Last Updated : 21 Jun, 2016 12:45 PM

 

Published : 21 Jun 2016 12:45 PM
Last Updated : 21 Jun 2016 12:45 PM

திருவாரூரில் 2 முறை ரத்தானது கருணாநிதி நன்றி அறிவிப்பு கூட்டம்: ராசி சென்டிமென்ட் காரணமா?

திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கும் நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம் 2 முறை ரத்து செய்யப்பட்டதற்கு, ராசி இல்லாத இடத்தில் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதுதான் காரணம் என்று கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2011-ல் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக தலைவர் கருணாநிதி, கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலிலும், 2-வது முறையாக அதேதொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தமிழகத்திலேயே அதிக வாக்குகள் (68,366) வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, திருவாரூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுக் கூட்டம் நடத்தவும், அதில் கருணாநிதி பங்கேற்றுப் பேசவும் திமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக, திருவாரூர்-தஞ்சை சாலையில் உள்ள வன்மீகபுரத்தில், தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணி கடந்த 2 வாரங்களாக நடைபெற்றது.

கடந்த 11-ம் தேதி நன்றி அறிவிப்புக் கூட்டம் உத்தேசிக்கப்பட்டது. அப்போது நடத்த முடியாத சூழலில், நேற்று (ஜூன் 20) நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திலேயே கருணாநிதி பங்கேற்காத நிலையில், திருவாரூர் கூட்டத்தில் பங்கேற்பதும் நிச்சயமில்லை என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தார்களாம். இதனால், பந்தல் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

திருவாரூரில் கருணாநிதி பங்கேற்கும் கூட்டங்கள், வழக்கமாக தெற்குவீதியில்தான் நடைபெறும். ஆனால், சொந்த மண்ணான திருவாரூரில் 2 முறை போட்டியிட்டு வென்றும், ஆட்சி அமைக்க முடியாததால், ‘கருணாநிதிக்கு திருவாரூர் ராசியில்லை’ என திமுக-வினர் வெளிப்படையாகவே பேசத் தொடங்கினர்.

இதனால், பொதுக்கூட் டத்தையும் இம்முறை தெற்கு வீதியில் இருந்து வேறு இடத்தில் நடத்த முடிவு செய்தனர். அதற்காகத்தான் வன்மீகபுரம் தேர்வு செய்யப்பட்டது. எனினும், பொதுக் கூட்டத்துக்கான தேதிகள் அடுத்தடுத்து ரத்தானது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திருவாரூரைச் சேர்ந்த திமுக நிர்வாகி கூறும்போது, “கருணாநிதியை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த திருவாரூர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, தலைமையிடம் அனுமதி கேட்கப்பட்டது. முதலில் 11-ம் தேதியும், பின்னர் 20-ம் தேதியும் கருணாநிதி வரலாம் எனக் கருதி, பணியைத் தொடங்கினோம்.

ஆனால், மீண்டும் மீண்டும் தலைவர் வருகை ரத்தாகிறது. எனவே, அவரது வருகையை தலைமைக் கழகம் அறிவித்தால் அதன்படி நாங்கள் செயல்படுவோம். வன்மீகபுரத்தில் நாள் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்த இடமுண்டு என்பதால்தான், அங்கு பொதுக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டோம். இடம், ராசி சென்டிமென்ட் என்பதெல்லாம் திமுகவுக்கு ஏற்புடையதல்ல” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x