Published : 16 Nov 2014 11:06 AM
Last Updated : 16 Nov 2014 11:06 AM
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது எத்திலப்பன்பட்டி. இங்கு 330 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியைச் சுற்றி பட்டாசு ஆலைகளும் இயங்கி வருகின்றன. எத்திலப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும் பிற தனியார் நிறுவனங்களுக்கும் வேலைக்குச் செல்வது வழக்கம்.
ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் பெண்கள் உட்பட பெரும்பாலானோர் பட்டாசுத் தொழிற்சாலை வேலைகளுக்கு செல்வதில்லை. ஆனாலும், குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட வேண்டும் என்பதற்காக, பக்தர்கள் அணியும் மாலைகளை கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கி மாலை அணியும் கார்த்திகை முதல் தேதி நாளை (நவ. 17) பிறப்பதாலும், ருத்ராட்சம், துளசி, சந்தன மற்றும் மணி மாலைகளுக்கான தேவை அதிகமாகி உள்ளது. இதனால், எத்திலப்பன்பட்டி கிராம மக்கள் மணிமாலைகள் கட்டும் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாரம்பரியத் தொழில்
இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (63) என்பவர் கூறியதாவது: சிறு வயதிலிருந்தே மணி மாலை கட்டும் தொழில்தான் செய்து வருகிறேன். மணி மாலைகள் கட்டுவதையே எங்கள் குடும்பத்தினர் பாரம்பரியமாகச் செய்து வருகிறோம்.
108 மணிகள் கொண்ட மாலை பின்னிக்கொடுத்தால் ரூ.7 முதல் ரூ.8 வரை கூலி கிடைக்கும். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 மாலைகள் வரை பின்ன முடியும் என்றார்.
வெளிமாநிலங்களுக்கு..
மணி மாலைகள் மொத்த வியாபாரம் செய்யும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறியபோது, இக்கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மணி மாலைகள் கட்டும் வேலை செய்துவருகிறார்கள். அவருக்கு மணிகள் கொடுத்து, மாலையாகக் கட்டிக்கொடுத்தவுடன் அவர்களுக்கு கூலியும் கொடுத்துவிடுவோம். ஐயப்ப பக்தர்கள் மாலை அணியும் கார்த்திகை 1-ம் தேதி தொடங்குவதால் துளசி மணி மாலை, சந்தன மாலை, ருத்ராட்ச பூ மாலைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.
இங்கு பின்னப்படும் மணி மாலைகளும், அதிலுள்ள மணிகளும் தரமானதாக இருக்கும் என்பதால், தமிழகம் மட்டுமின்றி ஆந்திரம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது என்றார்.
அரசே கொள்முதல் செய்யவேண்டும்
அப்பகுதியைச் சேர்ந்த மணிமாலை கட்டும் சீனிவாசன் கூறியதாவது: தொழில் போட்டி மற்றும் பின்னி முடிக்கப்பட்ட மணி மாலைகளை எப்படியும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் வியாபாரிகள் விற்றே ஆக வேண்டும் என்பதால் விலையைக் குறைத்து மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். இதனால், மணிமாலை கட்டும் தொழில் நலிந்து வருகிறது.
எனவே, மணிமாலை கட்டும் தொழிலாளர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கவும், விற்பனையாளர்களுக்கு உரிய விலை கிடைக்கவும் இங்கு பின்னப்படும் தரமான மணி மாலைகளுக்கு ஒரு குறிப்பிட்ட விலை நிர்ணயித்து சர்வோதய சங்கங்கள் மூலம் அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இத்தொழிலை குடிசைத் தொழிலாக அங்கீகரித்து அரசு வங்கிக் கடன் வழங்கி உதவினால் இத்தொழிலை நம்பியிருக்கும் ஏராளமான குடும்பங்களின் வாழ்வும் சிறக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT