Last Updated : 12 Mar, 2017 11:10 AM

 

Published : 12 Mar 2017 11:10 AM
Last Updated : 12 Mar 2017 11:10 AM

சட்டவிரோத கார் பந்தயங்களை தடுக்க தீவிர நடவடிக்கை: 7,581 வாகன ஓட்டிகள் மீது ஒரே நாளில் வழக்கு பதிவு - கண்காணிப்பு தொடரும் என எச்சரிக்கை

சென்னையின் முக்கிய சாலைகளில் சட்டவிரோதமாக நடத்தப்படும் கார் பந்தயப் போட்டிகளைத் தடுக்க போக்குவரத்து போலீஸார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் 7,581 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னையில் அண்ணா சாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பல முக்கிய சாலைகளில் அடிக்கடி கார் பந்தயம் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவற்றை தடுத்து நிறுத்த போக்குவரத்து போலீ ஸார் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளனர். 10 நாட்களுக்கு முன்பு, சென்னையில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக கார் பந்தயத்தில் ஈடுபட்ட தொழிலதிபர் மகன்களின் 10 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை முழுவதும் தனிப்படைகளை அமைத்து போக்குவரத்து போலீ ஸார் கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில், கார் பந்தயத்தை தடுக்க ‘சிறப்பு நடவடிக்கை’ என்ற பெயரில் போக்குவரத்து போலீஸார் நேற்று முன்தினம் சென்னை முழுவதும் திடீர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில், விதிமுறைகளை மீறியதாக 7,581 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன.

கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, சர்தார் படேல் சாலையில் கார், பைக்குகளை அதிவேகமாக ஓட்டிச் சென்ற 120 பேர், செல் போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 21 பேர், போதையில் வாகனம் ஓட்டிச் சென்ற 19 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டன.

சீருடை அணியாமல் ஆட்டோ ஓட்டிச் சென்ற 1,415 பேர் எச்சரிக்கப்பட்டனர். பைக் ஓட்டி வந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை போக்குவரத்து போலீ ஸார் ஆங்காங்கே மடக்கி பிடித்தனர். அவர்களது பெற்றோரை வரவழைத்து, அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

இந்த அதிரடி நடவடிக்கை தொடரும். எனவே, போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அபய்குமார் சிங், இணை ஆணையர் பவானீஸ்வரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x