Published : 08 Jan 2014 08:13 PM
Last Updated : 08 Jan 2014 08:13 PM
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து இந்து ஆலயங்கள் அனைத்தையும் மீட்பதற்காக விரைவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம் என்று பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த வி.எஸ்.சந்திரலேகா தெரிவித்தார்.
வி.எஸ்.சந்திரலேகா செவ்வாய்க்கிழமை மதுரை ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பெரியாறு கால்வாய் பாசனத்தால் பயன்பெறும் பகுதிகளில் மேலூர் பகுதிக்கு மட்டும் தண்ணீர் திறப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு 203 நாள்களும், பி.டி.ஆர். கால்வாயில் 94 நாள்களும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், மேலூர்- திருமங்கலம் பிரதான கால்வாயில் வெறுமனே 50 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, கூடுதலாக 5 நாள்கள் தண்ணீர் திறக்கக் கோரி மனு கொடுத்துள்ளேன்.
நான் ஆட்சியராக இருந்த காலத்தில் பெரியாறு அணையில் 116 அடி தண்ணீர் இருந்த போதுகூட, துணிச்சலாக முடிவெடுத்து தண்ணீர் திறக்க வைத்தோம். அதற்குப்பிறகு மழையும் பெய்தது. இப்போதும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். எனவே, 3 நாள்கள் மட்டுமாவது தண்ணீர் திறக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன்.
ஆட்சியர் என்ன சொன்னார்?
அவரது முக்கிய கவலை குடிநீர் பற்றியதாக இருக்கிறது. குடிநீரும் அவசியம்தான். விவசாயிகளையும் கருத்தில்கொள்ள வேண்டும். இது ஒரு ஆட்சியர் மட்டும் எடுக்கிற முடிவு இல்லை என்பதால், அதற்கு அரசாங்கமும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
வருகிற தேர்தலில் நீங்கள் மதுரையில் போட்டியிடுவீர்களா?
அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. ஏன்னா நான் பா.ஜ.க.வில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.
சிதம்பரம் கோயில் தொடர்பான வழக்கில் தமிழை நீசபாசை என்று சொன்னதாகக் கூறி, மதுரையில் சுப்பிரமணியன் சுவாமியின் உருவப்படத்தை எரித்துள்ளார்களே?
தமிழ் நீசபாசை என்று எல்லாம் யாரும் சொல்லவில்லை. அங்கு தேவாரம், திருவாசகத்தைப் பாடவிடுவதில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. இவர்கள் எல்லாம் வேண்டும் என்றே, போட்டிக்காக ஒரு குறிப்பிட்ட பூஜை நடக்கிறபோது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுபாட வேண்டும் என்கிறார்கள். அந்த இடத்தில் பாடுவது பாரம்பரிய மரபாக இல்லை. நானும் தென்னாற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்திருக்கிறேன். தீட்சிதர்கள் கோயிலை நிர்வகிக்க நல்ல முறையைக் கையாள்கின்றனர்.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கோயிலை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே?
ஒரு கோயிலில் நிர்வாகம் சரியாக அமையவில்லை, தவறான நிர்வகிக்கப்படுகிறது என்று புகார் வந்தால் தற்காலிகமாக அரசாங்கம் நிர்வாக அதிகாரியைப் போடலாம் என்றுதான் இந்து அறநிலையத் துறை சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கோயிலை நிரந்தரமாக அறநிலையத் துறையே வைத்திருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் அந்தந்த மதத்தினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனால், இந்து கோயில்கள் மட்டும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உண்டியலில் பணம் போடும் பக்தர்கள், அது கோயில் சம்பந்தப்பட்ட திருப்பணிகளுக்குப் பயன்பட வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். ஆனால், அரசாங்கம் கோயில் நிர்வாகத்துக்குப் போக மீதித் தொகையை பொது நிதிக்கு கொண்டு சென்று, மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்துகிறது. அரசு திட்டங்களுக்காக யாரும் கோயில் உண்டியலில் பணம் போடுவதில்லை. எனவே, கோயில்களை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டு, உண்மையான இறைநம்பிக்கை உள்ளவர்கள், ஆதீனங்கள் போன்றோரை வைத்து நிர்வாகம் நடத்த வேண்டும். இதுதொடர்பாகவும் வழக்குத் தொடர இருக்கிறோம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொருளாதார தீண்டாமை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
கோயில்களுக்குள் எல்லாரும் போக உரிமை இருக்கணும். ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இருக்கக் கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை மீட்டால்தான் இதை எல்லாம் சரி செய்ய முடியும் என்றார்.
பின்னர் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்ற அவர், இந்துக் கடவுள்களை இழிவாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT