Published : 31 Mar 2015 03:49 PM
Last Updated : 31 Mar 2015 03:49 PM

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் நீட்டிப்பு சர்வாதிகார ஆட்சியின் ஜனநாயகப் படுகொலை: விஜயகாந்த்

"தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை ஓராண்டு காலத்துக்கும் மீதியுள்ள தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 6 மாத காலம் கலந்துகொள்ள கூடாது என்றும் அறிவித்து தேமுதிகவை தனிமைப்படுத்த அதிமுக பகல் கனவு காண்கிறது" விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற நீதி மொழியை சிறிதும் பொருட்படுத்தாமல், தான்தோன்றித்தனமாக, எடுத்தேன்-கவிழ்த்தேன் என்கின்ற பாணியில், ஆளும் கட்சி என்கின்ற அதிகார மமதையில், தமிழக சட்டமன்றத்திலுள்ள அனைத்து எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்த பின்பும் "செவிடன் காதில் ஊதிய சங்காக" ஜெயலலிதாவின் வழிகாட்டுதல் படி ஆட்சி நடத்தும் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், பிற அமைச்சர்களும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், தேமுதிக சட்டமன்ற உறுபினர்களை பழிவாங்க வேண்டும், அதன் மூலம் தேமுதிகவை தனிமைப்படுத்திவிடலாம் என பகல் கனவு காண்கின்றனர்.

அதனுடைய வெளிப்பாடே சட்டமன்றப்பேரவை தலைவரும், சட்டமன்றப்பேரவை செயலாளரும், ஜெயலலிதாவை தகுதி நீக்கம் செய்தது குறித்து வெளியிட்ட அறிவிக்கையில், அவர்கள் தெரிவித்த கருத்துக்களை சட்டமன்றத்தில் எடுத்துக் கூறியதற்காக இன்று (31.03.2015) மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலையை நிகழ்தியுள்ளனர்.

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், ஆர்.மோகன்ராஜ், எல்.வெங்கடேசன், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர், கே.தினகரன் ஆகிய ஆறுபேரையும் நடப்பு கூட்டத்தொடர், அடுத்த கூட்டத்தொடர் மற்றும் அக்கூட்டத்தொடர் முடிந்த பின் பத்து நாட்கள் வரையிலும், அதாவது சுமார் ஒரு ஆண்டுகாலம் இடைநீக்கம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நடைபெறவுள்ள கூட்டத்தொடர் முழுவதும், அதாவது சுமார் ஆறுமாத காலம் கலந்துகொள்ள கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சர்வாதிகார ஆட்சியின் ஜனநாயகப் படுகொலையை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு ஆண்டுகாலம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களின் தொகுதியில் மக்கள் பணி நடைபெறாது, பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து தெரிவிக்க முடியாது. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், விடுதியில் அவர்கள் தங்கியுள்ள குடியிருப்பு என அனைத்தும் மூடப்படும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும்.

ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்பிய தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களை சுமார் ஒரு ஆண்டுகாலம் இடைநீக்கம் செய்துள்ளது, அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு அதிமுக செய்கின்ற துரோகமாகவே இருக்கும்.

தமிழக வரலாற்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, நடைமுறையிலேயே இல்லாத, புதிய நடைமுறையாக ஒரு ஆண்டு இடைநீக்கம் என தண்டனை வழங்குவது தேமுதிகவிற்கு மட்டுமேயாகும். சட்டமன்றத்தில் எதிர்கட்சியே இருக்கக்கூடாது, கேள்வி கேட்பதற்கு ஆளே இருக்ககூடாது, ஜெயலலிதாவின் புகழ்பாடும் மன்றமாகத்தான் இருக்கவேண்டும் என்ற ஆணவத்தின் வெளிப்பாடு தான் மிகக்கடுமையான தண்டனை வழங்கியதற்கு காரணமாகும்.

மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து, வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்து, நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி தான், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதன் மூலம் அவரும், அவரது சகஅமைச்சர்களும் ரகசிய காப்பு உறுதிமொழியை மீறியுள்ளனர். மேலும் உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனையையும் ஜெயலலிதா மீறியுள்ளார். அதற்காக அவரது ஜாமீனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவேண்டும். ரகசிய காப்பு உறுதிமொழியை மீறியதற்காக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்.

அதிமுக எம்பி மைத்ரேயன் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களை கிழித்தெறிந்தும், மைக்கை உடைத்தும் வன்முறையில் ஈடுபட்டார். புதுச்சேரியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் மற்றும் சபாநாயகரை முற்றுகையிட்டு, சட்டமன்றத்திற்குள் அவர்கள் நுழையமுடியாத அளவில் வன்முறையில் ஈடுபட்டனர். கேரளா சட்டமன்றத்தில் மேசைகள், நாற்காலிகள், மைக்குகள் உடைக்கப்பட்டன, பலருக்கும் ரத்தகாயங்கள் ஏற்பட்டது.

அதேபோல் தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்திலும் பிரச்சனைகள் ஏற்பட்டது. அதில் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஐந்து முதல் பத்து நாட்கள் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. ஆனால் அதுபோன்ற சூழ்நிலை எதுவும் தமிழக சட்டமன்றத்தில் ஏற்படவில்லை.

சட்டமன்றத்திலும், அவை உரிமை குழுவிலும் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் ஆளும் அதிமுகவினர், சர்வாதிகார ஆட்சியை போல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மிகக்கடுமையான தண்டனையாக சுமார் ஒரு ஆண்டுகாலம் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுபேரும் இடைநீக்கம் என்பதை, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள, சட்டமன்ற மாண்புகளை காக்கும் எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

தமிழக சட்டமன்றத்தில் தேமுதிகவிற்காக குரல் எழுப்பி, வெளிநடப்பு செய்த அனைத்து எதிர்கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x