Published : 01 May 2014 12:33 PM
Last Updated : 01 May 2014 12:33 PM
ஒரு கழிவு நீரோடை பல ஏழைக் குடும்பங்களை வாழ வைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? வாழ வைப்பது வேறு எங்குமல்ல..கோவையில்.. அதுவும் மஞ்சள் உலோகத்தோடு...தினமும் தங்கத் தேடலில் தொடங்குகிறது இவர்களது வாழ்க்கை.
கோவை உக்கடம் அருகே ஊருக்கு ஒதுக்குப்புறமாக, அதிகம் ஆள் அரவமில்லா பகுதியில் கழிவுநீர் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அங்குள்ள விவசாய நிலங்களை செழிக்க வைப்பதோடு, கரையோரங்களில் வசிக்கும் ஏராளமான குடும்பங்களையும் வாழ வைக்கிறது.
கழிவு நீர், வாய்க்காலாய் பிரியும் இடத்திலிருந்து தொடங்குகிறது அந்த புதையல் தேடும் தொழில். வழி நெடுக பாத்தி கட்டி, ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வாழ்வாதாரத்தை இந்த கழிவு நீரில் தினம் தினம் தேடுகின்றன. நகரின் நகைப் பட்டறைகளில் சேதாரமாகும் ஒவ்வொரு துளி தங்கமும் இவர்களுக்கு பொக்கிஷங்களாகின்றன.
நாமக்கல், தருமபுரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த இந்த மக்களுக்கு கோவை வாரிக் கொடுத்த தொழில் இதுதான். இவை மட்டுமே தொழில், இதனை இவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற நிலைகள் அனைத்தும் மாறி, முன்னேற்றத்திற்கான தேடல் இவர்களிடம் தெரிகிறது.
அதிகாலையில் கழிவுநீர் பண்ணையிலிருந்து வெளியேறும் நீர் குறையும்போது உள்ளே இறங்கி சேற்றை எடுத்து கரையில் போட்டு விடுவோம். அதற்காக வெட்டி வைத்திருக்கும் குழியில் இறங்கி, அதனை மிதித்து, காய்ந்த மண்ணுடன் கலந்து காய வைப்போம். அந்த மண் காய்ந்ததும், பெட்டியில் போட்டு தண்ணீரால் சலித்து எடுப்போம். நீரோடு முதலில் கழிவு போகும். பிறகு மண் போகும். கடைசியாய் தங்கும் தங்கத் தூள்களே எங்கள் உழைப்பின் கூலி.
நாமக்கல்லிலிருந்து குடும்பத்து டன் இங்கு வந்து, பல ஆண்டு களாக இந்த தொழிலை செய்கி றேன். எனது மூன்று பெண் குழந்தை களையும் படிக்க வைக்கிறேன் என்று பெருமிதப்பட்டுக் கொள்கிறார் அங்குள்ள முருகேசன்.
தனியார் தோட்டங்களில் மாதம் ரூ.500க்கு பெட்டி வைக்க இடம் வாடகை எடுத்து, அவர்களிடமே வாடகைக்கு தண்ணீர் வாங்கி, மின்கட்டணம் செலுத்தி, இந்த மக்கள் அனைவரும் அங்கேயே வசிக்கின்றனர். தினமும் குறைந்தது 13 மணி நேரம் வேலை, 10 நாள் உழைத்தால் 3 கிராம் தங்கம் தேறும். சற்று குறைவான விலையில் விற்றால் கூட, கணிசமான தொகை மிஞ்சும் என்பது இவர்களது கணக்கு.
அங்கம்மாள் என்ற பெண்மணி கூறுகையில், எனக்கும் பூர்வீகம் நாமக்கல்தான். 25 வருடங்களுக்கு முன்பு ரூ.100 கூலிக்கு இங்கு வந்தேன். இன்று நானே தனியே இந்த தொழிலைச் செய்கிறேன். முன்பெல்லாம் அதிகம் பேர் ஆர்வம் காட்டமாட்டார்கள். தங்கத்தின் விலை ஏற ஏற தொழிலும் சமத்துவ மானது. தற்போது ஏராளமானோர் குடும்பங்களாக இங்கு வந்து விட்டனர். மாதம் ரூ.15 ஆயிரம் வரை கிடைக்கும். இதை வைத்து எனது மகனையும் மகளையும் படிக்க வைக்கிறேன் என்கிறார்.
தேடலும் உழைப்பும் இவர்களது பலமாக இருந்தாலும், சுகாதாரம் மட்டுமே கேள்விக்குறியாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT