Published : 27 Sep 2013 12:23 PM
Last Updated : 27 Sep 2013 12:23 PM
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமைக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது.
இதற்காக வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒரு பட்டனை பொருத்த வேண்டும் என மத்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி சச்சார், பி.யூ.சி.எல் என அழைக்கப்படும் சிவில் உரிமைகளுக்கான மக்கள் அமைப்பு, ஜனநாயக சீர்திருத்த சங்கம் உட்பட பல அமைப்புகள் 2004-ல் தொடுத்த பொதுநல வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பான இந்த தீர்ப்பை நீதிபதி சதாசிவம் தலைமையில் நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் மற்றும் ரஞ்சனா கோகோய் அடங்கிய அமர்வு வழங்கியது.
நீதிபதிகளின் தீர்ப்பின் விவரம்: 'தேர்தலில் வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற எண்ணைத்தை வெளிப்படுத்தவும், போட்டியிடும் வேட்பாளர்களில் யாருக்கும் தன் வாக்கு இல்லை என முடிவு செய்யவும் ஒரு வாக்காளருக்கு உரிமை உண்டு. இது இந்திய ஜனநாயகத்தை மேலும் வளர்ப்பதுடன், ஒரு நல்ல நிர்வாகத்தை நாட்டில் கொண்டு வரவும் உதவியாக இருக்கும்.
இது, ஒரு நல்ல ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியம். 'வாக்களிப்பது மற்றும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பது ஆகிய இரு உரிமைகளுக்கு இடையே எந்த வேறுபாட்டையும் நாம் காட்ட முடியாது. எனவே, வாக்களிக்கும் உரிமை குறித்து பிரசாரம் செய்யும் தேர்தல் ஆணையம், அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்று தீர்ப்பில் உள்ளது.
முன்னதாக வேட்பாளர் நிராகரி்ப்பை எதிர்த்த தரப்பினர், ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்காகத்தான் தேர்தல் என்பதே நடத்தப்படுகிறது: எனவே, வாக்காளர்கள் கண்டிப்பாக யாராவது ஒருவரை தேர்ந்தெடுக்கத்தான் வேண்டும் என உத்தரவிடக் கோரினர்.
இதை உடனடியாக நிராகரித்த நீதிமன்ற அமர்வு, பிடிக்காத வேட்பாளரை நிராகரிக்கும் முறை உலகின் 13 நாடுகளின் நடைமுறையில் உள்ளது என சுட்டிக் காட்டியதுடன், நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பில் மட்டும் வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கு நிராகரிக்கும் உரிமை கொடுக்கப்படும்போது, அதை சாதாரண பொதுமக்களுக்கும் கொடுப்பதில் தவறு இல்லை எனக் கருத்து கூறியது.
இத்துடன், நாடாளுமன்றத்தில் உள்ளது போலவே 'இதில் யாருக்கும் ஓட்டு இல்லை" என அடுத்து வரும் தேர்தல்களில் ஒரு பட்டனை வாக்களிக்கும் எந்திரத்தில் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
முக்கிய மனுதாரர்களில் ஒருவரான பி.யூ.சி.எல். வழக்கறிஞர் சஞ்சய் பாரீக் கூறும்போது, "நான் கூட பல முறை வாக்களிக்க விருப்பம் இல்லாமல் தேர்தல் நாளில் வீட்டிலேயே இருந்திருக்கிறேன். இனி அந்த நிலை யாருக்கும் வராது. கட்டாயமாக தேர்தல் நாளன்று வாக்குச் சாவடி சென்று, போட்டியிடும் வேட்பாளர்களில் யாரும் விருப்பம் இல்லை எனக் கருதினால் கடைசியாக இருக்கும் 'யாருக்கும் ஓட்டு இல்லை" என்ற பட்டனை அமுக்கி விட்டு நிம்மதியாக திரும்பி வரலாம்.
இந்தத் தீர்ப்பின் மூலம் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் கிரிமினல் குற்றம் புரியாத, நேர்மையான, சமூகத்தில் நல்ல அந்தஸ்து கொண்ட வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிட வைக்கும்" என்றார் அவர்.
இந்தத் தீர்ப்பை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிட்ட தேர்தல் ஆணையம், அடுத்த ஒரு சில மாதங்களில் நடக்கவிருக்கும் தில்லி, மிசோராம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் அமலாக்க உள்ளது. இதன் ஆயத்தப் பணிகளுக்காக 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு தள்ளி போகவும் வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT