Published : 24 Feb 2017 11:29 AM
Last Updated : 24 Feb 2017 11:29 AM
கடலூர் மாவட்டத்தில் 400 சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடங்கள் மற்றும் 597 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்வதற்கான விண்ணப்பங்கள் வரப்பெற்று, அதற்கான நேர்முகத் தேர்வு நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், சமையல் உதவியாளர் 8-ம் வகுப்பை அடிப்படையாகக் கொண்டு நியமனம் நடைபெறவிருப்பதால் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் இல்லாததால், பெரும்பாலானோர் ஆளும் கட்சியின் நிர்வாகிகள் சிபாரிசுகள் மூலம் பணி நியமனம் பெற்று விட எண்ணியிருந்தனர். ஆனால் தற்போதைய சூழலில் ஆளும்கட்சியான அதிமுகவில் இரு பிரிவுகள் செயல்படுவதால், எந்த நிர்வாகியை அணுகுவது என்ற குழப்பம் விண்ணப்பதாரர்களிடம் நிலவுகிறது.
கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை மாவட்டச் செயலளாரைத் தவிர்த்து, அவருக்கு அடுத்த நிலையில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் ஓபிஎஸ் பக்கம் இருக்கினறனர். அவர்களை விண்ணப்பதாரர்கள் அணுகி வருகின்றனர். அவர்களோ அதிகாரத்தில் உள்ள மாவட்டச் செயலாளரை அணுக தயங்குகின்றனர்.
இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அவரவர் சார்ந்த பகுதிகளில் ஊராட்சி செயலர்களின் உதவியுடன் சத்துணவு அமைப்பாளரை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ். சத்துணவு அமைப்பாளர் நியமனங்களை தகுதி அடிப்படையில் நியமிக்க வேண்டும். சிபாரிசு கடிதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டாம் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம்.
அதிமுகவின் அதிகாரச் சண்டையால் செலவின்றி தங்களுக்கு பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர் விண்ணப்பதாரர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT