Last Updated : 25 Apr, 2017 05:51 PM

 

Published : 25 Apr 2017 05:51 PM
Last Updated : 25 Apr 2017 05:51 PM

பீட்டாவுக்கு ஆதரவாக கிரண்பேடி ட்வீட்: ஆளுநர் மாளிகையில் அசைவு உணவு நிறுத்தம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் அசைவ உணவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக பீட்டாவுக்கு ஆதரவாக ஆளுநர் கிரண்பேடி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதன்படி அரசு உணவகத்தில் அசைவ உணவு வழங்குவதை நிறுத்தி விடலாமா என்றும் உணவு மூலம் பிரச்சினை உருவாக திட்டமிடப்படுவதாக காங்கிரஸ் சந்தேகம் கிளப்பியுள்ளது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (செவ்வாய்க்கிழமை) ட்விட்டரில் அரசு நிகழ்ச்சிகளில் அசைவ உணவு கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்று பீட்டா தன்னார்வ அமைப்பு பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளதை வெளியிட்டு, தனது கருத்தையும் பதிவு செய்துள்ளார். அதில் புதுச்சேரி ராஜ்நிவாஸில் ஏற்கனவே அசைவ உணவு கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ, கூறுகையில், "தமிழர்களுக்கு எதிரான அமைப்பாக செயல்படும் பீட்டா அமைப்பின் கவுரவ தலைவராக கிரண்பேடி உள்ளார். மக்கள் எது சாப்பிடலாம், எது சாப்பிட கூடாது என்பது தனி மனித சுதந்திரம். இதைத்தான் சாப்பிட வேண்டும் என்பதை நாட்டின் கொள்கையாக மாற்றுவது சுதந்திர நாட்டிற்கானது இல்லை. புதுச்சேரியில் அரசு உணவகமான சீகல்ஸில் அசைவ உணவுகள் கொடுக்கப்படுகிறது. இவரது கொள்கையை ஏற்று சீகல்ஸ் உணவகத்தை மூடிவிடலாமா என்று கேள்வி எழுப்பினார்.

கூடுதல் பாதுகாப்பு:

புதுச்சேரியில் அரசுக்கு எதிராக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து விமர்சனம் செய்துவரும் வேளையில் ஆளுநர் மாளிகையான ராஜ் நிவாஸுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜ் நிவாசை சுற்றியுள்ள 4 சாலைகளிலும் வாகனம் செல்லாத வகையில் போலீஸார் தடுப்புகள் அதிகரித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "ஆளுநர் தத்தெடுத்த கிராமத்திலேயே அவரது நிகழ்வை மக்கள் புறக்கணித்துள்ளனர். அவர் செல்லும் இடங்களில் கேள்வி கேட்க தொடங்கியுள்ளனர். மேலும் கிரண்பேடிக்கு எதிராக போராட்டம் நடத்த கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது." என்று குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x