Published : 16 Jun 2017 09:02 PM
Last Updated : 16 Jun 2017 09:02 PM
அரசுடன் ஆளுநர் இணைந்து செயல்படாத நிலையில், ஆளுநருக்கான அதிகாரங்கள் தொடர்பான சட்டத்தை மறுஆய்வு செய்ய புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்று ஆளுநர் தொடர்பான பிரச்சினையில் தனிநபர் தீர்மானத்தை அதிமுக கொண்டு வந்தது.
அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் அன்பழகன், '1963-ம் ஆண்டு ஒன்றியத்து ஆட்சிப்பரப்புகள் சட்டப்படி பல்வேறு அதிகாரங்கள் துணை நிலை ஆளுநருக்கு தரப்பட்டுள்ளன. இச்சட்டத்தை மறு ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உரிய அதிகாரங்களை வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தினர்.
முதல்வர் நாராயணசாமி பேசும்போது, 'புதுச்சேரி மாநில நிர்வாகத்தைப் பொறுத்தவரை, இந்திய அரசியலமைப்பு சட்டம் 239, 239ஏ, 240, யூனியன் பிரதேச சட்டம், நிர்வாகம் தொடர்பான விதிமுறை ஆகியவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக்கே அதிகாரம்
சட்டப்பேரவை என்று வரும்போது குடியரசுத் தலைவருக்கே அதிகாரமில்லை. அப்படியிருக்க அவரது ஏஜென்டுக்கு (ஆளுநர்) எப்படி அதிகாரம் வரும்? சட்டப்பேரவைக்குத்தான் அதிகாரமுண்டு.
நிர்வாகம் தொடர்பாக எந்த தகவல் வேண்டும் என்றாலும் ஆளுநர், துறையின் செயலருக்கு கடிதம் அனுப்ப வேண்டும். அதிகாரிகளை அழைத்துப் பேசுவது, பொதுமக்களிடம் குறைகேட்பது, காணொளி காட்சி நடத்துவது குறித்து விதிகளில் எதுவும் இல்லை. மக்கள் பிரதிநிதிகள்தான் மக்களிடம் செல்ல வேண்டும். சட்டப்பேரவை நிதி ஒதுக்கினால்தான் ஆளுநர் மாளிகைக்கு நிதி கிடைக்கும்.
ரகசிய காப்பு பிரமாணத்தின்படி அரசு ரகசியங்களை வெளியிடக்கூடாது. ஆனால் அதை மீறி சமூக வலைதளங்களில் ரகசியங்கள் வெளியிடப்படுகின்றன. பொதுப்பட்டியலின் படி துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. முதல்வரின் ஆலோசனைப்படி தான் செயல்பட வேண்டும். மாநில பட்டியல்படி முதல்வர், அமைச்சர்களுக்கு தான் அதிகாரம் உள்ளது. அமைச்சரவை முடிவுகளை ஆளுநர் ஏற்க வேண்டும்.
ஆளுநர் தன்னிச்சையாக அதிகாரத்தை மீறி செயல்படுகிறார். 3 முறை ஆளுநரை சந்தித்து பேசினேன். அமைச்சர்களை அழைத்து சென்றும் பேசினேன். அவர் பதிலளிக்கவில்லை. மக்களால் தேர்வான அரசு உரிமையை பறிக்க முயன்றார். அதை விட்டு தர மாட்டோம்' என்று அவர் பேசினார்.
ஏகமனதாக நிறைவேற்றம்
இதைத் தொடர்ந்து, தனிநபர் தீர்மானத்தை அரசு தீர்மானமாக அறிவித்த சபாநாயகர், துணைநிலை ஆளுநர் அதிகாரங்கள் சட்டத்தை மறுஆய்வு செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT