Published : 20 Apr 2017 05:58 PM
Last Updated : 20 Apr 2017 05:58 PM
வறட்சிக்குப் பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை ஆத்தி மரங்கள் நூற்றாண்டுகளைக் கடந்து வளர்ந்து வருகின்றது. இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்ககால தமிழக மூவேந்தர்களில் சேரருக்கு போந்தை எனும் பனம்பூவும், பாண்டியருக்கு வேப்பம்பூவும், சோழருக்கு ஆர் எனும் ஆத்தி மாலையும் குடிப்பூ அடையாளமாக இருந்துள்ளதாக தொல்காப்பியம் கூறுகிறது. ஆத்திப்பூ கண்ணியாகவும் மாலையாகவும் தொடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகே மேலக்கன்னிசேரி நிறைகுளத்து அய்யனார் கோயில் வளாகத்திலும் , சித்தார்கோட்டை வீரமாகாளி கோயிலில் அருகேயும் ஆத்தி மரங்கள் கோயில் மரங்களாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை பல நூற்றாண்டுகள் பழமையான மரங்கள்.
பாரம்பரிய தாவரங்கள் பற்றி ஆய்வு செய்து வரும் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு மைய தலைவர் வே.ராஜகுரு, செயலாளர் காளிமுத்து, ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப் பாண்டியன் ஆகியோர் இதுபற்றிக் கூறியதாவது,
அமைப்பு
ஆத்தி இலையுதிர் மரமாகும். கடும் வெப்பத்தையும் தாங்கி வளர்ந்திடும். 10 முதல் 15 மீட்டர் உயரம் வரையிலும் வளரக்கூடியது. சொரசொரப்புடன் கருமையான தண்டுடைய ஆத்தி மரத்தின் இலைகள் இரண்டாகப் பிரிந்த மடல்களுடன் காணப்படும்.
பிப்ரவரி மாதத்தில் இலையுதிர்க்கும். அடுத்த மாதத்திலேயே துளிர்த்து விடும். வெளிறிய மஞ்சள் நிறப் பூக்கள் கொண்ட இவை மார்ச் ஏப்ரல் மாதங்களில் பூத்து, ஆகஸ்டு முதல் பிப்ரவரி வரை காய்க்கும். இதன் காய்கள் திருகலாகவும் வளைந்து தகடு போன்ற வடிவிலும் இருக்கும். இதன் கருஞ்சிவப்பு நிற விதைகள் 10 வரை இந்நெற்றுகளில் இருக்கும். வறண்ட முல்லை நிலக் காடுகளில் காணப்படும் இவை சுமார் 4000 அடி உயரம் வரையிலான பகுதிகளில் வளரும் இயல்புடையன.
சீசல்பினாய்டியே எனும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இதன் தாவரவியல் பெயர் பாகினியா ரசிமோசா (Bauhinia racemosa) என சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(ஆத்தி காய்)
இலக்கியங்களில் ஆத்தி
குறிஞ்சிப்பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 மலர்களில் இது 67 வது மலர். நலங்கிள்ளி, பெருங்கிள்ளி என்ற இரு சோழமன்னர்கள் ஒருவருடன் ஒருவர் போர் புரிந்தபோது இருவரும் ஆத்தி மலரைச் சூடி இருந்ததாக கோவூர் கிழார் கூறுகிறார்.
அழகான ஆத்தி மாலையினை தலைமாலையாகச் சூடியவன் கரிகால் வளவன் என பொருநராற்றுப்படை கூறுகிறது. சோழ மன்னன் கோப்பெரு நற்கிள்ளி நாரால் தொடுக்கப்பட்ட ஆத்தி மாலையையும் இரவலர்க்கு வழங்கிவிடும் ஈகைத்திறன் உடைய வீரன் என சாத்தந்தையார் குறிப்பிடுகிறார். ஆத்தி மரத்தில் அம்பு எய்தி நார் உரித்துப் பயன்படுத்தியுள்ளனர்.
சோழன் ஆத்திமாலை அணிந்த மார்பையுடையன் என நற்றிணையில் பரணர் கூறுகிறார். இம்மரத்தின் பெயரால் ஆர்க்காடு, திருவாரூர், ஆர்ப்பாக்கம் ஆகிய ஊர்கள் உருவாகியுள்ளன.
மருத்துவச் சிறப்புகள்
இதன் தண்டின் பட்டை, தலைவலி, காய்ச்சல், தோல் நோய்கள், வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கும், இலைகள் வலிநிவாரணியாகவும், பூமொட்டுக்கள் வயிற்றுப் புண்ணுக்கு மருந்தாகவும் சித்த மருத்துவப் பயன்பாட்டில் உள்ளன.
சோழர் தொடர்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழங்கால நாட்டுப் பிரிவுகளில் கீழ்ச் செம்பி நாடு, வடதலைச் செம்பிநாடு, ஏழூர் செம்பி நாடு, மதுராந்தக வளநாடு போன்றவற்றின் மூலம் சோழ நாட்டுடனான தொடர்பு அறியப்படுகிறது. பிற்காலச் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் வணிகம் போன்ற பல காரணங்களுக்காக சோழநாட்டு மக்களின் குடியேற்றம் இப்பகுதிகளில் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் ஆத்தி மரம் இப்பகுதிகளில் வளர்க்கப்பட்டிருக்கலாம்.
வறட்சிக்குப் பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை ஆத்தி மரங்கள் நூற்றாண்டுகளைக் கடந்து வளர்ந்து வருகின்றது. இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT