Published : 26 May 2017 10:40 AM
Last Updated : 26 May 2017 10:40 AM

‘தர்மத்தின் தலைவா... போருக்கு நாங்கள் தயார்’ - ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்

‘தர்மத்தின் தலைவா போருக்கு நாங்கள் தயார்’ என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டி ரஜினியை அரசியலுக்கு வருமாறு மதுரை ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சென்னையில் ரசிகர்களை சந்தித்த ரஜினி, ஆண்டவன் கட்டளையிட்டால் அரசிலுக்கு வருவேன், தற்போது அதற்கான சூழல் இல்லை, என்றும், போர் (அரசியல் களம்) வரும் வரை காத்திருங்கள், அதுவரை சொந்த வேலையைப் பாருங்கள், போர் வரும்போது அழைக்கிறேன் என்றார்.

முன்பெல்லாம் ரஜனி, ‘நான் எப்போது வருவேன், எப்படி வருவேனு தெரியாது, ஆனால், வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேனு’ சூசகமாக அவரது படங்களில் கூறியபோதே அவரை அரசியலுக்கு அழைத்து பிரம்மாண்ட போஸ்டர்களையும், அதில் பொதுமக்களை கவரும், அரசியல்வாதிகளை வெறுப் பேற்றும் அரசியல் வாசகங்களையும் குறிப்பிட்டு அசத்துவார்கள். தற்போது ரஜினியே போருக்கு(அரசியலுக்கு) தயாராக இருங்கள், போர் வரும்போது அழைக்கிறேனு நேரடியாக சொன்னதால் மதுரையில் அவரது ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதாகவே கருதி கொண்டாடி வருகிறார்கள்.

அதனால், அவரை அரசியலுக்கு அழைத்து மதுரை நகரில் மட்டுமில்லாது கிராமங்களிலும் போஸ்டர்களை ஒட்டி ரஜினியை கொண்டாடி வருகிறார்கள். ஜெயலலிதா மறைவு, உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிற்குள் முடங்கிய கருணாநிதி என தமிழக அரசியல் பரபரப்பில்லாமல் மந்தமாக நகர்ந்தது. தற்போது ரஜினியின் பேச்சும், அதற்கு அவரது ரசிகளின் எதிர்வினையும், தமிழக அரசியல் களத்தை மீண்டும் சூடு பிடிக்க வைத்துள்ளது.

இதுகுறித்து மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ரஜினி ரசிகர் சரவணன் கூறுகையில், ‘‘2004-ல் நேரடியாக எங்களை(மதுரை ரசிகர்கள்) கூப்பிட்டு பேசுகையில், எந்தசூழலிலும் எங்கேயும்(மற்ற கட்சிகளுக்கு) போய்விடாதீர்கள். கைவிட மாட்டேன். நீங்கள் நினைப்பது நடக்கும் என்றார். அதை இப்போது நிறை வேற்றுவாருனு நினைக்கிறோம். அதைதான் அவர் போருக்கு தயாராக இருங்கள் என்று எங்களை சொல்லியுள்ளார்.

அந்த வாசகத்தை, வாக்குறுதியை நம்பிதான் எல்லா ரசிகர்களை ஒருங் கிணைக்கும் வகையில் போஸ்டர்களை ஒட்டி வருகிறோம் என்றார்.

மதுரை ரசிகர்களை எப்போது சந்திப்பார்?

மற்றொரு ரசிகர் விஜயன் கூறுகையில், ஜூன் 18க்கு மேல் மீதி 15 மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்திக்க உள்ளார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நேரடியாக அவரிடம் அரசியலுக்கு வாங்கனு சொல்வோம். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை ரஜினியால் மட்டுமே நிரப்ப முடியும். மக்களும் அவரை ஏற்றுக் கொள்ளுவார்கள். நாங்கள் மட்டுமில்ல, மக்களே அவரை ‘ஏன் வரவில்லை’யென்றுதானே கேட்கிறார்கள். அதனால்தான் அவரது பேச்சுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. மக்களிடம் எதிர்பார்ப்பு இல்லாவிட்டால் வரவேற்பு கிடைத்து இருக்காது என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x