Published : 12 Feb 2014 06:04 PM
Last Updated : 12 Feb 2014 06:04 PM
ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், " மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படாதது வரவேற்கத்தக்கது.
தமிழகத்திற்கு பயணிகள் ரயில்கள் 4, விரைவு ரயில்கள் 3 மற்றும் அதிவேக ரயில்கள் என அறிவிப்புச் செய்யப்பட்டிருப்பதும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது.
நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட திருநெல்வேலி - திருச்செந்தூர் பாசஞ்சர்; மயிலாடுதுறை - மன்னார்குடி பாசஞ்சர் ரயில்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். டெல்டா மாவட்டங்களை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்கும்வகையில் மன்னார்குடியை மையமாக வைத்து விரைவு ரயிலும் பாசஞ்சர் ரயிலும் புதிதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அந்தப் பகுதியில் இருக்கும் விவசாயிகள் மிகுந்த பலனடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது இடைக்கால பட்ஜெட் என்பதால் விரிவான அறிவிப்புகள் செய்யப்படவில்லை. அதனால்தான் இராயபுரம் முனையம் உருவாக்கும் திட்டம் இதில் இடம்பெறவில்லை என்று கருதுகிறேன்.
ரயில்வே துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அந்நிய நேரடி முதலீடுகளையும் தனியாரின் பங்கேற்பையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய சேவைத் துறையாக விளங்கிக்கொண்டிருக்கும் ரயில்வே துறையை கொஞ்சம் கொஞ்சமாகத் தனியார்மயமாக்குவதற்கு இது இட்டுச்செல்லும். எனவே ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகள் யாவும் தனியார்மயமாகி மக்களிடமிருந்து சுங்கம் என்கிற பெயரில் ஏராளமான பணம் பறிக்கப்படுகிறது. ரயில்வே துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்தால் நெடுஞ்சாலைகளைப்போலவே இருப்புப் பாதைகளும் தனியார்மயமாகிவிடும். அதனால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும். எனவே, இந்த முயற்சியைக் கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT