Published : 21 May 2017 11:34 AM
Last Updated : 21 May 2017 11:34 AM

கொடைக்கானலில் மலர் கண்காட்சி தொடக்கம்: வண்ண மலர்களை ரசித்த சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு நேற்று மலர் கண்காட்சி தொடங்கியது. பூத்துக் குலுங்கிய ஏராளமான வண்ண மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை விழா நேற்று 56-வது மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். மலர் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொடக்கிவைத்தார். வேளாண்மைத் துறை அமைச்சர் ரா.துரைக்கண்ணு, சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் வேளாண்மை உற்பத்தித் துறை அரசு முதன்மைச் செயலர் ககன்தீப்சிங்பேடி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மலர் கண்காட்சியில் இந்தியா கேட், டைனோசர், காட்சில்லா போன்ற உருவங்கள் மலர்களால் உருவாக்கப்பட்டிருந்தது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன. கிங்காங், குட்டி டைனோசர் போன்ற உருவங்கள் காய்கறிகளால் வடிவமைக்கப் பட்டிருந்ததை சிறுவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

400 வகையான மலர்களில் கார்னேசன் மலர்கள், ஆர்கிட் ரக மலர்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான வண்ண மலர்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.

பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கிய வெளிநாட்டு மலர்கள் உள்ளிட்ட ஏராளமான வண்ண மலர்களுக்கிடையே சுற்றுலாப் பயணிகள் வலம் வந்து மலர்கள் முன்பு செல்ஃபி எடுத்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினர்.

கொடைக்கானல் போட் அன் ரோயிங் கிளப் சார்பில் நட்சத்திர வடிவிலான ஏரியில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்ற படகுப் போட்டி மற்றும் வாத்து பிடிக்கும் போட்டியும் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் மலர் கண்காட்சி இன்றும் நடைபெறுகிறது.

சுற்றுலாப் பயணிகளுக்கான மாரத்தான் போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் தினமும் நடைபெறுகின்றன. மே 29-ம் தேதி கோடை விழா நிறைவு பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x