Published : 17 Mar 2014 09:04 PM
Last Updated : 17 Mar 2014 09:04 PM
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செய்யும் துரோகம், விவாகரத்து என நடிகர் சிவக்குமார் பேசினார். திருப்பூர் வெற்றி அறக்கட்டளை சார்பில் திருப்பூர் காங்கயம் ரோடு அமர்ஜோதி கார்டன் ஏ.எஸ்.நகர் விரிவு பகுதியில், வெற்றி நலவாழ்வு மையத்தின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சண்முகவேல் நூற்பாலை நிறுவனர் பி.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார்.
நடிகர் சிவக்குமார் வெற்றி நலவாழ்வு மையத்தை திறந்து வைத்து பேசியதாவது: மனிதர்களின் ஒவ்வொரு வாழ்க்கைப் பருவத்திலும் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கான பயிற்சிகள் வெற்றி நலவாழ்வு மையத்தில் வழங்கப்படவுள்ளன. இந்த உலகிற்கு நம்மை அறிமுகப்படுத்திய பெற்றோரை பாதுகாக்க வேண்டியது நம் கடமை.
நம் மூலமாக வந்த குழந்தைகளை, ஒழுக்கமுள்ள குழந்தைகளாக வளர்க்க வேண்டியது நம் கடமை. உலகிலேயே சந்தோஷமான விஷயம் பேரக்குழந்தைகளோடு விளையாடுவதும், அந்த குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதும்தான். ஆண்களும், பெண்களும் குடும்ப பொறுப்புகளை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில், விவாகரத்து தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
அது குழந்தைகளுக்கு செய்யக்கூடிய துரோகமாகும். அதுபோல் முதுமை என்பதும் கொண்டாடப்பட வேண்டிய பருவம். தலைமுறை இடைவெளி இல்லாது வாழ கற்றுக்கொண்டால், வாழ்நாள் எல்லாம் ஆனந்தமாய் வாழலாம் என்றார். அறக்கட்டளை தலைவர் பி.நடராஜ் வரவேற்றார். செயலாளர் வி.சுந்தரராஜ் நலவாழ்வு மையம் பற்றி கூறினார். கிருஷ்ணசாமி, ஆடிட்டர் ராமநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதில், சித்த, ஆயுர்வேத, இயற்கை வழி மருத்துவ சிகிச்சை மற்றும் புத்துணர்வு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதவிர கர்ப்பிணிக்கு கர்ப்பகால வகுப்பு, இளம் பருவத்தினருக்கு வாழ்க்கை நெறிகாட்டும் பயிற்சி, திருமணம் காணும் மணமக்களுக்காக பயிற்சி, முதியவர்களுக்கான முழுமையான பயிற்சி ஆகியவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. கே.ஆர்.நாகராஜன் நன்றி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment