Last Updated : 23 Mar, 2017 06:34 PM

 

Published : 23 Mar 2017 06:34 PM
Last Updated : 23 Mar 2017 06:34 PM

சென்னையில் வீட்டு வேலைச் சிறுமி சித்ரவதை: சமூக ஆர்வலர் வேதனை

சென்னை அண்ணாநகரில் 12 வயது சிறுமியை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தி, சித்ரவதை செய்த தம்பதி மீது இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்ணாநகரில் டி பிளாக் பகுதியில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் தமிழழகன் - தமிழரசி தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் 12 வயது சிறுமி வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார் என்பதை அறிந்த சைல்டு லைன் அமைப்பினர் காவல் உதவி ஆய்வாளர் உதவியுடன் சிறுமியை மீட்டனர்.

இந்த கொடுமைக்குக் காரணமான டாக்டர் தமிழழகன் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகிய இருவர் மீதும் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அங்கு வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதுகுறித்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கூர்நோக்ககத்தின் மாநில அமைப்பாளர் பேராசிரியர். ஆண்ரூ சேசுராஜ் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த குக்கிராமத்தில் இருந்த 12 வயது சிறுமி, சென்னை அண்ணாநகரில் உள்ள டாக்டர் தமிழழகன் இல்லத்தில் வீட்டு வேலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன்பாக அழைத்து வரப்பட்டார்.

கடந்த 3 ஆண்டுகளாக அதே வீட்டில் மாதம் ரூ.1000 சம்பளத்துக்கு அச்சிறுமி வேலை பார்த்து வந்திருக்கிறார். டாக்டர் தமிழழகனின் இரு குழந்தைகளுக்கும் தேவையான பணிவிடைகள் செய்வது, வீட்டு வேலை செய்வது, பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது, துணி மடிப்பது, கழிப்பறை சுத்தம் செய்வது என ஓய்வில்லாமல் வேலை கொடுத்து அச்சிறுமியைக் கொடுமைப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி அடிப்பது, கிள்ளுவது, சாதிப் பெயர் சொல்லி திட்டுவது உள்ளிட்ட சித்ரவதைகளையும் செய்துள்ளனர். இதனை அறிந்த சைல்டு லைன் அமைப்பினர் உரிய விசாரணை நடத்தி குழந்தையை மீட்டனர்.

14 வயது கூட நிறைவு பெறாத சிறுமி கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் படித்திருக்க வேண்டும். ஆனால், அச்சிறுமியைப் படிக்க வைக்கவில்லை. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டப்படியும் சிறுமியை வீட்டு வேலை செய்யச் சொல்லி கொடுமைப்படுத்தியது தவறு. ஒரு டாக்டராக இருக்கும் நபரே குழந்தையின் எதிர்காலத்தை முடக்கிவிட்டது வருத்தமாக உள்ளது.

அந்த 12 வயது சிறுமியை கிள்ளி, துன்புறுத்தியுள்ளனர். அதுகுறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவ சான்றிதழையும் காவல் நிலையத்தில் அளித்து அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மேல் காவல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொழிலாளர் நீதிமன்றத்திலும் வழக்காகப் பதிவு செய்ய முடியவில்லை. ஆளுங்கட்சியனரின் தலையீடு அதிகமாக உள்ளது.

சட்டப்படி, குழந்தையின் நலனுக்காகவும், மறுவாழ்வுக்காகவும் டாக்டர் தமிழழகன் ரூ,.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். படிப்பது, ஹாஸ்டலில் தங்குவது என சிறுமியின் விருப்பம் அறிந்து தமிழக அரசு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு.

தற்போது அச்சிறுமி கெல்லீஸில் உள்ள சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் நல குழுமத்தில் பாதுகாப்பாக உள்ளார். அந்தச் சிறுமியின் இளைய சகோதரி டாக்டர் தமிழழகனின் உறவினர் வீட்டில் கொத்தடிமையைப் போல வீட்டு வேலை செய்து வருகிறார். அந்தச் சிறுமியையும் மீட்க வேண்டிய பொறுப்பு உள்ளது'' என்றார்.

இது குறித்து டாக்டர் தமிழழகனிடம் பேசினோம். அவர் கூறுகையில், ''என்னிடம் யாரும் கருத்து கேட்காமலேயே தவறாக முடிவு செய்து விடுகின்றனர். ஒரு டாக்டராக இருந்துகொண்டு நான் இப்படிப்பட்ட செயல்களைச் செய்ய மாட்டேன். என் தாத்தா காலத்திலிருந்து அச்சிறுமியின் அப்பா-அம்மா எங்கள் வீட்டில் வேலை செய்தனர். அதனால் அச்சிறுமி எங்கள் வீட்டுக்கு வந்தார். 'நாங்கள் கூலித் தொழிலுக்காக வெவ்வேறு இடங்களில் அலைகிறோம்' என்று சொல்லி அவர்கள் அச்சிறுமியை எங்கள் வீட்டில் விட்டுச் சென்றனர். அச்சிறுமியை நான் என் மகளாகத்தான் பார்க்கிறேன்.

காரில் அழைத்துச் செல்வது, உணவு தருவது, பெட்டில் தூங்கச் செய்வது என்றே என் வீட்டில் அச்சிறுமி இருந்தார். ஏற்கெனவே என் வீட்டில் இரு பணிப் பெண்கள் உள்ளனர். அப்படி இருக்கும்போது நான் ஏன் அச்சிறுமியை வேலை செய்யச் சொல்கிறேன்? தெலுங்கு பேசும் சிறுமி என்பதால் இங்கு படிக்க வைக்க முடியவில்லை. என் மீதான குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை'' என்றார்.

எஃப்.ஐ.ஆர். வழக்குப் பதிவு செய்யப்பட்ட அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் கீதாவிடம் பேசுகையில், ''இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. டாக்டர் தமிழழகன் முன் ஜாமீன் பெற்றுள்ளார். சிறுமியின் பெற்றோர் ரோடு வேலைகளைச் செய்து வருவதால் எங்கு இருக்கிறார்கள் என்று இன்னும் தெரியவில்லை. அவர்களைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அவர்கள் வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x