Published : 13 Mar 2014 07:43 PM
Last Updated : 13 Mar 2014 07:43 PM

ஆ.ராசா, தயாநிதி மாறனுக்கு வாய்ப்பு: கருணாநிதி மீது ஜெயலலிதா சாடல்

மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதி மாறனை திமுக களமிறக்கி இருப்பதற்கு, அக்கட்சியின் தலைவர் கருணாநிதியை தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கடுமையாக விமர்சித்தார்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவை அறிமுகம் செய்து வைத்து, பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று பேசியது:

எந்த ஒரு திட்டத்தாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதே எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் கொள்கை. எனவே, விவசாயிகளிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதன்

அடிப்படையில் தமிழக விவசாயிகளின் வேளாண் நிலங்கள் பாதிக்காத வகையில் நெடுஞ்சாலைகளின் ஓரமாக குழாய்கள் பதிக்க கெயில் நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று நாங்கள் முடிவெடுத்தோம்.

இது மட்டுமல்லாமல், ஏற்கெனவே கெயில் நிறுவனத்தால் விவசாய நிலங்களில் பதிக்கப்பட்ட குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும்

என்றும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. தமிழக அரசின் முடிவுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன. தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய் பதிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கெயில் நிறுவனத்தை கேட்டுக் கொண்டோம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நமக்கு சாதகமான உத்தரவு கிடைக்கப் பெறவில்லை. எனவே. எனது தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ளது. உச்ச நீதிமன்றம் தற்போதுள்ள நிலை தொடர உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணிகளை கெயில் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மற்ற மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை வழியாக எரிவாயு குழாய்களை கெயில் நிறுவனம் எடுத்துச் செல்லும் போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இது சாத்தியமில்லை? மற்ற மாநிலங்களுக்கு ஒரு நீதி, தமிழ் நாட்டிற்கு ஒரு நீதியா? இப்படி தமிழக விவசாயிகளுக்கு மட்டும் எதிராக செயல்படும் மத்திய காங்கிரஸ் அரசுக்கு வரும் தேர்தலில் நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மீனவர்களை விடுத்தால் மட்டுமே பேச்சு

தமிழக - இலங்கை மீனவர்கள் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை 27.1.2014 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னர் இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்று கொழும்புவில் நடைபெறுவதாக இருந்தது.

இந்த பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்ளும் வகையில், தற்போது இலங்கை சிறையில் உள்ள 177 தமிழக மீனவர்களையும், 44 படகுகளையும் கண்டிப்பாக இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நான் கோரியிருந்தேன். என்னுடைய தொடர் வற்புறுத்தல் மற்றும் நிபந்தனை காரணமாக இலங்கை அரசு 116 மீனவர்களையும், 26 படகுகளையும் நேற்று

விடுவித்துள்ளது. இன்னமும் 61 மீனவர்களும், 18 படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும். இந்த 61 மீனவர்களையும், 18 படகுகளையும் விடுவித்தால் தான் அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்று மத்திய அரசிடம் தெரிவிக்கும்படி நான் உத்தரவிட்டேன்.

எனது உத்தரவினை அடுத்து தமிழக அரசின் கருத்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது. எனவே, அனைத்து மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கும் வகையில் தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையேயான அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதியை மாற்றி அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனது தீவிர முயற்சியின் காரணமாக, அனைத்து தமிழக மீனவர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள். அதன் பின்னர், இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறும் நாள் முடிவு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின் பிரச்சினை

மத்தியிலும் மாநிலத்திலும் தான் ஆட்சியில் இருந்த காலத்தில் அனைத்து மின் திட்டங்களையும் அதோகதியில் விட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி, இப்போது மும்முரமாக நடைபெற்று வரும் மின் திட்டங்களின் கதியை பற்றி வினவியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. தமிழக மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் முனைப்பு காட்டாத தி.மு.க-விற்கும், புதிய மின் திட்டங்களுக்கான அனுமதிகளுக்கு அனுமதி மறுத்தும், கால தாமதம் செய்தும் வஞ்சிக்கின்ற மத்திய அரசை நடத்தும் காங்கிரஸ் கட்சிக்கும், நீங்கள் வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மாற்றாந்தாய் போக்கினையும், அதற்கு துணை போகும் தி.மு.க-வின் சதித் திட்டங்களையும் மீறி, தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

திமுகவில் ஆ.ராசா, தயாநிதி மாறனுக்கு வாய்ப்பு...

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்பது தான் காங்கிரஸ் ஆட்சியின் தாரக மந்திரம். 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டை நடத்தியதில் ஊழல், விமானங்களுக்கான என்ஜின் வாங்கியதில் ஊழல் என ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நடத்தியது தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து தூக்கி எறிவது நம் எல்லோருடைய கடமை ஆகும்.

இன்று, இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் பேசப்படும் பிரச்சனை ஊழல் பிரச்சனை. இந்த ஊழலில் தான் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு திளைத்துக் கொண்டிருக்கிறது. மத்திய காங்கிரஸ் அரசு செய்த பல்வேறு ஊழல்களில் மிகப் பெரும் ஊழல் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல். இந்த ஊழலில் ஆ.ராசா மீது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நீதிமன்ற விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த ஊழல் காங்கிரஸ் ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்பதே பொதுமக்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது. பொதுமக்களின் இந்தக் கருத்திற்கு முற்றிலும் முரணான வகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் சிக்கியுள்ள ஆ.ராசாவை, நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதே போன்று தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வைத்து, பின்னர் மேக்ஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனத்தின் மூலம் சன் குழுமத்தில் 675 கோடி ரூபாய் முதலீடு

செய்ய வழி வகுத்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் தயாநிதி மாறன். பி.எஸ்.என்.எல்.-லின் 300 தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக தனது வீட்டில் ஏற்படுத்திக் கொண்டவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் தயாநிதி மாறன். இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தயாநிதி மாறனை மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவித்திருக்கிறார் கருணாநிதி.

இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, கருணாநிநிதி என்ன சொன்னார் தெரியுமா? "போடப்பட்ட வழக்குகள் எல்லாம் இப்போது ஆடிக் கொண்டிருக்கின்றன. அந்த வழக்குகளை நிரூபிக்கக் கூடிய சாட்சிகள் இல்லை என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது" என்று கூறி உள்ளார் கருணாநிதி. அதாவது, அவர்கள் ஊழல் புரியவில்லை என்று அவர் சொல்லவில்லை. சாட்சிகள் இல்லை என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி. சாட்சிகள் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது என்றால் என்ன பொருள்? ஊழல் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனுமதி கொடுத்ததை நியாயப்படுத்தி பேசி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார் கருணாநிதி. இப்படிப்பட்ட தி.மு.க-விற்கு வருகின்ற மக்களவைத் தேர்தலில் நீங்கள் மறக்க முடியாத பாடத்தை கற்பிக்க வேண்டும்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இன்று பல கட்சிகள் களம் இறங்கியுள்ளன. வேறு கட்சிக்கு நீங்கள் வாக்களித்தால் ஆகப் போவது எதுவுமில்லை. வாக்குகள் சிதறிவிடும். அவ்வளவு தான். அந்தக் கட்சிகளும் வெற்றிபெற முடியாது. எனவே, உங்கள் வாக்குகளை வீணாக்கிவிடாதீர்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் வாக்களித்தால் மத்தியிலே இந்தியாவை வல்லரசாக்கக் கூடிய ஒரு வலிமையான ஆட்சி அமையும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் பெறும் ஆட்சி மத்தியிலே அமைந்தால், இந்த நாட்டு மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். உங்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும். தமிழ்நாடு வளம் பெறும் என்பதை மறந்துவிடாதீர்கள்" என்றார் ஜெயலலிதா.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x