Published : 22 Nov 2014 09:02 AM
Last Updated : 22 Nov 2014 09:02 AM

‘ஹெல்த் விசிட்டர்ஸ்’ பதவிக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு: அதிகாரி மீது தாக்குதல்; அலுவலகம் சூறை

நீலகிரி மாவட்டத்தில் காச நோய் தடுப்புப் பிரிவில் ‘ஹெல்த் விசிட்டர்ஸ்’ பதவிக்கு, ஆட்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரித்தபோது, காச நோய் துணை இயக்குநரை பாதிக்கப்பட்டவர்கள் தாக்கியதுடன், சுகாதாரத் துறை இணை இயக்குநரின் அலுவலகமும் சூறையாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறையின்கீழ் இயங்கும் காச நோய் பிரிவில், பிரான்ஸ் நாட்டின் அமைப்பான ‘இன்டர்நேஷனல் யூனியன் அகேன்ஸ்ட் டி.பி. அண்ட் லங் டிசிசஸ்’ நிதியுதவியுடன், கடந்த 2011-ம் ஆண்டு முதல் ‘அக்ஷயா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலமாக மாவட்டம்தோறும் ‘ஹெல்த் விசிட்டர்ஸ்’ பணிக்கு தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இப் பணிக்காக பலரிடம் ரூ.ஒரு லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், பணம் கொடுத்து நியமனம் பெற்றவர்கள், கடந்த 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என, கடந்த ஆகஸ்ட் மாதம் உதகையிலுள்ள மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், மாவட்ட காச நோய் பிரிவு துணை இயக்குநர் தங்களிடம் பணம் பெற்றதாக, மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது.

இந் நிலையில், நியமன முறைகேடு தொடர்பாக உதகையிலுள்ள சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் மாநில காச நோய் அதிகாரி அறிவொளி நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொகுப்பூதியம் அடிப்படையில், காச நோய் பிரிவில் 21 பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்; இதில் 5 பேர் மட்டுமே களப் பணியாளர்கள். இவர்களுக்கு மத்திய அரசின் நிதியின்கீழ் ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சமீதா என்ற பெண், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், விசாரணை நடப்பதாக அறிந்த பாதிக்கப்பட்ட காச நோய் களப் பணியாளர்கள், உதகை சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதிகாரி மீது தாக்குதல்

தங்களிடமும் விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தி, சுகாதாரத் துறை இணை இயக்குநர் அறைக்குள் நுழைந்து, பொருட்களை உடைத்து. துணை இயக்குநர் வசந்தனை முற்றுகையிட்டனர். ஆத்திரத்தில் இருந்தவர்கள் வசந்தன் மீது தாக்குதல் நடத்தினர். விசாரணைக்கு வந்த மாநில அதிகாரி அறிவொளி, பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார்.

தாக்குதலுக்கு பயந்து, அங்கிருந்த அறைக்குச் சென்று கதவை பூட்டிக்கொண்டார் டாக்டர் வசந்தன். பாதிக்கப்பட்டவர்கள் கதவை உடைக்க முயற்சித்தனர். அதற்குள் ஜி-1 காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம், பி-1 ஆய்ளர் விநாயகம் ஆகியோர் தலைமையிலான போலீஸார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர். இதையடுத்து, பின் வழியாக மருத்துவர் வசந்தன் தப்பி ஓடிவிட்டார்.

இதுதொடர்பாக மாநில அதிகாரி அறிவொளி பேசுகையில், ‘‘சமீதா என்ற பெண்ணின் புகார் குறித்து விசாரணை நடக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், அந்த புகார்களும் விசாரிக்கப்படும்’’ என்றார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புகார்களை அளித்தனர். காச நோய் பிரிவில் களப் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக முறைகேடு நடந்துள்ளது. 21 பணியிடங்களுக்கு 500-க்கும் மேற்பட்டவர்களை நியமித்தது யார். இதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகளின் நிலை குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

முறைகேடு குறித்து விசாரிக்கும் மாநில காசநோய் அதிகாரி அறிவொளி. (வலது) விசாரணை அறைக்குள் புகுந்து மாவட்ட காசநோய் பிரிவு துணை இயக்குநர் வசந்தன் மீது தாக்குதல் நடத்தும் பாதிக்கப்பட்டவர்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x