Published : 31 Jan 2014 09:35 AM
Last Updated : 31 Jan 2014 09:35 AM
திமுக நிர்வாகிகள் குறித்து அபாண்டமாக போலீஸிடம் குற்றச்சாட்டு கூறுவோரைக் கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை கோபாலபுரம் இல் லத்தில் வியாழக்கிழமை இரவு நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:
ஆளுநர் உரை பற்றி உங் கள் கருத்து என்ன? திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனவே?
வெளிநடப்பு செய்த கட்சிகள் சார்பிலே சொல்லப்பட்ட கருத்துகள் தான் என் கருத்தும் திமுக கருத்தும். அதிலே விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால்தான் ஆளுநர் உரை மீதான விவாதத்தையே மூன்று நாட்களுக்கு மட்டும் நடத்தவிருக்கிறார்கள்.
வருமான வரித் துறை வழக்கில் ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அந்த வழக்கை கீழ்கோர்ட் நான்கு மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறதே?
இந்தப் பிரச்சினை உச்ச நீதிமன்றத்துக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே நடக்கின்ற நீதி குறித்த போராட்டம். அதிலே முடிவெடுக்க வேண்டியது ஜெயலலிதாதான்.
ஜெயலலிதா மீது இவ்வளவு வழக்குகள் இருக்கும்போது, அவர் பிரதமராக வரவேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் அது கனவுதான் என்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?
அது கனவா நனவா என்று எனக்குத் தெரியாது. பிரதமர் ஆவதற்கு இப்படிப்பட்ட வழக்குகள் இடையூறாக இருக்குமா என்றால், எனக்கு அதைப் பற்றிய சட்ட நுணுக்கங்கள் தெரியாது.
இந்திய, இலங்கை மீனவர் களின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசி சுமுகமாக முடிவெடுத்த பிறகும், இன்றைய தினம் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்திருக்கிறதே?
அதுதான் இலங்கை ராணுவம். பிப்ரவரி 1-ம் தேதி டெசோ கூட்டம் நடக்கிறது. அதில் இதைப் பற்றி விரிவாகப் பேசி முடிவு செய்வோம்.
திமுக, தேமுதிக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை எந்த நிலையிலே இருக்கிறது?
எனக்குத் தெரியாது.
தேமுதிக சார்பில் பிரேமலதா கூறும்போது, அழகிரி பிரச்சினை என்பது குடும்பத்துக்குள் நடக் கும் நாடகம் என்றெல்லாம் விமர்சித்திருக்கிறாரே?
அவருக்குத் தெரிந்த அளவுக்கு நாடகம் பற்றி எனக்குத் தெரியாது.
மு.க.அழகிரி கொடுத்துள்ள பேட்டியில், நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு களை திரும்பப் பெற்றால்தான் சமாதானத்துக்கு வாய்ப்பு வரும் என்று சொல்லியிருக்கிறாரே?
திமுகவில் உள்ளவர்கள், திமுக மாவட்டச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் போன்றவர்களைப் பற்றி அபாண்டமாக பி.சி.ஆர். (தீண்டாமை வன்கொடுமை) குற்றச்சாட்டை போலீஸாரிடம் சொல்லி, அவர்கள் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்த பிறகு, கட்சி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT