Published : 26 Nov 2014 08:56 AM
Last Updated : 26 Nov 2014 08:56 AM
இனிமேல் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் விதிவிலக்கின்றி சிறப்புக் கட்டணம் வசூலிப்பதற்கு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விரைவில் அனுமதியளிக்க உள்ளது.
வங்கிப் பரிவர்த்தனைகளை எளிமையாக்குவதற்காகவும் வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் ஏ.டி.எம். மற்றும் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை சேவைகளை வங்கிகள் வழங்கி வருகின்றன. தொடக்கத்தில், அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம்.களில் அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம். கார்டுகளை மட்டுமே பயன்படுத்தி பணம் எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது.
அதன்பிறகு, எந்த ஏ.டி.எம்.மிலும் பணம் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு, மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்-களை மாதத்தில் 5 தவணைகளுக்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு தவணைக்கும் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் ஹெச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்கள் மாதத்தில் 5 தவணைகள் மட்டுமே ஏ.டி.எம்.களை இலவசமாக பயன்படுத்த முடியும். மேலதிக தவணைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்தன. இனி அடுத்த கட்டமாக, ஆன்லைன் மூலம் நடைபெறும் அனைத்து விதமான வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்க வங்கிகள் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தரப்பிலிருந்து ’தி இந்து’விடம் பேசியவர்கள் கூறியதாவது: வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகள், வெளியூர் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தினால் கமிஷன் பிடித்தம் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலானோர் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர்.
சினிமா டிக்கெட்டிலிருந்து டெலி ஷாப்பிங் வரை அனைத்துவிதமான பரிவர்த்தனைகளும் இப்போது ஆன்லைன் மூலம் எளிதில் செய்ய முடிகிறது. ஆனால், இந்தப் பரிவர்த்தனைகளுக்காக பெரும்பாலான வங்கிகள் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.
இந்தியா முழுவதும் தினமும் சுமார் 10 லட்சம் கோடிக்கு ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. இதில் ஒருவர் கணக்கிலிருந்து இன்னொருவர் கணக்குக்கு ஆன்லைனில் பணம் மாற்றப்படுவதற்கு தற்போது மிகக் குறைந்த அளவிலான கட்டணங்களை வங்கிகள் வசூலிக்கின்றன. ஒருசில பரிவர்த்தனைகள் கட்டணம் ஏதும் இல்லாமலும் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் ஏ.டி.எம். பயன்பாட்டுக்கு அனைத்து வங்கிகளும் கட்டணம் விதிக்கத் தொடங்கினால் ஆன்லைன் பரிவர்த்தனைகள் இன்னும் அதிகரிக்கக் கூடும். மேலும், குறைந்தபட்ச பண இருப்பு இல்லாத வங்கிக் கணக்குகளுக்கு அபராதம் வசூலிக்கக் கூடாது என அண்மையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகள் குறைந்தபட்ச பண இருப்பு கட்டுப்பாட்டை அமலில் வைத்திருப்பதால் சாமானியர்கள் வங்கிக் கணக்குத் தொடங்கத் தயங்குகிறார்கள். இதனால் இவர்களின் பரிவர்த்தனைகள் அனைத்தும் நேரடி கொடுக்கல் வாங்கல் மூலமே நடைபெறுகிறது. இந்த நிலைமையை தவிர்த்து அனைவரது பண பரிவர்த்தனைகளையும் வங்கிகள் மூலமாக நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் குறைந்தபட்ச பண இருப்பு முறையை ரத்து செய்ய அறிவுறுத்தி இருக்கிறது ரிசர்வ் வங்கி.
ஆனால், இந்த அறிவிப்பால் வங்கிகளுக்கு குறைந்தபட்ச பண இருப்பு இல்லாத கணக்கு களையும் அதிகம் பரிவர்த்தனை இல்லாத கணக்குகளையும் கையாள வேண்டிய பணிச்சுமை ஏற்படுகிறது. இதைக் கணக்கில் கொண்டு விதிவிலக்கு ஏதுமின்றி அனைத்து விதமான ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் சிறப்புக் கட்டணம் வசூலிக்க அனுமதி கேட்டு வங்கிகள் தரப்பிலிருந்து அண்மையில் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியும் இதை பரிசீலிப்பதாக உறுதி கொடுத்திருக்கிறது. எனவே விரைவில் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் சிறப்புக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வரலாம் என்று வங்கி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT