Published : 13 Feb 2014 08:36 PM
Last Updated : 13 Feb 2014 08:36 PM

குடிப்பழக்கத்தை மட்டுமே ஊக்குவிக்கும் பட்ஜெட்: ராமதாஸ்

தமிழக அரசு தாக்கல் செய்திருப்பது தொலைநோக்கு பார்வையற்ற, வளர்ச்சிக்கு உதவாத பட்ஜெட் என்றும், குடிப்பழக்கத்தை மட்டுமே ஊக்குவிக்கக் கூடிய நிதிநிலை அறிக்கை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சட்டப்பேரவையில் 2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். புதிய வரிகள் விதிக்கப்படவில்லை என்பதைத் தவிர இந்த நிதிநிலை அறிக்கையில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த புதிய அறிவிப்பும் இடம்பெறவில்லை.

நிதிநிலை அறிக்கை என்பது வெறும் வரவு-செலவுத் திட்ட அறிக்கை மட்டுமல்ல. அது நாட்டின் வளர்ச்சி வழிவகுக்கக் கூடிய திட்டங்கள் அடங்கிய ஆவணமாக இருக்க வேண்டும்.

ஆனால், தமிழக அரசு தயாரித்துள்ள நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கான திட்டங்களே இல்லாத, வரவு-செலவு கணக்காகவே அமைந்திருக்கிறது. வேளாண் உற்பத்தியை பெருக்கவோ, மின் வெட்டைப் போக்கவோ, விலைவாசியை கட்டுப்படுத்தவோ, பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சியை தடுத்து, பொருளாதாரத்தை அதிவேக வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவோ உருப்படியான எந்த திட்டமும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை.

மின்சாரத்தை வெளிமாநிலங்களில் இருந்து வாங்கப் போவதாக அறிவித்துள்ள தமிழக அரசு, கிடப்பில் போடப்பட்டுள்ள 12,000 மெகாவாட் அளவுக்கான மின்திட்டங்களை செயல்படுத்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர் போன்று 100 அம்மா மருந்தகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழகத்தின் மருந்து தேவையில் அரை விழுக்காட்டைக் கூட பூர்த்தி செய்யாத வெற்று அறிவிப்பாகவே உள்ளது. அதேபோல், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில் ரூ.300 கோடியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது மதுரையில் ரூ.150 கோடியில் சிறப்பு மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கி 5 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதற்கான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. அதேபோல் தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலியில் ரூ.30 கோடியில் மண்டல புற்றுநோய் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப் படும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் வெளியான அறிவிப்பும் வெற்று அறிவிப்பாகவே உள்ளது. இந்த நிலையில், பல்நோக்கு மருத்துவமனைகள் அமைக்கும் திட்டம் எப்படி சாத்தியமாகும் எனபது கேள்விக்குறியே.

சென்னையில் கூவம் ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான திட்டம் ரூ.5911கோடியில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் இதேபோன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், அவற்றில் ஒன்றுகூட வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை. கூவம் ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை மற்றும் வீட்டுக் கழிவுகளை தடுக்காமல் கூவம் ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான திட்டங்களை அறிவிப்பது ஊழலுக்கு தான் வழிவகுக்குமே தவிர, உபயோகமானதாக இருக்காது.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அண்மையில் நான் வெளியிட்ட நிழல் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வெறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. அவற்றில் பொதுச்சேவை மையங்களை அமைத்தல், கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.5000 கோடி பயிர்க்கடன் வழங்குதல் ஆகிய திட்டங்கள் அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், மற்ற திட்டங்களை தமிழக அரசு கண்டுகொள்ளாதது நல்ல யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அரசுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது.

தமிழக அரசின் நிதி நிர்வாகத் திறனும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. 2014-15 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ. ஒரு லட்சத்து 78,170 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது தமிழக நிதிநிலை அறிக்கையின் மதிப்பில் ஒன்றரை மடங்கு ஆகும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மட்டும் தமிழகத்தின் கடன் மதிப்பு ரூ. 81,790 கோடி அதிகரித்திருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் ரூ. 24,711 கடனை சுமத்தியிருப்பது தான் அ.தி.மு.க. அரசின் சாதனையாகும். 2014-15 ஆம் ஆண்டில் மட்டும் ஒவ்வொருவர் பெயரிலும் சுமார் 3,500 ரூபாயை இந்த அரசு கடனாக வாங்கவிருக்கிறது. இதுதான் சிறப்பான நிதி நிர்வாகமா?

மதுவிற்பனை மூலம் 2013-14 ஆம் ஆண்டில் ரூ.23.401 கோடி வருவாய் ஈட்டியுள்ள தமிழக அரசு, 2014-15 ஆம் ஆண்டில் ரூ. 26,292 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டிருக்கிறது. அதாவது, தமிழகத்தில் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் வலியுறுத்திவரும் நிலையில் சுமார் ரூ.50,000 கோடிக்கு மதுவிற்பனை செய்ய அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இதுதான் மக்கள் நலன் விரும்பும் அரசா?

சுருக்கமாக கூற வேண்டுமானால், மது விற்பனையைத் தவிர வேறு எதிலும் தமிழகத்தை இந்த அரசு முன்னேற்றவில்லை. மொத்தத்தில், 2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு வழி வகுக்காத, வறுமையை போக்காத, மின்வெட்டை தீர்க்காத, குடிப்பழக்கத்தை மட்டுமே ஊக்குவிக்கக் கூடிய நிதிநிலை அறிக்கையாக அமைந்திருக்கிறது என்பது தான் வேதனையான உண்மை" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x