Published : 17 Oct 2013 10:15 AM
Last Updated : 17 Oct 2013 10:15 AM
முதல் மக்களவைத் தேர்தலை சந்திக்க உள்ளது புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி. ஆதரவு கேட்டு வந்த பாமகவுடனான பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. தங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை களத்தில் இறக்க என்ஆர். காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் அருகிலிருந்தாலும் முற்றிலும் மாறுபட்ட அரசியல் களம் கொண்டது புதுச்சேரி. கடந்த 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக உள்ளிட்ட 17 கட்சிகள், அமைப்புகள் ஆகியற்றுடன் மெகா கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுக-கம்யூனிஸ்ட் கூட்டணியில் போட்டியிட்ட பாமகவுக்கும் இடையில் நேரடி போட்டி நிலவியது. இத்தேர்தலில் 91,772 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மத்திய இணையமைச்சரானார் நாராயணசாமி.
மக்களவைத் தேர்தலுக்கு பிறகு புதுச்சேரி அரசியலில் பல திருப்பங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக்கட்சியாக என்.ஆர். காங்கிரஸ் தொடங்கினார் ரங்கசாமி. அத்துடன் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இல்லை. அதேபோல் மறுகூட்டணியில் இருந்த பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அதிமுக ஆகியவையும் தனித்தனியாகின.
அடுத்து வந்த சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வென்றது. ஆனால், ரங்கசாமி, ஜெயலலிதாவை சந்திக்காமல் இருந்ததுடன், தனியாக ஆட்சியும் அமைத்தார். இதனால், இக்கூட்டணி முடிவுக்கு வந்தது.
தற்போது நிலவரப்படி என்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் புதுச்சேரியில் தனித்தனியாக உள்ளன.
ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு இது தலை (முதல்) மக்களவைத் தேர்தல் மட்டுமல்ல. தலையாய தேர்தலும் கூட. சட்டம் ஒழுங்கு பிரச்சினை, நிதி நெருக்கடி, எதிர்க்கட்சியினர் மட்டுமில்லாமல், தங்கள் கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டு, கடும் விலை உயர்வு, பல ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்காத நிலை, ஆளுநரின் நேரடி குற்றச்சாட்டுடன் கூடிய மோதல் என அடுக்கடுக்கான பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது ஆளும் அரசு.
குறிப்பாக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், முதல்வருக்கு அதிகாரம் தேவையென்றால் மாநில அந்தஸ்து தேவை என்ற கோஷத்தை முன்வைக்கும் முயற்சியில் உள்ளார் முதல்வர் ரங்கசாமி. அது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போகப்போகத்தான் தெரியும்.
கூட்டணி குறித்து வழக்கம்போல் மவுனமாகவே இருக்கும் முதல்வர் ரங்கசாமி, தற்போது மத்திய அரசுக்கு, மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு, ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளார். இதுவும் தேர்தலையொட்டிதான் என்கிறார்கள் பலர். இதுவும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலையை எடுப்போம் என பகிரங்கமாக அவர்களுக்கு உணர்த்துவதற்குதான் இந்த மவுன கலைப்பு.
இந்நிலையில் பாமக மாநில செயலர் அனந்தராமன் தலைமையில் நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை திடீரென்று செவ்வாய்க்கிழமை சந்தித்து மக்களவைத் தேர்தலுக்கு ஆதரவு கோரினர். இதனால் மீண்டும் பரபரப்பு கிளம்பியது.
புதன்கிழமை மாலை அன்புமணி ராமதாஸும், முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். ஆனால், அப்பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இத்தேர்தலில் தங்கள் வேட்பாளரை நிறுத்தப்போவதாக ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் தரப்பில் பேசுகையில், "கடந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாமக எதிரணியில் இருந்தது. கடந்த 2008ல் முதல்வராக ரங்கசாமி இருந்தபோது நடந்த சம்பவங்களையும், பாமகவின் அப்போதைய செயல்பாட்டையும் நாங்கள் மறக்கவில்லை" என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT