Published : 15 Jan 2014 02:25 PM
Last Updated : 15 Jan 2014 02:25 PM
செங்கோல் ஏந்தி, கிரீடம் தரித்து நின்ற பழைய மன்னர்களின் சேவகர்கள் போன்று இன்று அதே தோற்றத்தில் ஹோட்டல் கதவுகளை திறந்துவிடுகின்றனர், துணிக்கடை வாசலில் குழந்தைகளை குஷிப்படுத்த பொம்மையாய் தோற்றமளிக்கின்றனர் செக்யூரிட்டிகள்.
காய்கறி வாங்குவதிலிருந்து, கார் துடைப்பது வரை நம்மில் ஒருவராக உள்ள செக்யூரிட்டிகளின் நிலைமையோ மிக மோசம் என்று சொல்பவர்கள் வேறுயாருமல்ல, நமது அரசு அதிகாரிகள்.
செக்யூரிட்டிக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரங்கள், இங்கே செக்யூரிட்டிகள் கிடைக்கும் என்ற நிலைமைக்கு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
சந்திக்கும் கொடுமைகள்
இது ஒருவகையில் சரியான நடைமுறையாகத் தோன்றினாலும், பெரும்பாலான நிறுவனங்கள், இந்த தொழிலாளர்களை எப்படி எல்லாம் பாடாய்படுத்துகின்றன, இதனால் யாருக்கு லாபம், யாருக்கு இழப்பு? என்ற கேள்விகள் பொதுமக்களுக்குத் தேவை என்கின்றனர் தொழிலாளர் துறை அதிகாரிகள்.
இப்படி அதிகாரிகள் கூறக் காரணம், தனியார் நிறுவனங்களால் நியமிக்கப்படும் செக்யூரிட்டிகள் பணிபுரியும் இடங்களில் உயிரிழப்பது அதிகரித்துவிட்டது. முறையற்ற சம்பளம், விடுமுறையற்ற வேலை, சொந்த ஊர்களுக்குச் செல்ல அனுமதி தாராதது என பல கொடுமைகளை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் செக்யூரிட்டிகளுக்கு கொடுத்து வருகின்றன.
இதனால், பணி நேரத்தில் தூக்கம், உயிரிழப்பு, மன உளைச்சல், தற்கொலை என, பல காரணங்களை அவர்களை துரத்துகிறது.
கோவையில், புற்றீசல் போல தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. 2005 செக்யூரிட்டி ஆக்ட் படி இவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். கோவையில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இருந்தாலும், அனுமதி பெற்றவை 21 மட்டும்தான் என்கின்றனர் போலீஸார்.
கோவையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செக்யூரிட்டிகள் உள்ளனர். பல மாநில தொழிலாளர்களை வேலைக்கு வைத்து, தொழிலாளர் நலச் சட்டங்களை பின்பற்றாமல் இருப்பதால் ஏராளமான தற்கொலைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிறுவனங்களில் ஒடிசா, பீகார், அசாம், கேரளா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். வெளி மாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள தொழிலாளர் துறை அனுமதியோ, ஒப்பந்தத் தொழிலாளர் சட்டப்படியான அனுமதியோ பெறவில்லை எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாதுகாப்பு அவசியம்
சமூக விரோதிகளால் பாதிப்பு, பொருள் சேதம் போன்ற பாதிப்பு ஏற்படும்போது, பாதிக்கப்படுவது செக்யூரிட்டிகள்தான்.
அவர்களை பணியில் இருந்து நீக்கி விடுவதோடு, நிறுவனங்களின் வேலை முடிந்து விடும். ஆனால், செக்யூரிட்டிகளின் மன உளைச்சலுக்கு யார் பொறுப்பேற்பது? சாதாரண மனிதன் தூங்கும் அளவிற்கு கூட அவர்கள் தூங்கவில்லை என்றால் எப்படி உங்கள் வீட்டை அல்லது நிறுவனத்தை பாதுகாக்க முடியும்?
பாதுகாப்புக்கு பணியாற்றுபவர் நீங்கள் நியமித்தவர் அல்ல. நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு சம்பளம் கொடுக்க வேண்டும். அதில் கமிஷன் போக தொழிலாளிக்கு (செக்யூரிட்டிக்கு) அவர்கள் சம்பளம் கொடுப்பர். இரு புறமும் நன்மை வேண்டும் என்பதுபோல, தொழிலாளர் சட்டங்களை பின்பற்றும் செக்யூரிட்டி நிறுவனங்களிடம் ஆள் கேட்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும் சரியான பாதுகாப்பு இருக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.
மீறப்படும் சட்டங்கள்
இது குறித்து கோவை மாவட்ட லேபர் யூனியன் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியது:
பீளமேடு அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு செக்யூரிட்டி தற்கொலை செய்து கொண்டது பரபரப்பாக பேசப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு கூட காரமடையில் ஒடிசா தொழிலாளர் ஒருவர், பணியில் இருந்தபோது தற்கொலை செய்து கொண்டார். இது போல ஏராளமான சம்பங்கள் நடந்து வருகின்றன. வருடத்திற்கு 20க்கும் அதிகமான செக்யூரிட்டிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் இவையனைத்துமே மூடி மறைக்கப்படுகின்றன.
கொத்தடிமை போல…
12 மணி நேரம் கட்டாய வேலை. விடுமுறை நாட்களில் 36 மணி நேர வேலை. காரணம் இல்லாத சம்பளப் பிடித்தம், நீண்ட தொலைவில் இடமாற்றம், பி.எப். இ.எஸ்.ஐ., சமூகப் பாதுகாப்புகள் இல்லை. கல்விச் சான்றுகளை வாங்கி வைத்துக்கொண்டு கொத்தடிமை முறையில் வேலை வாங்குகின்றனர் என பல முறைகேடுகள் நடக்கின்றன என்றார். அவர்களால் வெளியில் வந்து புகார் கொடுக்க முடியாத பட்சத்தில், வேலை செய்யும் இடத்திலேயே தற்கொலை செய்து கொள்கின்றனர். சட்டத்திற்கு புறம்பான முறையில் செயல்படும் நிறுவனங்களை மக்களே கேள்வி கேட்க வேண்டும். எல்லா வற்றையும் விட மனிதநேய அடிப்படையில் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் தனியார் செக்யூ ரிட்டிகளின் நலனை சரியாய் கொடுக்கின்றனவா என கேள்வி எழுப்ப வேண்டும் என்கின்றனர் தொழிலாளர் துறை அதிகாரிகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT