்றன. அப்படிப்பட்ட வைகையை நஞ்சின் பிடியில் இருந்து காப்பதற்கான திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு உடனே முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x