Published : 25 Dec 2013 10:36 PM
Last Updated : 25 Dec 2013 10:36 PM
'திமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறும் வாய்ப்பு ஏற்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்' என்று கருணாநிதி கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதி, நிருபர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
திமுக தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் உங்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறாரே?
அப்படி ஒன்றும் என்னிடம் கோரிக்கை வைக்கவில்லையே.
ஒரு கூட்டத்தில் பேசும்போது, திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற வேண்டுமென்றும், உங்கள் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டுமென்றும் பேசியிருக்கிறார். தே.மு.தி.க., தி.மு. கழகக் கூட்டணியில் இடம்பெற வேண்டுமென்று பேசியிருப்பதால், அப்படி அமைய வாய்ப்பு இருக்கிறதா?
அது அவருடைய நல்லெண்ணத்தின் அறிகுறி. அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
காங்கிரஸ் கட்சி பாராளுமன்றத் தேர்தலை மனதிலே கொண்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதைப் போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறதே, இது தேர்தலுக்காகச் செய்யப்படும் மாயையா?
தெரியாது.
நாகப்பட்டினத்தில் மீனவர் பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அதைப் பற்றிக் கவலைப்படாமல் மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு கூட்டுப் பயிற்சி நடத்துகிறது. மீனவர்களை வஞ்சிக்கின்ற காரியமாக இதைக் கருதலாமா?
தி.மு. கழகத்தின் சார்பில் நான் டி.ஆர். பாலுவை நாகப்பட்டினத்திற்கு அனுப்பினேன். அவர் அங்கே சென்று உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் பேசியிருக்கிறார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கருதுகிறேன். மத்திய அரசும் இது சம்பந்தமான முயற்சிகளை மேற் கொள்ளும் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் நிலவுகின்றன. இந்தப் பிரச்சினைகளையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல் முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாட்டிற்குச் சென்று விட்டாரே?
கொடநாட்டிற்கு அந்த அம்மையார் செல்வது என்பது வழக்கமான ஒன்று.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வாகனாவதி, அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் முன்னுக்குப் பின் முரணாகக் கூறியிருக்கிறார் என்று சொல்கிறார்களே?
அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல முரண்பாடுகளில் இதுவும் ஒன்றாகும். சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், அலைக் கற்றை ஒதுக்கீடு குறித்து அமைச்சரவைக் குழுவின் தலைவர், அன்றைய நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில், நிதித் துறை அமைச்சர் பிரணாப், முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, மற்றும் வழக்கறிஞர் வாகனாவதி ஆகியோரிடையே எந்த ஆலோசனையும் நடைபெற வில்லை என்றும், ஆனால் அப்படி ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக ஆ. ராசா பிரதமருக்குத் தவறான தகவலை அளித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தக் குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டதற்குப் பிறகு, பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் இருந்தே, அந்தக் கூட்டம் 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், (அலைக்கற்றை உரிமங்கள் வழங்கப்படுவதற்கு முன்பாக) நடைபெற்றதற்கான ஆதார ஆவணங்களை, ராசா முறைப்படிக் கேட்டுப் பெற்று; தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தோடு, சாட்சியம் அளிக்க வந்த அரசு வழக்கறி ஞரிடம், அந்தக் கூட்டம் நடைபெற்றது உண்மை தான் என்றும், ஆனால் தான் முன்பு சி.பி.ஐ. இடம் வாக்குமூலம் கொடுத்த போது, அதனை அவர் மறந்து விட்டதாகவும், நீதிமன்றத்தில் ராசா கேள்வி மூலமாகக் கேட்டு அரசு வழக்கறிஞரிடம் உண்மையைப் பெற்றுள்ளார்.
இதிலிருந்து மத்திய அரசின் வழக்கறிஞர் ஏற்கனவே சி.பி.ஐ.யிடம் தெரிவித்தது உண்மைக்கு மாறான தகவல் என்றும், அந்தத் தகவலைத்தான் சி.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் சேர்த்துள்ளது என்றும் தெளிவாகியுள்ளது. இதிலிருந்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகை உண்மைக்கு மாறான தகவல்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட ஒன்று என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT