Published : 23 Feb 2014 02:20 PM
Last Updated : 23 Feb 2014 02:20 PM

கூட்டணி முடிவாகாததால் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் சிக்கல்: தகுதிப் பட்டியல் மட்டுமே தயாரிக்கப்படும்

பிப்ரவரி 24-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கூட்டணி முடிவாகாததால் காங்கிரஸ் வேட்பாளர்களை இந்தக் கூட்டத்தில் இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் எந்தக் கூட்டணியுமே இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் திமுக, அதிமுக, தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் விருப்ப மனுக்கள் பெற்று, வேட்பாளர்களுக்கான தோராய பட்டியல் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளன. இதில் திமுகவும், அதிமுகவும் மாநிலக் கட்சிகள் என்பதால், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் தோராயப் பட்டியலை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளன.

தமிழக காங்கிரஸை பொறுத்தவரை சுமார் 1200-க்கும் மேற்பட்டோரிடம் விருப்ப மனுக்களை பெற்று, அவை 24 பேர் அடங்கிய மாநிலத் தேர்தல் குழுவால் பரிசீலனை செய்து முடிக்கப்பட்டுள்ளது . இதில் ஒரு தொகுதிக்கு 5 பேர் வீதம் 39 தொகுதிகளுக்கும் 195 பேர் அடங்கிய தோராயப் பட்டியலை காங்கிரஸும் தயாரித்துள்ளது.

இதற்கிடையில், தமிழகத்துக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் வரும் 24-ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய மேலிடப் பார்வையாளர் குலாம்நபி ஆசாத், தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், தமிழக சட்டமன்றத் தலைவர் கோபிநாத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். என்றபோதும் இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தமிழக காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகளிடம் கேட்டபோது, “கூட்டணி இறுதி செய்யபடாததால், 24-ம் தேதி கூட்டத்தில் இறுதி வேட்பாளர்களை முடிவு செய்ய இயலாது.

தற்போதைக்கு தகுதிப் பட்டியல் மட்டும் தயாரிக்க உள்ளோம். கூட்டணியில் காங்கிரஸுக்கான தொகுதிகள் முடிவானதும், மீண்டும் மத்திய தேர்தல் குழு கூடி, இறுதி வேட்பாளர்களை தேர்வு செய்யும். எனவே இப்போதைய தேர்தல் குழுக் கூட்டம், வேட்பாளர் தகுதிப் பட்டியல் தயாரிப்புக் கூட்டமாகவே இருக்கும்’’என்றார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x