Published : 14 Feb 2017 10:10 AM
Last Updated : 14 Feb 2017 10:10 AM

பிப்.14-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. | முழு விவரம் > > சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள்: 4 ஆண்டுகள் சிறை; ரூ.10 கோடி அபராதம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு|

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

அதிமுக உட்கட்சி குழப்பம் உக்கிரமடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், தமிழக அரசியலில் நிகழ்ந்து வரும் பல்வேறு திருப்பங்களின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை >ரெஃப்ரஷ் செய்க)

நிகழ்நேரப் பதிவு நிறைவடைகிறது!

9.50 pm:இருகரங்களாக நானும் முதல்வரும் சேர்ந்து செயல்படுவோம்: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா

முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதா அண்ணன் மகளும் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திச் சந்தித்தனர்.

சந்தித்த பிறகு தீபா செய்தியாளர்களிடையே கூறும்போது, “எனது அரசியல் பிரவேசம் இன்று தொடங்குகிறது. சசிகலா செல்ல வேண்டிய இடத்துக்கே சென்றுள்ளார். அதிமுகவின் இருகரங்களாக நானும் முதல்வரும் சேர்ந்து செயல்படுவோம்.

பன்னீர்செல்வம் நீதி கேட்டார். நான் அவருக்கு எனது ஆதரவை அளிக்கிறேன்” என்றார்.

9.38pm: கூவத்தூரிலிருந்து போயஸ் இல்லம் புறப்பட்டார் சசிகலா

9.35pm: ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் உள்ளனர்.

9.20pm: ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த மெரினா செல்கிறார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

7.25 pm: ஆளுநர் மாளிகைக்கு காவல்துறை தலைவர் டிஜிபி சென்று ஆளுநரை சந்திக்கிறார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து அவர் விவாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6:17 pm: ஓபிஎஸ் சார்பில் இரவு 7 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் மைத்ரேயன் எம்.பி. மைத்ரேயனுடன் மனோஜ் பாண்டியனும் ஆளுநரசை சந்திக்க உள்ளார்.

5.38 pm: ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. அதற்குப் பிறகு அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

05.07 pm: ஆளுநர் மாளிகை வந்தார் அதிமுக சட்டமன்றக் குழுத்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

4.57 pm: கூவத்தூரில் 144 தடை உத்தரவால், அருகில் உள்ள சுற்றுவட்டாரக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. கூவத்தூர் வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதைகளில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4.43 pm: கூவத்தூரில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், கோவளத்தில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

4.21 pm: 'சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்துவதே சரியான தீர்வாக இருக்க முடியும். ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்' என்று பாஜக் செய்திச் செயலர் ஹச்.ராஜா தெரிவித்துள்ளார்.

4.00 pm: நேரம் ஒதுக்கப்பட்டதையடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கிறார் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி. அப்போது ஆட்சி அமைக்க அவர் உரிமை கோருகிறார். பழனிச்சாமியுடன் 12 எம்.எல்.ஏ.க்கள் செல்கின்றனர். அவர்கள் அனைவரும் கூவத்தூரில் இருந்து புறப்பட்டனர்.

3.50 pm: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

3.30 pm: காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாதரண சூழல் நிலவுவதால் கல்பாக்கம் முதல் கூவத்தூர் பேட்டை வரையிலான பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 5-ம் தேதி முதல் கூவத்தூரில் உள்ள ஒரு சொகுசு விடுதியில்தான் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. | முழு விவரம் > >கூவத்தூரில் 144 தடை உத்தரவு அமல்

3.15 pm: அதிமுக பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் மு.க.ஸ்டாலினை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதே அரசியல் சட்ட நடைமுறைப்படி சரியான நிலைப்பாடாக இருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

3.00 pm: ஜெயலலிதா குற்றமற்றவர் என்று இத்தீர்ப்பு கூறவில்லை. எனவே, அவருக்கென வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு மேலும் தொடர்வது, ஜனநாயகத்திற்குப் பாதுகாப்பானதாக அமையாது. இந்நிலையில், அடுத்து பொதுத்தேர்தலை நடத்துவதுதான் தீர்வாக அமையும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். > | தற்போது பொதுத்தேர்தல்தான் தீர்வு: திருமாவளவன் |

2.48 pm: 'நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. மக்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது' என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். | > சசிகலா சிறை செல்வதை அதிமுகவின் உண்மை தொண்டர்கள் வரவேற்றுள்ளனர்: ஜெ.தீபா |

சசிகலா தீர்ப்பைக் கேட்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடும் தீபா ஆதரவாளர்கள்

2.29 pm: 'ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கூவத்தூருக்கு வந்து, சட்ட ஒழுங்கில் பிரச்சினைகளை ஏற்படுத்தத் திட்டமிடுகின்றனர். இதுகுறித்து நாங்கள் ஆளுநர், டிஜிபி மற்றும் உள்துறை செயலருக்குத் தெரிவித்துள்ளோம்' என்று எம்பி நவநீத கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2.16 pm: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவளித்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் கட்சியின் அடிப்படைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார். அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் நீக்கப்படவில்லை.

பொன்னையன், பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1.42 pm: 'ஆளுநர் பொறுமை காத்ததற்கான பதில் கிடைத்துள்ளது. அவர் தமிழகத்தை குழப்பத்தில் இருந்து மீட்டுள்ளார்' என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1.35 pm: 'சசிகலாவை ஆதரித்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். எம்எல்ஏக்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்' என்று பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

1.17 pm: 'சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் என்னை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம். அவரின் அழைப்புக்காகக் காத்திருக்கிறோம்' என்று அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

1.08 pm: 'அம்மாவின் கனவான கழக ஆட்சி அமைய உள்ளது. நீக்கப்பட்ட ஓ.பி.எஸ். தவிர அனைவரும் வாரீர்' என்று அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1.02 pm: விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க, ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் அமைச்சர் பாண்டியராஜன் கூவத்தூர் செல்கிறார்.

12.41 pm: தமிழக பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் கூட நீக்கப்பட்டுள்ளார். | முழு விவரம் > >ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்

12.38 pm: அதிமுகவின் புதிய சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். | முழு விவரம் > >அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

12.27 pm: 'தற்காலிக மனக்கசப்பை மறந்து ஒற்றுமையாக செயல்படுவோம். எதிரிகள் பிளவு ஏற்படக் காத்திருக்கின்றனர். எம்எல்ஏக்கள், தொண்டர்கள் ஒன்றுபட்டு கட்சிக்கு ஊறு நேராமல் காக்க வேண்டும்' என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். | முழு விவரம் > >மனக்கசப்பை மறந்து ஒற்றுமையாக செயல்படுவோம்: அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு ஓபிஎஸ் அழைப்பு

12.24 pm: 'பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடம்' என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். | முழு விவரம் > >பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடம்: வாசன்

12.20 pm: அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா மீதான மேல்முறையீட்டு சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில், ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். | முழு விவரம் > >சசிகலா குற்றவாளி: கொண்டாட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்

சேலத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள். படம்: எஸ்.குருபிரசாத்

12.11 pm: 'தமிழக மக்களுக்கு சிறந்த காதலர் தின பரிசை உச்சநீதிமன்றம் தந்துள்ளது' என்று குஷ்பு தெரிவித்துள்ளார். | முழு விவரம் > >தமிழக மக்களுக்கு சிறந்த காதலர் தின பரிசு: தீர்ப்பு குறித்து குஷ்பு கருத்து

12.03 pm: கூவத்தூரில் சசிகலா 125 எம்எல்ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

12.00 pm: சொத்துக்குவிப்பு வழக்கு மீதான தீர்ப்பின் மூலம் சசிகலா முதல்வராகக் கூடிய பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். | முழு விவரம் > >சசிகலா முதல்வராகக் கூடிய பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியது: ராமதாஸ்

11.57 am: 'உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் சசிகலாவின் கனவு தகர்ந்தது' என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கூறியுள்ளார்.

11.51 am: 'மக்களின் விருப்பத்திற்கேற்ப, தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்' என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

11.40 am: மேட்டூர் எம்எல்ஏ சின்னராஜ் ஓபிஎஸ் அணிக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் 10 எம்எல்ஏக்கள் உள்ளனர். | முழு விவரம் > >ஓ.பன்னீர்செல்வத்துக்கு எம்.எல்.ஏக்களின் பலம் 10 ஆக உயர்வு: சின்னராஜ் நேரில் ஆதரவு

11.31 am: 'அம்மாவிற்கு எப்போது எல்லாம் துன்பம் வருகிறதோ அப்போதெல்லாம் அதைத் தன்மீது ஏற்றுகொண்டவர். இப்போதும் அதைச் செய்கிறார். தர்மமே வெல்லும்' என்று அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11.23 am: '21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகள் பொதுவாழ்வில் எப்படி இருக்கவேண்டும் என்பதை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு தெரிவித்துள்ளது' என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | முழு விவரம் > >21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது: ஸ்டாலின் கருத்து

11.16 am: கூவத்தூர் விடுதி தற்போது காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஓபிஎஸ் அவரின் இல்லத்திலும், செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். | முழு விவரம் > >உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: காவல்துறையின் கட்டுப்பாட்டில் கூவத்தூர் சொகுசு விடுதி

கூவத்தூர் விடுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்.

11.01 am: சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ள கூவத்தூர் விடுதிக்குள் காவல்துறை நுழைந்துள்ளது.

கூவத்தூரில் காவல்துறை வாகனங்கள் நுழையும் வீடியோ காட்சி:



— Udhav Naig (@udhavn) >February 14, 2017
x