Published : 04 Nov 2013 09:49 AM
Last Updated : 04 Nov 2013 09:49 AM
தீபாவளிப் பண்டிகையையொட்டி கடந்த மூன்று தினங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ரூ.300 கோடியைத் தாண்டியது. சென்னையில் கடும் கெடுபிடி காரணமாக விற்பனை குறைந்துவிட்டது.
தமிழகம் முழுவதும் 6,896 டாஸ்மாக் மது விற்பனைக் கடைகள் உள்ளன. இவற்றில் சாதாரண நாட்களைவிட தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை தினங்களில் விற்பனை கணிசமாக அதிகரிக்கும். அதுபோல், இந்த தீபாவளியின்போதும் மது விற்பனை அதிகரித்துள்ளது.
முன்பெல்லாம், பண்டிகை தினங்களில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகாரிகள் விற்பனை இலக்கு நிர்ணயிப்பார்கள். தற்போது அந்த நிலை இல்லை என்பதால் ஊழியர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.
மது விற்பனை குறைவு
இந்த ஆண்டு இலக்கு நிர்ணயிக்காவிட்டாலும் வழக்கம்போல் விற்பனை அதிகமாகவே இருந்தது. தீபாவளியன்றும், அதற்கு முந்தைய தினமும் சேர்த்து தமிழகத்தில் ரூ.230 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை ஆனதாக டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர். தீபாவளி யன்று மட்டும் ரூ.150 கோடிக்கு விற்பனையானதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு மறுநாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் அன்றும் வழக்கம்போல ரூ.85 கோடிக்கு மேல் விற்பனை இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக டாஸ்மாக் அதிகாரி கள் தெரிவித்தனர். எனவே, தீபாவளியையொட்டி 3 நாள்களில் மது விற்பனை ரூ.300 கோடியை தாண்டிவிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு, தீபாவளி பண்டிகையின்போது மது விற்பனை ரூ.250 கோடி அளவுக்குதான் இருந்தது.
அதே நேரத்தில் விற்பனையான மது அளவை ஒப்பிடும்போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவுதான். என்றாலும் மது பானங்களின் விலை உயர்த்தப்பட்டதால், வருவாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் குறைவு
“சாதாரணமாக, ஒரு நாளில் டாஸ்மாக் கடைகளில் ரூ.67 கோடி முதல் ரூ.70 கோடி வரை விற்பனையாகி வருகிறது. வார விடுமுறை நாளில் இது ரூ.90 கோடி வரை இருக்கும். தீபாவளி யன்றும், அதற்கு முந்தைய தினத்தையும் சேர்த்து ரூ.230 கோடிக்கும் அதிகமாக விற்பனை நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை விற்பனையையும் சேர்த்தால் இது ரூ.300 கோடிக்கும் அதிகமாக உயரக்கூடும். சென்னையில் இரவு நேர போலீஸ் கெடுபிடி, குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி மது விற்பனை செய்ய முடியாதது போன்ற காரணங்களால் விற்பனை சற்று குறைந்தது” என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மக்களிடம் விழிப்பு உணர்வு
இந்த ஆண்டு தீபாவளிக்கு வருவாய் அதிகரித்திருந்தாலும், மது அளவு (பெட்டிகள்) சற்று குறைவுதான். 2004-05-ல் 33 சதவீதமாக இருந்த மது விற்பனை வளர்ச்சி விகிதம் கடந்த நிதியாண்டில் (2012-13) 19.91 சதவீதமாக குறைந்திருந்தது. எனினும், வருவாய் மட்டும் ஆறு மடங்கு உயர்ந்துள்ளது (2004-05ல் வருவாய் ரூ.3,599 கோடி, 2012-13-ல் வருவாய் 21,680 கோடி). குடிப்பழக்கம் பற்றியும், அதனால் ஏற்படும் விபத்துக்கள் பற்றியும் மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்பு உணர்வு காரணமாக மது விற்பனை குறைந்து வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT