Published : 20 Jan 2014 12:00 AM
Last Updated : 20 Jan 2014 12:00 AM
புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் தங்கியிருக்கும் மஹாபோதி ஆசிரமத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களும், இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களும் நல்லெண்ண அடிப்படையில் தொடர்ந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு பிரச்சினைகள் குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கு இடையே வரும் 27-ம் தேதி பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது.
இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்ததாக 179 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 275 பேர் அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
பல கட்ட முயற்சிகளுக்குப் பின் இருநாட்டு மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 13-ம் தேதி 52 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டனர். 18-ம் தேதி 78 இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் எழும்பூரில் உள்ள புத்த மடமான மஹாபோதி ஆசிரமத்தில் தங்கியுள்ளனர்.
இவர்கள் விரைவில் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள். அதுவரை இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து ஆசிரமத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 179 இலங்கை மீனவர்களில் இதுவரை 130 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 49 பேரையும் விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை சிறையில் இருந்த 275 தமிழக மீனவர்களில் 211 பேர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். மீதமுள்ள 64 மீனவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT