Published : 28 Oct 2013 04:04 PM
Last Updated : 28 Oct 2013 04:04 PM

பசுமைக்கு வித்திடவே சிற்றுந்துகளில் இலை ஓவியம்: அமைச்சர்

பசுமைக்கு வித்திடும் வகையில்தான், சென்னை சிற்றுந்துகளில் இலைகளின் அடையாளமான ஓவியம் தீட்டப்பட்டுள்ளதே தவிர, அவை அதிமுக சின்னம் அல்ல என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் அவர் இன்று அளித்த விளக்கம்:

“தமிழக முதல்வர் ஜெயலலிதா 23.10.2013 அன்று 50 புதிய சிற்றுந்துகளையும், 610 புதிய பேருந்துகளையும் துவக்கி வைத்தார்கள். 50 சிற்றுந்துகளில் 4 நாட்களில் மட்டும் 1,13,149 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதற்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள அமோக வரவேற்பை தி.மு.க. தலைவர் கருணாநிதியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, சிற்றுந்துகளில் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் சின்னம் வரையப்பட்டுள்ளது என்ற ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் கொடுக்க வைத்துள்ளார் கருணாநிதி.

சிற்றுந்துகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமான “இரட்டை இலை” பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, புகைப்படங்களுடன் 25.10.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தி.மு.க. உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

முதல்வர் ஜெயலலிதாவால் சென்னை மாநகரில் துவக்கி வைக்கப்பட்ட புதிய சிற்றுந்துகள் மக்களுக்கு நன்மை பயக்கிறதா, மக்கள் பலன் அடைகிறார்களா என்பதைப் பார்க்காமல், அந்த சிற்றுந்துகளில் வரையப்பட்டுள்ள பசுமையான சூழலையும், இலையையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தோடு இணைத்துப் பேசுவது, குற்றம்சாட்டுவது “தேவைதானா” என்பதை தி.மு.க. உறுப்பினர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முதல்வரின் ஆட்சி பற்றி குறை சொல்ல ஒன்றும் இல்லை என்ற காரணத்தினால், இங்கே ஏதாவது நடத்திப் பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருக்கிறார்களோ என்ற ஐயம் தான் எழுகிறது.

தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்று பேசுவதை தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தி.மு.க. உறுப்பினர்களும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையின் சாதனை - போக்குவரத்துத்துறையின் அனைத்து சொத்துக்களும் வங்கியில் அடமானம், திவாலாகிப்போன போக்குவரத்துத்துறை என்பதை நாடு அறியும், தொழிலாளர்கள் அறிவார்கள். தமிழக போக்குவரத்துத்துறை இன்று வளர்ச்சிப் பாதையை நோக்கி பீடுநடை போடுகிறது.

இயக்க பேருந்துகளின் எண்ணிக்கை திமுக ஆட்சியில் 19,110. இன்று 20,5843. திமுக ஆட்சி காலத்தில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் ஆண்டு சராசரி விபத்துக்களின் எண்ணிக்கை 8,232. இன்று அரசின் சீரிய நடவடிக்கையால் ஆண்டுக்கு 6,763-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், பேருந்துகளில் இடம்பெற்றுள்ள வண்ணப் படங்கள் தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்த பல்வேறு இலைகளின் அடையாளம். அது கட்சி சின்னத்தை குறிப்பது அல்ல. வீட்டிற்கு விருந்தாளி வந்தால் உணவு தர படைப்பது வாழை இலை. உணவில் வாசத்தை ஏற்படுத்துவது கருவேப்பிலை. உணவாகவே சமைக்கப்படுவது கீரை இலை. சாப்பிட்ட பிறகு போடுவது வெற்றிலை. வீட்டு வாசலில் அலங்கரிப்பது மா-இலை. மனிதனின் நோய் போக்குவது துளசி இலை. இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்தது இலை.

இப்படி, மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இலையின் அலை பற்றி, ஆத்திரத்தோடு, உண்மைக்கு மாறாக திரித்துச் சொல்லும் தி.மு.க.வினருக்கு சிலவற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். இது காலத்தின் கட்டாயம். அரசு சிமெண்ட் பைகளில் உதயசூரியன் படம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு “கலைஞர் காப்பீடு திட்டம்” என்று பெயர் சூட்டிக் தேடிக்கொண்டவர்களுக்கு சொல்ல வேண்டியது அவசியம் ஆகும்.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்”. மஞ்சள் காமாலை கண்ணுக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சள். கேட்டவற்றை, சிந்திப்பதை தெளிவுற விசாரித்து பகுத்து ஆராய்வது ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க வேண்டிய பண்பு.

சென்னை மாநகரில், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்த சிற்றுந்துகளின் எண்ணிக்கை 50. ஆனால், உறுப்பினர் ஸ்டாலின் 25.10.2013 அன்று அவைக்கு வெளியே, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அரசுப் பேருந்துகளில் அதிமுகவினுடைய சின்னத்தை இன்றைக்கு போட்டு 500 பேருந்துகளை நேற்றைய முன்தினம் முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார்கள். அதிலே 500 பேருந்துகள் சென்னையிலே விடப்பட்டிருக்கிறது. ஆக அனைத்துப் பேருந்துகளிலும் அதிமுகவினுடைய சின்னத்தை பதித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

கற்பனையாக, கதை வசனமாக, முன்னுக்கு பின் முரணாக, தவறான தகவல்களை இந்த சபைக்கும், ஊடகத்தினை சார்ந்த செய்தியாளர்களுக்கும் தந்து கொண்டு இருக்கிறார்கள் தி.மு.க வினர்.

இந்த மண்ணின் மரமார்ந்த விஷயம் “இலை”. மண்ணையும், மழையையும், காப்பது மரம். மரத்தின் அங்கமாக திகழ்வது “இலை”. மரமும் இலையும் இல்லை என்றால் காற்று இல்லை, காற்று இல்லை என்றால் பசுமை இல்லை. மண்ணின் பெருமையை, தமிழர்களின் மரபை, மங்கல அடையாளத்தை, பசுமைப் புரட்சியை ஏற்படுத்தும் இலைகளின் சிறப்பை நல்ல நோக்கில் சென்னை மாநகரில் மூலைமுடுக்கெல்லாம் செல்லும் சிற்றுந்துகளில் இலைகளின் கலைநயத்தோடு கூடிய நான்கு, நான்கு இலைகள் ஓவியமாக இடம்பெற்று இருப்பது பசுமைக்கு வித்திடும் செடிகளின் இலைகளின் அடையாளமான ஓவியமே தவிர, கட்சி சின்னம் அல்ல.

மக்கள் கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மனங்களுக்கு இதமாகவும் சிற்றுந்துகள் விளங்க வேண்டும் என்பதற்காக பசுமையின் விளக்கமாக சிற்றுந்துகளில் இலைகள் வரையப்பட்டுள்ளனவே தவிர, அதில் உள்ளவை கழகத்தின் சின்னமாம் “இரட்டை இலை” இல்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் தங்கள் வாயிலாக தெள்ளத் தெளிவாக, உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x