Published : 11 Nov 2014 10:28 AM
Last Updated : 11 Nov 2014 10:28 AM

ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார்: தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா அறிவிப்பு

ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தத் தயாராக இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து ஜெயலலிதாவின் முதல்வர் பதவியும் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் பறிபோனது. இதையடுத்து, அவர் வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை கோட்டையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று கூறியதாவது:

நீதிமன்றத் தீர்ப்பு வந்த செப்டம்பர் 27-ம் தேதியில் இருந்து ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக உள்ளதாக கடந்த 8-ம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் தகவல் அனுப்பியுள்ளார். மற்றொரு நகல் கடிதத்தை எனக்கு அனுப்பி யுள்ளார். இந்தத் தகவலை நானும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப் பியுள்ளேன். இதுதொடர்பாக அடுத்த அறிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். தேர்தல் நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

வாக்காளர் சுருக்கமுறை திருத்தம் இன்றுடன் (திங்கள்) நிறைவு பெறுகிறது. இந்த ஆண்டில் கடந்த 6-ம் தேதி வரை மொத்தம் 13 லட்சத்து 77 ஆயிரத்து 861 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக திருவள்ளூர், கோவை, காஞ்சிபுரம் மாவட்டங் களில் தலா 1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சென்னை யில் 92 ஆயிரம், திருச்சியில் 53 ஆயிரம், சேலத்தில் 52 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களைக் கொண்டு விண்ணப்பங்களில் உள்ள தகவல்களை சரிபார்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதிக்கு மேல் வெளியிடப்படும்.

போலி வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க 100 சதவீதம் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்படுகின்றன. வண்ண வாக்காளர் அட்டை வழங்கும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.

ஸ்ரீரங்கம் தொகுதியில் அக்டோபர் 15-ம் தேதி நிலவரப்படி மொத்தம் 2,63,570 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு ஆண்களை (1,29,912 பேர்) விட பெண் வாக்காளர்களே (1,33,645) அதிகம். மற்றவர்கள் 13 பேர் உள்ளனர். புதிய வாக்காளர் பட்டியலில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x