Published : 12 Nov 2014 12:43 PM
Last Updated : 12 Nov 2014 12:43 PM

அண்ணாநகர் டாக்டர் வீட்டில் கொள்ளை: வேலைக்கார பெண் உட்பட 6 பேர் கைது - 107 சவரன் தங்க நகை, 4¾ கிலோ வெள்ளி, ரூ.65 ஆயிரம் மீட்பு

அண்ணாநகர் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வேலைக்காரப் பெண் உட்பட 6 பேரை தனிப்படை போலீஸார் கொல்கத்தாவில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் 107 சவரன் தங்க நகை, 4¾ கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தை போலீஸார் மீட்டனர்.

அண்ணாநகர் க்யூ பிளாக் 15-வது தெருவில் வசிப்பவர் ஆனந்த். டாக்டரான இவர், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி. இவரது தாய் ஆண்டாளம்மாள். கொல்கத்தாவைச் சேர்ந்த வேலைக்கார பெண் மீனா என்கிற அகில்மாபீபி என்பவரும் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 4-ம் தேதி மாலை 4 மணி அளவில் இந்தி மொழி பேசும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இரண்டு பேர், வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டில் இருந்த சாந்தி, ஆண்டாளம்மாள் மற்றும் வேலைக்கார பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு, வீட்டில் இருந்த 119 சவரன் தங்க நகை, 4¾ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுபற்றி டாக்டர் ஆனந்த் போலீசாருக்கு புகார் கொடுத் தார்.

போலீஸார் விசாரணையில், வேலைக்காரப் பெண்ணின் உதவி யோடுதான் கொள்ளை நடந்தி ருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்திய போது, பெண்ணின் கணவர் இம்ரான் மற்றும் 4 பேர் கொல்கத்தாவில் இருந்து வந்து சென்னை அமைந்தகரையில் உள்ள விடுதியில் சில நாட்கள் தங்கி திட்டமிட்டு வீட்டில் கொள் ளையடித்தது தெரிந்தது. மேலும் கொள்ளையர்கள் 5 பேரும் கொல்கத்தாவுக்கு தப்பி சென்றிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

இதையடுத்து உதவி கமிஷனர் நந்தகுமார் தலைமையில் இன்ஸ் பெக்டர்கள் ஜார்ஜ் மில்லர், ஜவகர், சரவணன், மஞ்சுளா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், கொள்ளையர்கள் தங்கியிருந்த லாட்ஜில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். கணவர் இம்ரான் மற்றும் 4 கொள்ளையர்களை வேலைக் காரப் பெண் அடையாளம் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து வேலைக் காரப் பெண் மற்றும் கொள்ளை யர்கள் 5 பேரின் புகைப் படங்களுடன் தனிப்படை போலீஸார் கொல்கத்தாவுக்கு சென்று அங்குள்ள போலீஸ் உதவியுடன் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி கொல்கத்தா ரயில் நிலையத்தில் 5 பேரையும் தனிப்படைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 107 சவரன் தங்க நகை, 4¾ கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தை மீட்டனர். அதன்பின் அங்குள்ள பர்கனாஸ் மாவட்டம் பார்யூபூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, நேற்று சென்னை கொண்டு வந்தனர். இதையடுத்து முக்கிய குற்றவாளியான வேலைக்காரப் பெண் உட்பட 6 பேரும் சென்னை பெருநகர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொள்ளை தொடர்பாக சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் சி.தர், அண்ணாநகர் துணை கமிஷனர் எஸ்.மனோகரன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

இந்த கொள்ளை துப்பாக்கி முனையில் நடைபெறவில்லை. கொள்ளை நடந்த வீட்டில் விசாரணை நடத்தியபோது வேலைக்காரப் பெண் மீதுதான் சந்தேகம் வந்தது. முதலில் தன்னுடைய கணவர் இம்ரான் சென்னைக்கு வந்ததே இல்லை என தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கணவர் இம்ரான் மற்றும் 4 பேர் வந்து வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். மேலும் வீட்டில் யார் எல்லாம் உள்ளனர். வீட்டில் எவ்வளவு நகை, பணம் இருக்கிறது. வீட்டிற்கு எப்போது வந்தால் கொள்ளையடிக்கலாம். மாட்டிக் கொண்டால் வீட்டில் இருந்து தப்பிப்பது எப்படி? என கொள்ளைக்கான அனைத்து திட்டங்களையும் வேலைக்காரப் பெண் தீட்டியுள்ளார். அந்த பெண் ணின் உதவியோடு, இந்த பெரும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இவைதவிர தன்மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, வீட்டில் தன்னையும் கட்டிப்போடும்படி கொள்ளையர்களிடம் தெரி வித்துள்ளார்.

கொள்ளையர்கள் கொள்ளை யடித்த நகை மற்றும் பணத்து டன் நேராக கொல்கத்தா செல்ல வில்லை. இடையில் ஐதராபாத் சென்று லாட்ஜில் தங்கி யுள்ளனர். அந்த லாட்ஜில் வெள்ளிப் பொருட்களை பாதுகாப் பாக வைத்து விட்டு, கொல்கத்தா வந்தனர். கொல்கத்தா ரயில் நிலை யத்தில் ரயிலைவிட்டு இறங்கி நடந்து வந்த போது, அவர்களை சுற்றி வளைத்து பிடித்தோம். அதன்பின், அவர்கள் கொடுத்த தகவலின்படி ஐதராபாத் சென்று லாட்ஜில் இருந்த வெள்ளிப் பொருட் களை போலீஸார் மீட்டனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

டாக்டரின் மனைவி சாந்தி கூறும்போது, ‘‘சம்பவம் நடந்த அன்று கணவர் வீட்டில் இல்லை. வீட்டிற்கு 2 பேர் வந்தனர். அவர்கள் இந்தியில் பேசிக் கொண்டனர். சிறிது நேரத்தில் எங்களை கட்டிப் போட்டனர். அதன்பின் அவர்கள் நேராக அறைக்கு சென்று பீரோ சாவியை எடுத்தனர். வீட்டில் நான் சாவி வைக்கும் இடம் உள்ளிட்ட அனைத்தும் அவர்களுக்கு தெரிந் திருந்தது’’ என்றார்.

12 சவரன் நகை, ரூ.3.35 லட்சம் பணம் எங்கே?

வீட்டில் 119 சவரன் தங்க நகை, 4¾ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.4 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக டாக்டர் ஆனந்த் போலீஸில் புகார் கொடுத்து இருந்தார். ஆனால் கொள்ளையர்களிடம் இருந்து 107 சவரன் தங்க நகை, 4¾ கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தை போலீஸார் மீட்டுள்ளனர். மீதமுள்ள 12 சவரன் தங்க நகை மற்றும் 3.35 லட்சம் பணம் என்ன ஆனது என்பது பற்றி தகவல் தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x