Published : 19 Dec 2013 09:00 PM
Last Updated : 19 Dec 2013 09:00 PM
கூடங்குளம் அணுமின் நிலைய சுற்றுவட்டார கிராமங்களில் ரூ.200 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக, அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் ஆலோசனை நடத்தினார்.
திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பி. உமாமகேஸ்வரி, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.விஜயகுமார், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள ராதாபுரம் மற்றும் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில், ரூ. 200 கோடி திட்ட மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, தாமிரவருணி ஆற்றிலிருந்து குடிநீர் வழங்கும் திட்டம் தயார் செய்யப்பட்டு, நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின் விளக்குகள், மோட்டார் பம்புகள் அமைக்க ரூ. 5.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 200 இடங்களில் சூரிய ஒளி மின்சக்தி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 32 மோட்டார் பம்புகள் அமைக்கும் பணி நிறைவுபெற்றுள்ளது. ரூ. 6.63 கோடியில் கூடங்குளத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை நவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனையாக மாற்றுவதற்கான கட்டடங்கள் கட்டப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
உவரியில் ரூ. 57.50 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்ப்டடு வருகிறது. அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலைகள் மேம்பாட்டுக்காக ரூ.3.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் தொகையில் 7 சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதில் 4 பணிகள் நிறைவுபெற்றுள்ளது. மேலும் 23 ஊராட்சி சாலைகள் ரூ.4.94 கோடியில் வள்ளியூர் மற்றும் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் மேம்படுத்தப்படவுள்ளது.
10 ஆயிரம் காங்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ராதாபுரம், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியங்களில் 13 ஊராட்சிகளை சேர்ந்த மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 5 ஆயிரம் வீடுகளும், 2-ம் கட்டமாக 2014-15-ம் நிதியாண்டில் 3 ஆயிரம் வீடுகளும், 3-ம் கட்டமாக 2015-16-ம் நிதியாண்டில் 2 ஆயிரம் வீடுகளும் கட்டி வழங்கப்படும். தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இந்த வீடுகள் வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT