Published : 08 Jan 2014 08:20 AM
Last Updated : 08 Jan 2014 08:20 AM
நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சிறுவனின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. சிறுவனை பயமுறுத்துவதற்காக கழுத்தில் துப்பாக்கியை வைத்து காவல் ஆய்வாளர் மிரட்டியபோது துப்பாக்கி வெடித்ததாக கூறப்படுகிறது.
சென்னை நீலாங்கரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் சபீனாபேகம். இவரது மகன் தமீம்அன்சாரி (16). 6-ம் வகுப்புடன் படிப்பை முடித்த அன்சாரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்துவந்தாராம். நீலாங்கரை காவல் துறையினர் பலமுறை அவரைப் பிடித்து எச்சரித்து அனுப்பியதாக தெரிகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டருகே இருந்த ஒரு கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த சிறுவன் தமீம்அன்சாரியை நீலாங்கரை போலீஸார் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
அங்கு சிறுவனிடம் பல காவலர்கள் விசாரணை நடத்தினர். ஆனால் தமீம்அன்சாரி, 'நான் திருடவில்லை' என்று திரும்பத் திரும்ப கூறினாராம். இதனால் நொந்துபோன போலீஸார் முடிவில் நீலாங்கரை குற்றவியல் ஆய்வாளர் புஷ்பராஜிடம் சிறுவனை ஒப்படைத்தனர்.
ஆய்வாளர் புஷ்பராஜிடமும், 'நான் திருடவில்லை' என்ற பதிலையே மீண்டும் மீண்டும் கூறினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த புஷ்பராஜ் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அன்சாரியின் கழுத்தில் வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென துப்பாக்கி வெடித்து அன்சாரியின் கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. கழுத்தில் காயம்பட்ட சிறுவன் ரத்தம் வழிந்த நிலையில் காவல் நிலையத்துக்குள்ளேயே மயங்கி விழுந்தார். விபரீதத்தை உணர்ந்த போலீஸார் அன்சாரியை உடனே ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கழுத்தில் பாய்ந்திருந்த துப்பாக்கி குண்டை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அன்சாரி நல்ல உடல் நிலையுடன் இருக்கிறார்.
இந்த சம்பவத்தை காரணம் காட்டி சில அமைப்பினர் காவல் நிலையத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். இதனால் நீலாங்கரை காவல் நிலையத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கியால் சுட்ட ஆய்வாளர் புஷ்பராஜிடம் அடையாறு துணை ஆணையர் சேவியர் தன்ராஜ், உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT