Published : 09 Mar 2017 10:06 AM
Last Updated : 09 Mar 2017 10:06 AM
கோவையில் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. தற்போது கேரள சிறுவாணி அணையிலிருந்து புதிய ஒப்பந்தம் மூலம் தண்ணீர் எடுக்கப்படுவதால் லாரி மூலம் தண்ணீர் விநியோகிப்பது குறைந்துள்ளது.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், சிறுவாணி, பில்லூர், ஆழியாறு குடிநீர்த் திட்டங்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக சிறுவாணி அணையிலிருந்து தமிழகத்துக்கு குடிநீர் எடுக்கப்படும் பகுதியில் இருந்த நீர்நிலை முற்றிலும் வறண்டது.
எனவே, சிறுவாணியிலிருந்து தண்ணீர் எடுப்பது இரு மாதங்களுக்கு முன் முற்றிலும் தடைபட்டது. அதற்கு மாற்றாக பில்லூர் தண்ணீர் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனினும், பவானியிலும் தண்ணீர் இல்லாத நிலை நீடித்தது. எனவே 12 நாட்களுக்கு ஒருமுறை நகரில் குடிநீர் வழங்குவதை முறைப்படுத்தியது மாநகராட்சி. மேலும், ஒரு மணி நேரம், அரை மணி நேரம் மட்டுமே தண்ணீர் விடப்பட்டது.
இதனால், குடிநீர் கோரி பல இடங்களிலும் மக்கள் போராடும் நிலை உருவானது. எங்கெல்லாம் தண்ணீர் கேட்டு மக்கள் பிரச்சினை செய்கிறார்களோ, அங்கு அவ்வப்போது லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இதனால் 24 மணி நேரமும் குடிநீர் லாரிகள் செயல்பட்டன.
மாநகராட்சிக்குச் சொந்தமான லாரிகள் மட்டுமின்றி, தனியார் லாரிகளும் ஒப்பந்த முறையில் இயக்கப்பட்டன. முன்பு கோவையில் குடிநீர்க் குழாய்கள் இல்லாத சில வார்டுகளில் மட்டுமே லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. அப்போது, மாநகராட்சி லாரிகளே பெரும்பாலும் இயங்காமல் நிறுத்தப்பட்டிருக்கும். தேவைப்பட்டால் மட்டும் தனியார் லாரிகளை அழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
திடீரென்று ஏற்பட்ட குடிநீர்த் தட்டுப்பாட்டால் ஒரு நாளைக்கு 25 முதல் 30 லாரிகள் வரை, சுமார் 18 மணி நேரம் இயங்கும் நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு லாரியும் 6 முதல் 10 முறை குடிநீர் சப்ளை செய்தன.
இந்த சூழ்நிலையில், கேரள அதிகாரிகளுடன் சிறுவாணி நீருக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர் தமிழக அதிகாரிகள்.
சிறுவாணியில் தமிழகத்துக்கான மூன்று வால்வுகள் உள்ள நீரேற்று நிலையப் பகுதியில் தண்ணீர் வறண்டு விட்டதால், அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள கேரளாவின் பிரதான அணையிலிருந்து நீர் எடுக்கவும், அதற்குப் பதிலாக ஆழியாறு நீரை மணக்கடவு அணையின் மூலம் விநியோகிப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கம்.
அதன்படி, கேரளப் பகுதியின் சிறுவாணி அணையிலிருந்து தினமும் 2.50 கோடி முதல் 3 கோடி லிட்டர் நீர் தமிழகத் தேவைக்காக எடுத்துக் கொள்ளவும், அதற்குப் பதிலாக ஆழியாறு தண்ணீரை மணக்கடவு அணையின் மூலம் தரவும் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது.
மணக்கடவு அணை மூலம் ஏற்கெனவே ஆழியாறில் இருந்து 185 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு, அதில் 95 கனஅடி நீரை கேரளா எடுத்துக் கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அது தற்போது 290 கனஅடி திறப்பு, 225 கனஅடி எடுத்துக் கொள்வது என மாற்றப்பட்டது.
இதனால் சிறுவாணியின் பிரதான அணையிலிருந்து நீர் தொடர்ந்து எடுக்கப்பட்டு, கோவை மாநகருக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணியின் வழியோரப் பகுதிகளில் உள்ள 5 வார்டுகளுக்கும் முழுமையாக சிறுவாணி குடிநீர் விநியோகம் நடப்பதால், லாரி நீரின் தேவை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலர் ஒருவர் ‘தி இந்து’விடம் கூறும்போது, “சிறுவாணி குடிநீர் சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கோவைக்கு பாரதி பார்க் மேல்நிலைத் தொட்டிக்கு வந்து சேருகிறது. தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்ட பின்னர், நகரெங்கும் விநியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி நீர் தமிழகப் பகுதியில் முற்றிலும் வறண்டதால், கோவையில் சிறுவாணி விநியோகம் நடக்கும் பழைய நகராட்சிப் பகுதிகளுக்கு பில்லூர் தண்ணீரை விநியோகம் செய்யும் பணி நடைபெற்றது.
அந்த வகையில் சாடிவயலிலிருந்து பாரதிபார்க்குக்கு சிறுவாணி நீர் வரும் வழியில் உள்ள மாநகராட்சியின் 5 வார்டுகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஏற்கெனவே குனியமுத்தூரில் 2 வார்டுகளுக்கு லாரிகளில் தண்ணீர் விநியோகம் நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில், இந்த 5 வார்டுகளுக்கும் லாரி மூலமே தண்ணீர் விநியோகிக்கும் நிலை ஏற்பட்டது.
அதனால் 24 மணி நேரமும் 25-க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் விநியோகம் செய்யும் நிலை ஏற்பட்டது. அதுதவிர, எங்கெல்லாம் தண்ணீர் கோரி மக்கள் பிரச்சினை செய்கிறார்களோ, அவர்களுக்கும் அவசரத் தேவை கருதி லாரி மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது.
கடந்த 15 நாட்களுக்கு மேலாக கேரள அதிகாரிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி கேரளா சிறுவாணி அணைப் பகுதியிலிருந்து மோட்டார் மூலம் தினமும் 15 எம்.எல்.டி. அளவுக்கு நீர் எடுப்பதால், தற்போது சிறுவாணி நீரை போதுமான அளவுக்கு விநியோகிக்க முடிகிறது. எனவே, தற்போது லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிப்பது குறைந்துள்ளது.
குனியமுத்தூர் பகுதியில் உள்ள 2 வார்டுகள் மற்றும் குழாய்கள் பழுதடைந்த இடங்களில் மட்டும் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அந்தவகையில், மாநகராட்சியின் 8 லாரிகளும், தனியாரின் 10 லாரிகளும் மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது” என்றனர்.
சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகராட்சிக்கு குடிநீர் எடுக்கும் பகுதி. (கோப்பு படம்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT