Published : 01 Jun 2017 11:28 AM
Last Updated : 01 Jun 2017 11:28 AM
இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை காரணமாக புதுச்சேரி மாட்டுச் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தன. விற்பனை குறைந்ததால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.
புதுச்சேரியின் மதகடிப்பட்டு கிராமத்தில் செவ்வாய்தோறும் நடைபெறும் மாட்டு வாரச் சந்தை பிரபலமானது. பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்து 2 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது இந்தச் சந்தை. கோயம்புத்துர், ஈரோடு, பொள்ளாச்சி, சேலம், பண்ருட்டி, பெங்களுர், வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்து இந்தச் சந்தைக்கு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். பழங்கால முறைப்படி கையில் துண்டு போட்டு பேரம் பேசும் நடைமுறை இன்றைக்கும் இந்தச் சந்தையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு சந்தை என்ற பெருமையை பெற்ற இச்சந்தையில் வாரம்தோறும் 1,500 மாடுகள் வரை விற்பனையாகும். புதுச்சேரியின் மிகப்பெரிய அடையாளமாக திகழும் இந்த பிரெஞ்சு காலத்து வாரச்சந்தைக்கு தமிழகம் - புதுச்சேரி வியாபாரிகள் மாடுகள் வாங்க, விற்க ஆர்வமுடன் வருவதுண்டு. வாரம்தோறும் ஒரு கோடி ரூபாய்க்கு மாடுகள் வர்த்தகம் நடைபெறும்.
ஆனால் இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை மாட்டுச் சந்தை நேற்று முன்தினம் வெறிச்சோடி காணப்பட்டது. நூற்றுக்கும் குறைவான மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. அதிலும் விற்பனை மிகக்குறைவாகவே நடந்ததாக வந்திருந்தோர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் பாஸ்கர், செல்வராஜ், மலையப்பன் ஆகியோர் கூறுகையில், "விவசாயத்தோடு மாடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்ப செலவுகளை கவனிக்கிறோம். வயதான மாடுகளை இறைச்சிக்கு அனுப்பாமல் விட்டால் இறந்த பிறகு புதைக்க ஏற்படும் செலவு மிக அதிகம். இது தொடர்ந்து பல ஆண்டுகளாக நடக்கிறது. வயது முதிர்வு காணும் மாடுகளை விற்கக் கூடாது என்றால் முதியோர் இல்லம் போல் மாடுகளை பராமரிக்க மத்திய அரசு முன்வருமா? என்பதை தெளிவுப்படுத்துவது அவசியம்'' என்று குறிப்பிட்டனர்.
சென்னையைச் சேர்ந்த மாட்டு வியாபாரியொருவர் கூறுகையில், "மாடுகளை வளர்க்கவும், இறைச்சிக்காகவும் ஏராளமானோர் மதகடிப்பட்டு சந்தைக்கு வருவது உண்டு. மத்திய அரசின் அறிவிப்பால் அந்த விற்பனை ஸ்தம்பித்திருக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் லட்சக்கணக்கானோர் மாட்டிறைச்சி, தோல் விற்பனை, தோல் பொருட்கள் செய்யும் பணி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
"சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்ததால் மாட்டுக்கு தேவையான கயிறு, சலங்கை, சாட்டை போன்றவை விற்கவில்லை" என்று மாடுகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடலூர் வளர்மதி வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT