Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM

மதுரையில் பைப் வெடிகுண்டு சிக்கியது- பயங்கர சேதத்தை ஏற்படுத்தக்கூடியது

மதுரையில் ரிலையன்ஸ் மார்க் கெட்டில் வைக்கப்பட்ட 3.75 கிலோ எடை கொண்ட பைப் வெடிகுண்டை போலீஸார் கைப்பற்றினர்.

மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள உத்தங்குடியில் ரிலையன்ஸ் மார்க்கெட் உள்ளது. இதன் பின்பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை வயர்கள் சுற்றப்பட்டு மூடப்பட்ட இரும்பு பைப், ஒரு பெட்ரோல் கேன் இருந்ததை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். வெடிகுண்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

எஸ்.பி. விஜயேந்திர பிதாரி மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ரிலையன்ஸ் மார்க்கெட்டில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு கடை மூடப்பட்டது. மோப்பநாய் வரவழைத்து அந்த இரும்பு பைப் சோதனை செய்யப்பட்டது.

அது 3.75 கிலோ எடையுடன் 1.5 அடி நீளத்திலுள்ள பைப் வெடி குண்டு என்பதும், அதில் அதிக சக்தி வாய்ந்த வெடிமருந்துப் பொருள்கள் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. அண்மையில் புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராணயசாமி வீடு அருகே கண்டறியப்பட்ட அதே வடிவில் இந்த வெடிகுண்டு அமைக்கப்பட்டிருந்தது. வெடித்திருந்தால் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் எனவும் தெரியவந்தது.

இதையடுத்து பைப் வெடிகுண்டை கைப்பற்றிய போலீ ஸார் அதனை திருவாதவூர் செல்லும் வழியிலுள்ள புதுதாமரைப் பட்டிக்குக் கொண்டு சென்றனர். அந்த வெடிபொருளிலுள்ள மருந்துகள், தயாரிப்பு முறை பற்றி முழுமையான தகவல்களை அறிய வேண்டி இருந்ததால் உடனே செயலிழக்கச் செய்ய வேண்டாம் என காவல் உயரதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து அந்த பைப் வெடிகுண்டை கல்குவாரியில் வைத்து போலீஸார் பாதுகாத்து வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்களின் ஆய்வுக்கு பிறகு புதன்கிழமை அதனை செயலிழக்கச் செய்ய முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x