Published : 05 Feb 2017 11:45 AM
Last Updated : 05 Feb 2017 11:45 AM
ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. அவனியாபுரத்தில் லட்சக்கணக்கானோர் மத்தியில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளையை காளையர்கள் அடக்கிப் பரிசுகளைக் குவித்தனர்.
தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டான ஜல்லிக்கட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போதிலும், மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளான அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், 3வது நாள் புகழ்பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த மூன்று இடங்களிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டில் காளைகள் துள்ளி குதிப்பதையும், காளைகளை காளையர்கள் அடங்கி பரிசுகள் வெல்வதையும் பார்க்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளிலும் இருந்தும் பார்வையாளர்கள் வருவது வழக்கம்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தடை காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்தாண்டு ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவசர சட்டம் நிறைவேற்றிய போதிலும் அதை ஏற்காமல் நிரந்தர சட்டம் கோரி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
மாணவர்களின் போராட்டத்தால் மத்திய அரசின் ஒப்புதலின் பேரில் தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கினர்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுகள் நடத்தப்பட்டது. மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.
அவனியாபுரம் மந்தையம்மன் கிராம கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அய்யனார் கோவிலில் சம்பிரதாய முறைப்படி காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் வாடிவசால் வழியாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 919 காளைகளும், 717 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டு தொடங்கியதில் இருந்து வாடிவாசல் வழியாக துள்ளி குதித்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கி பரிசு பெற்றனர். மாடுபிடி வீரர்களுக்கு மொபட், சைக்கிள், மிக்ஸி, எரிவாயு அடுப்பு, அண்டா, வெள்ளி நாணயம், வெள்ளி குத்து விளக்கு, பித்தளை குத்து விளக்கு, டிராவல் பேக், பேன்ட், சர்ட், வேஷ்டி என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
2 ஆண்டுக்கு பிறகு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் அதை காண லட்சக்கணக்கானோர் கூடினர். பார்வையாளர்கள் காலரியில் இருந்தும், வீடுகளின் மேல் பகுதிகளில் இருந்தும் மக்கள் ஜல்லி்க்கட்டை ரசித்தனர்.
மாவட்ட ஆட்சியர் வீரராகராவ், மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார்யாதவ், மாநகராட்சி ஆணையர் சந்தீப்நந்தூரி, விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டை ஒருங்கிணைத்தனர். 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 6 எல்.இ.டி., ஸ்கிரீன் மூலம் ஜல்லிக்கட்டு ஒளிபரப்பப்பட்டது.
காளைகள் நிற்கும் பகுதியில் சி.சி.டி.வி. கண்காணிப்பு, 13 மொபைல் மெடிக்கல் யூனிட்கள், கால்நடைகளுக்கு இரண்டு ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
பாலமேட்டில் பிப்ரவரி 5-ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 10-ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT