Published : 13 May 2016 03:41 PM
Last Updated : 13 May 2016 03:41 PM
தேர்தல் காலங்களில் முதல் முறையாக களம் காணும் கட்சிகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் மாவட்டமாக கடலூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள் விளங்குகின்றன.
தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கின்றன.தேர்தல் நேரத்தில் சில கட்சிகள் தோன்றுவதும், அவைகளில் சில கட்சிகள் வெற்றிக் கனியை பறிக்கும். பல கட்சிகள் காலப் போக்கில் காணாமல் போய்விடும். ஒருவேளை வெற்றி பெற்றாலும் அந்தக் கட்சிகளின் தலைவர்கள் மாற்றுக் கட்சிகளில் ஐக்கியமாகி வாழ்வாதரம் தேடுவார்கள். இதையெல்லாம் தாண்டி ஒரு சில கட்சிகள் மட்டுமே நிலைத்து நின்று தமிழக அரசியல் களத்தில் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவாகியிருக்கின்றன.
அந்தக் கட்சிகளில் குறிப்பிடும்படியாக பாமக, விடுதலைச்சிறுத்தைகள், தேமுதிக கட்சிகளைக் குறிப்பிடலாம்.
இந்தக் கட்சிகளுக்குப் பின்னால் ஒரு சுவராஸ்யமான தகவல்கள் உண்டு.
ஆம்... மேற்குறிப்பிட்ட கட்சிகள் அனைத்துக்கும் சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்த தொகுதிகளாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டப்பேரவைத் தொகுதிள் உள்ளன.
1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜீவ்காந்தி அனுதாப அலையில் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் முதன்முறையாக தனித்து களமிறங்கிய பாமகவுக்கு பண்ருட்டித் தொகுதி மூலம் பண்ருட்டி ராமச்சந்திரன் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, அக்கட்சியின் அப்போதைய சின்னமான யானை மீது ஏறி பேரவைக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். பாமகவை பற்றி பட்டிதொட்டியெல்லாம் பேசும்படியானதற்கு களம் அமைத்து கொடுத்தது கடலூர் மாவட்டம்.
1999-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த மூப்பனார் வலியுறுத்தலின் பேரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் களத்துக்கு வந்தது. 1999 லோக்சபா தேர்தலில் சிதம்பரம் மற்றும் பெரம்பலூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிட்டது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தொல். திருமாவளவன், 2,25,000 வாக்குகளைப் பெற்றபோதும் தோல்வியைத் தழுவியிருந்தார். அடுத்து 2001 தேர்தலின் போது திமுக கூட்டணியோடு முதன்முறையாக விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் களம் கண்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் சென்றார். திருமாவளவனுக்கு களம் அமைத்து கொடுத்தது கடலூர் மாவட்டமே.
2006 தேர்தலின் போது முதன்முறையாக தேர்தலை சந்தித்த தேமுதிக 234 தொகுதிகளிலும் வேட்பாளரை களமிறக்கியது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் விருத்தாசலத்தில் போட்டியிட்டார்.அந்த்த தேர்தலில் அவர் மட்டுமே வெற்றி கண்டார்.
தற்போது நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் வேட்பாளரை களமிறக்கியுள்ளது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேற்கண்ட பாமக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் கடலூர் மாவட்டத்தை தேர்வு செய்ததில் சாதிய பின்னனி இருந்தது.சாதிய பின்னனி இல்லாமல் விதிவிலக்காக விஜயகாந்த் விருத்தாசலத்தில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். தற்போது சீமானும், விஜயகாந்தை பின்பற்றி தனது தேர்தல் பயணத்தை துவக்கியிருக்கிறார்.
இதுதொடர்பாக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான தங்கர்பச்சான் கூறும்போது, ''பண்ருட்டி ராமச்சந்திரன் தொகுதியில் நன்கு அறிமுகமானவர். வலுவான ஒரு சாதிய பின்னனியாக மட்டும் அவரை பார்க்க முடியாது, பழுத்த அரசியல்வாதி. அந்த நேரத்தில் அவரை பாமக சரியாகப் பயன்படுத்தியது. திருமாவளவனுக்கு பூர்வீகமே மங்களூர் என்பதால் அவர் அங்கு போட்டியிட்டு வெற்றி பெறுவதில் வியப்பில்லை. ஆனால் விஜயகாந்த் அப்படியல்ல, அவர் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றது ஆச்சர்யம்தான். அவரது தொடக்கக் கால ரசிகர்கள் இந்த மாவட்டத்தில்தான் அதிகம். வெற்றிக்கு அதுவும் காரணம். மேலும் புதிதாக ஒருவர் நட்சத்திர அந்தஸ்தோடு வரும்போது அவரிடமிருந்து எதிர்பார்ப்புகளை எதிர்நோக்குவது இயல்பு. இதில் சென்டிமெண்ட் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
முனைவர் எஸ்.தியாகராஜன்,ஓய்வுபெற்ற கல்லூரி தமிழ் பேராசிரியர்
பொதுவாக இந்த மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்கள் அதிகம்.அப்படியெனும் போது, எதிர்பார்ப்புகள் ஏராளம். அதிலும் இன்றைய இளைஞர்களின் எளிதில் வயப்படக்கூடியவர்களாக உள்ளனர்.அவர்கள் சொல் வீச்சுகளுக்கும், திரைப்பட நிகழ்வுகளைக் கூட நிஜமாகக் கருதும் மனப்பான்மையில் திளைப்பதால் புதியவர்களுக்கு கடலூர் சிறந்த களத்தை அமைத்துக் கொடுப்பதாகத் தான் கருதுகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT