Published : 19 Feb 2014 12:00 AM
Last Updated : 19 Feb 2014 12:00 AM
சட்டப்பேரவையில் அமைச்சர்களுக்கும் தேமுதிக உறுப்பினர் சந்திரகுமாருக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடந்தது.
சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை பட்ஜெட் மீதான விவாதத்தில் தேமுதிக கொறடா சந்திரகுமார் பேசினார். அப்போது அவருக்கும் அமைச்சர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் விவரம்:
சந்திரகுமார்:
தமிழக அரசின் வருவாய் குறைந்து வருகிறது (பட்ஜெட் டில் குறிப்பிடப்பட்டிருந்த புள்ளி விவரங்களைப் பட்டியலிட்டார்).
அதன்பின் முதல்வர் பற்றி சந்திர குமார் கூறிய சில வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:
முதல்வர் எதையாவது சொன்னால் அதை செய்யாமல் விடமாட்டார். 3 ஆண்டுகளாக பல திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தி சரித்திரம் படைத்து வருகிறார். வருவாய் குறைந்தது பற்றி தேமுதிக உறுப்பினர் பேசினார். தமிழகத்தின் சொந்த வரி வருவாய் சீராகத்தான் இருந்து வருகிறது. ஆனால், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை மற்றும் பொருளாதார மந்தநிலை போன்றவற்றால்தான் வேறு சில இனங்களில் வருவாய் குறைந்தது.
புள்ளி விவரம் இல்லாமல் பேசக்கூடாது. ஒரு திட்டத்தை முதல்வர் அறிவித்தால் அதை செய்யாமல் விடமாட்டார்.
சந்திரகுமார்:
தமிழக அரசின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஓ.பன்னீர்செல்வம்:
திருத்தப் பட்ட மதிப்பீட்டை வைத்து சந்திர குமார் இப்படி பேசுகிறார் என நினைக்கிறேன். பொதுவாக, கடன் தொகையை எப்படி செலவழிக்கி றோம் என்பது முக்கியம். முதலீட்டுக் காகத்தான் கடன் தொகையை செலவழிக்கிறோம். மேலும், மத்திய அரசு நிர்ணயித்துள்ள மாநிலங்களுக்கான கடன்தொகை வரையறைக்குள்தான் நமது கடன் இருந்து வருகிறது.
சந்திரகுமார்:
ரூ.8 ஆயிரம் கோடி யில் அறிவிக்கப்பட்ட உடன்குடி மின்திட்டம் என்ன ஆனது?
அமைச்சர் நத்தம் விசுவநாதன்:
அந்தத் திட்டத்துக்கான டெண்டர் நடைமுறைகள் இறுதிநிலையை எட்டியுள்ளன. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
சந்திரகுமார்:
மதுரையில் கிரானைட் குவாரி முறைகேடு புகாரில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை வெளியிட வேண்டும்.
பேரவைத் தலைவர்:
நீதிமன்றத்தில் உள்ள வழக்கு பற்றி இங்கு பேசக்கூடாது.
இதைத் தொடர்ந்து ஒரு வார்த்தையை சந்திரகுமார் கூறினார். அதை அவைக்குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கினார்.
அமைச்சர் கே.பி.முனுசாமி:
முதல்வர் உங்களைப் புறக்கணித்திருந்தால் நீங்கள் இங்கே வரும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.
(இதற்கு தேமுதிவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்து குரல் எழுப்பினர்.)
கே.பி.முனுசாமி:
உங்கள் தலைவரைப் போல் உணர்ச்சி வசப்படக்கூடாது. பொறுமையாகப் பேசுங்கள். எங்களைப் பிரிந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டீர்கள். ஆனால், 90 சதவீதத்துக்கும் மேலான இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். முதல்வரின் உழைப்பால்தான் உங்களுக்கு தேர்தலில் (சட்டப்பேரவை) வெற்றி கிடைத்தது.
சந்திரகுமார்:
எங்கள் தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்யவில்லை.
ஓ.பன்னீர்செல்வம்:
அதிமுக வேட்பாளர்களைக் கூடத்தான் மொத்தமாக ஒரே மேடையில் அழைத்து பிரச்சாரம் செய்தார். அனைத்துத் தொகுதிகளுக்கும் அவர் போகவில்லை.
சந்திரகுமார்:
2011-க்கு முன்பு பல தேர்தல்களில் அதிமுக தோற்றிருக்கிறதே.
ஓ.பன்னீர்செல்வம்:
இங்கு தப்புத்தாளங்கள் போடாதீர்கள். திமுகவின் அநியாய ஆட்சியை அகற்றத்தான் வாக்கு கேட்டோம். ஜெயலலிதாவை முதல்வராக்க வேண்டும் என்றுதான் வாக்கு கேட்டோம். எனக்கோ, உங்கள் கட்சி எம்எல்ஏக்களுக்கோ மக்கள் வாக்களிக்கவில்லை. நமக்கு தனிப்பட்ட முறையில் செல்வாக்கு இல்லை. ஜெயலலிதா முதல்வர் ஆவதற்காகத்தான் மக்கள் வாக்களித்தார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT