Published : 08 Jan 2014 05:30 PM
Last Updated : 08 Jan 2014 05:30 PM
காவல் நிலையத்தில் துப்பாக்கி யால் சுடப்பட்ட சிறுவனுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுவனை சுட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை நீலாங்கரை அருகே வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் அனிபா. இவரது மனைவி சபீனாபேகம். இவர்களுக்கு தமீம் அன்சாரி (15) உள்ளிட்ட மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
அனிபா சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதனால் சபீனாபேகம் அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறார்.
ஒரு திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட தமீம் அன்சாரியிடம், நீலாங்கரை காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் துப்பாக்கியை காட்டி பயமுறுத்தி விசாரணை நடத்தியபோது, துப்பாக்கி வெடித்து, தமீம் அன்சாரியின் கழுத்தில் குண்டு பாய்ந்தது.
தனியார் மருத்துவமனையில் தமீம் அன்சாரிக்கு செவ்வாய்க்கிழமை இரவு அறுவை சிகிச்சை நடந்தது. குண்டு பாய்ந்ததில் சிறுவனின் கழுத்து எலும்பு, ரத்தக் குழாய், மூச்சுக் குழாய், சில நரம்புகள் பாதிக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டன.
புதன்கிழமை அவருக்கு பேசுவதில் கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சிறுவன் அபாய கட்டத்தை கடந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனைப் பார்க்க அவனது தாய் சபீனா பேகத்தை தவிர யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.
ஆய்வாளர் பணியிடை நீக்கம்
சிறுவன் சுடப்பட்டதை கண்டித்து பழைய மகாபலி புரம் சாலையில் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம், மறியல் நடத்தினர். சிறுவனை சுட்ட நீலாங்கரை குற்றவியல் காவல் ஆய்வாளர் புஷ்பராஜை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
சிறுவன் சுடப்பட்டபோது காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் வர்ஜித் கொடுத்த புகாரின் பேரில் புஷ்பராஜ் மீது சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்துள்ளார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், கவனக்குறைவாக செயல்பட்டதாகவும் புஷ்பராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT