Published : 22 Mar 2015 10:01 AM
Last Updated : 22 Mar 2015 10:01 AM

மேகேதாட்டு அணை, மீத்தேன் திட்டங்களுக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் 28-ம் தேதி முழு அடைப்பு - அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறும், மீத்தேன் திட்டத்தை முழுமையாக கைவிடுமாறும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்த சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மேகேதாட்டு என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் நடவடிக்கையில் அம்மாநில அரசு ஈடுபட்டுள்ளது. அங்கு அணை கட்டப்பட்டால் காவிரி நீர் வரத்து குறையும் என்ற அச்சம் தமிழக விவசாயிகள் மத்தியில் உள்ளது. இதேபோல, காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டமும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தை ரத்து செய்யுமாறு பல்வேறு கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், காவிரி டெல்டா விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று நடந்தது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்துக்கு, குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், திராவிடர் கழகம் உட்பட பல்வேறு அமைப்புகள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதிமுக பங்கேற்க வில்லை. கூட்டத்தில் கொண்டுவரப் பட்ட தீர்மானம் வருமாறு:

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதிக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும். காவிரி டெல்டா பகுதியை ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் அணைகளைக் கட்டும் கர்நாடக அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலாண்மை வாரியம்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்குமுறைக் குழு ஆகிய தன்னாட்சி பெற்ற அமைப்புகளை உடனே அமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வலியுறுத்தி மார்ச் 28-ம் தேதி (சனிக்கிழமை) தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

பாஜக எதிர்ப்பு

கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முழு அடைப்புப் போராட்டம் தேவையில்லை என்று கூறினார். மற்ற அனைவரும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித் தனர். இதையடுத்து, தமிழகத் தில் வரும் 28-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்துவ தாக முடிவு செய்யப்பட்டது. இப்போராட்டத்துக்கு தமிழக அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்

டி.கே.எஸ்.இளங்கோவன் (திமுக), திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), உ.பலராமன் (காங்கிரஸ்), பி.எஸ்.ஞானதேசிகன் (தமாகா), ஆர்.வேலு (பாமக), பால அருட்செல்வன் எம்எல்ஏ (தேமுதிக), மல்லை சத்யா (மதிமுக), எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ (மனிதநேய மக்கள் கட்சி), ஏ.நாராயணன் எம்எல்ஏ (சமத்துவ மக்கள் கட்சி), கலி.பூங்குன்றன் (திராவிடர் கழகம்), டாக்டர் ந.சேதுராமன் (மூவேந்தர் முன்னணி கழகம்), எம்.எஸ்.ராஜேந்திரன் (ஐஜேகே), வி.பி.மணி (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு), தி.தர் (காவிரி டெல்டா பாசன விவசாய சங்கம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x