Last Updated : 18 Aug, 2016 08:15 AM

 

Published : 18 Aug 2016 08:15 AM
Last Updated : 18 Aug 2016 08:15 AM

அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனிடம் இருந்து கட்சிப் பதவி பறிப்புக்கு சசிகலா புஷ்பா விவகாரம் காரணமா?

தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் திடீரென நீக்கப்பட்டதற்கான பின்னணி காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சண்முகநாதனை பொறுத்த வரை அதிமுக மாவட்டச் செயலாளர் பதவியை பறிகொடுப்பது, இது நான்காவது முறை. இவர் முதல் முறையாக கடந்த 2000-வது ஆண்டு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2001-ல் கைத்தறித் துறை அமைச்சரானார். ஆனால், 9 மாதங்களில் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். அந்த 2 பதவிகளும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டன.

பின்னர், 2009-ம் ஆண்டு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அதிமுகவை விட்டு வெளியேறியதும், மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி எஸ்.பி.சண்முகநாதனை தேடி வந்தது. அப்போதும் 6 மாதத்தில் பதவி பறிக்கப்பட்டது. 2010 இறுதியில் எஸ்.பி.சண்முகநாதன் மீண்டும் மாவட்டச் செயலாளரானார். தொடர்ந்து 2011 தேர்தலில் வெற்றிபெற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரானார். ஆனால், 6 மாதங்களில் அமைச்சர், மாவட்டச் செயலாளர் பதவியை இழந்தார். இந்த 2 பதவிகளும், தூத்துக்குடி எம்எல்ஏவாக இருந்த சி.த.செல்லப்பாண்டியன் வசம் சென்றது. இந்நிலையில் சி.த.செல்லப்பாண்டியன் மீது புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு அவரிடம் இருந்த பதவிகள் பறிக்கப்பட்டன.

மீண்டும் இவ்விரு பதவிகளும் சண்முகநாதனை தேடி வந்தன. 2013 முதல் 2016 மே வரை சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தார். 2016 மே மாதம் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் பால்வளத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரிடம் இருந்து மாவட்டச் செயலாளர் பதவி திடீரென பறிக்கப்பட்டுள்ளது. அந்த பதவி மீண்டும் சி.த.செல்லப்பாண்டியனிடம் வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக தலைமைக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுத்ததால் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா விவகாரமே, சண்முகநாதன் நீக்கத்துக்கு காரணம் என, அதிமுகவில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

சசிகலா புஷ்பா மற்றும் குடும்பத் தினர் மீது பாலியல் புகார் கூறிய 2 பெண்களும், சசிகலா புஷ்பாவிடம் தங்களை வேலைக்கு சேர்த்துவிட்டது அமைச்சர் சண்முகநாதன் என கூறியுள்ளனர். இந்த அடிப்படையில் தான் கட்சி பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது வைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளராக புவனேஸ்வரன் என்பவர் அறிவிக் கப்பட்டார். பின்னர் அவர் மீது கட்சித் தலைமைக்கு பல்வேறு புகார்கள் வந்ததால் அவர் மாற்றப்பட்டு, சண்முக நாதன் வேட்பாளராக அறிவிக்கப்பட் டார். புவனேஸ்வரன் மீது வழக்கு இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து பொய் தகவல்களை பரப்பியது சண்முகநாதன் ஆதரவாளர் கள் தான் என கூறப்பட்டது.

இது தொடர்பாக புவனேஸ் வரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன்பேரில் இந்த புகார் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் கடந்த சில நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பொய் தகவல் களை பரப்பியது சண்முகநாதன் ஆதரவாளர்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சண்முகநாதன் கட்சி பதவி பறிப்புக்கு இதுவும் முக்கிய காரணம் என அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x