Published : 25 Sep 2013 09:47 AM
Last Updated : 25 Sep 2013 09:47 AM

குப்பை தொட்டியாகும் தமிழக எல்லைப்பகுதி

கேரளாவை கடவுளின் தேசம் என வர்ணிப்பார்கள். சுற்றுசூழல்,இயற்கை வளங்களுக்கு கேரள மாநிலம் கொடுக்கும் முக்கியத்துவம்தான் இந்த பெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது. அதே கேரளம் தமிழகத்தை கழிவுகளின் தேசமாக மாற்றிக் கொண்டிருக்கிறது சத்தமில்லாமல்.

குளங்களில் தாமரை பூ வளர்க்கத் தடை, விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக்க தடை, ஆயிரம் கிராமங்களில் தீவிர இயற்கை விவசாயத் திட்டம் என எப்போதுமே இயற்கை சார்ந்த திட்டங்களே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதனால், கேரளத்தில் இயங்கும் தொழிற்கூடங்கள், இறைச்சிக்கூடம், மருத்துவமனைகள் என சேகராமாகும் கழிவுகளை சொந்த மாநிலத்திலேயே கொட்டினால் சுகாதார கேடு என்பதால், தமிழக எல்லைப் பகுதிகளை கழிவுகள் கொட்டும் இடமாக மாற்றி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகள் இதனால் துர்நாற்றத்தின் பிடியில் சிக்கியுள்ளன.

செங்கோட்டையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஆரியங்காவு பஞ்சாயத்து. இடையில் உள்ள ‘’கோட்டை வாசல்"என்னும் பகுதி தான் இருமாநிலத்தின் எல்லைப்பகுதி. கோட்டை வாசலை சுற்றி கட்டளை குடியிருப்பு,கேசவபுரம்,புதூர்,புளியரை என தமிழக கிராமங்கள் உள்ளன.

இந்த பகுதிதான் தற்போது கேரள கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதனால் செழிப்பான செங்கோட்டை தாலுகா சுகாதார சீர்கேடுக்கு உள்ளாகியுள்ளது. விவசாயி சிவ சுப்பிரமணியம் என்பவர் கூறுகையில், " இங்க உற்பத்தியாகுற அரிசியில் இருந்து,காய்கறி வரை கேரளாவுக்குத் தான் போகுது. அங்கிருந்து வெறும் வண்டியா வர்ற லாரிகளில் கேரளாவின் கழிவுகளை ஏத்தி அனுப்பி வைச்சுட்றாங்க. 100, 200 ரூபாய் கிடைக்குதேன்னு டிரைவர்களும் இதற்கு சம்மதிக்கிறாங்க. இங்க சாலையோரம் கழிவுகளை கொட்டிட்டு போயிட்றாங்க. ஆடு, மாடு, கோழி இறைச்சி கழிவுன்னு சகலமும் கொட்டுறதால இதைத் திங்க நிறைய நாய்களும் பெருகிடுச்சு.

கேரளாவில் வாழை சாகுபடி அதிகம். இதனால் வாழையில் பூச்சி, நோய் தாக்கம் அதிகம். வாழையோட தண்டு பகுதியில் இருக்கும் தண்டு துளைப்பான் காற்றின் மூலமா எளிதா பரவும். அத்தகைய கழிவுகளை கொண்டு வந்து போடுவதால், இப்பகுதியில் இருக்கும் வாழை பயிர்கள் பாதிப்புக்குள்ளாகின்றன"என்றார்.

புளியரையை சேர்ந்த சமூக ஆர்வலர் தங்கராஜ் நம்மிடம், "சாலையோர குளங்களில் அழுகிய மீன், மாட்டு கழிவு, ஆலைகளின் தோல் கழிவு மூட்டைகளை தூக்கி எறிஞ்சுட்டு போயிட்றாங்க. மேலும் மருத்துவமனை கழிவுகள், மருத்துவ உபகரண கழிவுகளும் வீசப்படுகிறது. இதனால எங்க பகுதியில் நோய் தாக்கமும் அதிகம். கழிவுகளால் தொற்று நோயாளிகளின் கூடாரமா மாறிவிட்டது"என்றார். செங்கோட்டையில் இருந்து தமிழக எல்கை முடிவான கோட்டை வாசல் வரை காணும் இடங்களில் எல்லாம் குப்பைகள்.

இதுகுறித்து புளியரை காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் முருகனிடம் இது பற்றி கேட்ட போது,’’ஆள்,அரவம் இல்லாத இராத்திரி நேரங்களில் கழிவுகள் கொட்டப்படுது. இதை கண்காணிச்சு சில லாரிகளை பிடிச்சு வழக்கு போட்டோம். செங்கோட்டை நீதிமன்றம் 5000 ரூபாய் அபராதம் போட்டது. வருமானத்தை விட அபராதம் அதிகம் என்பதால், தற்போது கட்டுக்குள் உள்ளது. இப்போதும் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்"என்றார்.

இதே பிரச்சினை கோவை மாவட்டத்தை ஒட்டிய தமிழக எல்லைப்பகுதிகளிலும் நிலவுகிறது. இப்பகுதி மக்கள் கழிவுகள் ஏற்றி வரும் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.ss

கழிவு லாரிகளுக்கு கடிவாளம் போடுவது எப்படி?

புளியரையில் இயங்கி வரும் சோதனை சாவடியை கோட்டைவாசலுக்கு மாற்றி வைத்தால் தமிழகத்தின் எல்லையிலேயே கேரள கழிவுகளுக்கு அணை போட்டு விடலாம்.

இவ்விவகாரம் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சமயமூர்த்தியிடம் பேசினோம். அவர் கூறுகையில் "மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் இதை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம்.தென்காசி வட்டாரப் போக்குவரத்து அலுவருக்கு கழிவுகளோடு வரும் லாரியை மடக்கி பிடிக்க சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான கூட்டத்திலும் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இறைச்சி கழிவுகள் வருவதை முழுமையாக தடுத்து விட்டோம். புளியரையில் இருக்கும் காவல் சோதனை சாவடியை கோட்டைவாசலில் மாற்றும் அளவிற்கு அங்கு இடவசதி இல்லை. கழிவுகளை கொண்டு வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x