Published : 09 Oct 2013 06:13 PM
Last Updated : 09 Oct 2013 06:13 PM

தமிழக மீனவர்களை விமர்சிப்பதா? - குர்ஷித்துக்கு ராமதாஸ் கண்டனம்

இந்திய அமைச்சராக இருந்து, தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய சல்மான் குர்ஷித், சிங்கள அமைச்சரைப் போல கருதிக்கொண்டு, தமிழக மீனவர்களை விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்கள் பேராசையுடன் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி, இலங்கை கடல் வளங்களையும், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிப்பதாக, சல்மான் குர்ஷித் குற்றம்சாட்டியுள்ளதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை அதிபர் ராஜபக்‌ஷேவை எச்சரித்து, 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை செயல்படுத்த சம்மதிக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ வழக்கம்போலவே ராஜபக்‌ஷேவின் விருந்தினராக சென்று விருந்து சாப்பிட்டுவிட்டு திரும்பியுள்ளார்.

13 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க யாருடைய அனுமதியும் தேவையில்லை. ஆனால், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து இலங்கை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ராஜபக்‌ஷே கூறியிருக்கிறார். அதை மறுத்து, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க நாடாளுமன்றத்தின் அனுமதி தேவையில்லை; 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படி நேரடியாக அதிகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, இலங்கையை குர்ஷித் பணிய வைத்திருக்க வேண்டும். ஆனால், அவரோ ராஜபக்‌ஷே கூறியதற்கு தலையாட்டிவிட்டு வந்திருக்கிறார். இதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி, இந்தியாவின் இறையாண்மைக்கும் குர்ஷித் துரோகம் செய்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்திலும் இலங்கையை அவர் கண்டிக்கவில்லை. மாறாக, தமிழக மீனவர்கள் பேராசையுடன் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கை கடல் வளங்களையும், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிப்பதாக குற்றஞ்சாற்றியிருக்கிறார். இந்திய அமைச்சராக இருந்து, தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டிய சல்மான் குர்ஷித், சிங்கள அமைச்சரைப் போல கருதிக்கொண்டு, தமிழக மீனவர்களை விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது. மொத்தத்தில் சல்மான் குர்ஷித்தின் இலங்கைப் பயணம் தோல்வியடைந்துவிட்டது.

தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு சொந்தமானது என்றும், அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கூடாது என்றும் தடை விதித்த சல்மான் குர்ஷித் தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது தவறு தான். தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத சல்மான் குர்ஷித்திற்கும், மத்திய அரசுக்கும் தமிழக மக்கள் சரியான நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x