Published : 30 Sep 2013 10:28 PM
Last Updated : 30 Sep 2013 10:28 PM

முடிவுக்கு வந்தது இரட்டைக் குவளை முறை!

தஞ்சாவூர் ஈச்சங்கோட்டையில் நூறாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இரட்டைக் குவளை முறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் ஏற்பட்ட இந்த மனமாற்றம் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஒரத்தநாடு அருகேயுள்ள ஈச்சங்கோட்டை கடைத் தெருவில் 4 டீ கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் தலித்துகளுக்கு தனிக் குவளையில் டீ வழங்கப்பட்டதாம். இதேபோல, இங்குள்ள 3 சலூன் கடைகளிலும் தலித்துகளுக்கு முடி வெட்ட மறுத்து வந்தனராம். இதற்கு முடிவு கட்ட வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராடி வந்தது.

இந்த நிலையில், இதைக் கண்டித்து ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நிலவிய பண்ணை அடிமை மற்றும் சவுக்கடி, சாணிப் பால் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்த கம்யூனிஸ்ட் தலைவர் சீனிவாசராவின் நினைவு நாளான செப். 30-ம் தேதி ஈச்சங்கோட்டையில் தீண்டாமை எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவித்தது.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, சனிக்கிழமை (செப். 28) அரசு சார்பில் ஒரத்தநாடு வட்டாட்சியர் பானுகோபன், காவல் ஆய்வாளர் மகாதேவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலர் சின்னை பாண்டியன், நிர்வாகிகள் அபிமன்னன், சாமி. நடராஜன், ஜாதி இந்துக்கள் சார்பில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பஞ்சமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்டோர் அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

அப்போது, தீண்டாமை வழக்கம் எதுவும் இல்லை என்று ஜாதி இந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தலித் மக்கள் மறுத்தனர். இதையடுத்து, அரசுத் தரப்பினர் “தீண்டாமை வழக்கம் இல்லை என்று ஒரு தரப்பினரும், உள்ளது என்று ஒரு தரப்பினரும் கூறுகிறீர்கள். நாளை நாங்களே நேரில் வந்து பார்க்கிறோம் “ என்றனர்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (செப். 29) காலை வட்டாட்சியர் பானுகோபன், காவல் ஆய்வாளர் மகாதேவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலர் கணேசன், மாவட்டச் செயலர் சின்னை பாண்டியன், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ராஜ்மோகன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் கோ. நீலமேகம், ஒன்றியச் செயலர் சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் ஆறுமுகம், ஊராட்சி மன்றத் தலைவர் உலகநாதன், கிராமத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 20 தலித்துகளும், சுமார் 10 ஜாதி இந்துக்களும் ஒன்றாக டீ அருந்துவதற்காகச் சென்றனர்.

அப்போது, முதல் கடையில் கண்ணாடி டம்ளரில் அனைவருக்கும் டீ வழங்கப்பட்டு, ஒன்றாக அமர்ந்து குடித்தனர். இரண்டாவது கடையில் எவர்சில்வர் டம்ளரிலும், மூன்றாவது கடையில் பேப்பர் கப்பிலும் அனைவருக்கும் டீ வழங்கப்பட்டது. நான்காவது கடையின் உரிமையாளர் கடந்த சில நாள்களுக்கு முன்பாகவே கடையை பூட்டிவிட்டுச் சென்று விட்டாராம்.

அதைத்தொடர்ந்து, அங்குள்ள சலூன் கடைகளுக்கு அந்தக் குழுவினர் சென்றனர். முதல் கடையில் தலித் இளைஞர் ஒருவருக்கு ஷேவிங் செய்யப்பட்டது. அடுத்தடுத்த கடைகளில் தலித் இளைஞர்களுக்கு முடி வெட்டிவிடப்பட்டது. இந்த நிலையே தொடர வேண்டும் என அரசு அலுவலர்களும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரும் வலியுறுத்திச் சென்றனர்.

“சிறுவயதிலிருந்தே இந்தத் தொழிலில் இருக்கிறேன். தற்போது 80 வயதாகும் நான் இதுவரை தலித்துகளுக்கு முடி வெட்டியதில்லை.

இப்போதுதான் முதல் முறையாக முடி வெட்டியுள்ளேன்” என்றார் சலூன் கடை உரிமையாளர் வீராசாமி.

“எனக்கு 45 வயதாகிறது. விவரம் தெரிந்த நாளிலிருந்து எங்கள் ஊர் சலூன் கடைகளில் எங்களுக்கு முடி வெட்டியதில்லை. தொலைவில் உள்ள குருங்களத்துக்கோ, ஒரத்தநாட்டுக்கோ, தஞ்சாவூருக்கோ சென்றுதான் வெட்டி வந்தோம். இப்போது எங்களுக்கும் முடி வெட்டிவிடுவது மகிழ்ச்சி. இந்த மாற்றம் காலாகாலத்துக்கும் நீடிக்க வேண்டும் “ என்றார் இந்த ஊரைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x