Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM

என்எல்சி தொழிலாளியை சுட்டது ஏன்? சிஐஎஸ்எப் படைவீரர் வாக்குமூலம்

நெய்வேலியில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளி சுடப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சிஐஎஸ்எப் வீரர் முகமத்நோமனிடம் மந்தாரக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணத்தை வாக்குமூலமாக அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: 2-ம் சுரங்க நுழைவாயிலுக்கு வந்த அந்த நபர், தள்ளாடியபடியே உள்ளே செல்ல வேண்டும் எனக் கூறினார். மொழிப்பிரச்சினையால், சைகையால் அவரிடம் அடையாள அட்டைக் கேட்டபோது, காலாவதியான அடையாள அட்டையைக் காண்பித்தார். அதனை ஏற்க மறுத்து, அனுப்ப முடியாது என்று கூறினேன். அவர் விடாப்பிடியாக நின்றுகொண்டு என்னை கிண்டல் செய்து கொண்டும், துப்பாக்கி வைத்திருந்தால் என்ன சுட்டு விடுவாயா, எங்கே சுடு பார்ப்போம் என கேலி செய்த வண்ணம் இருந்தார். என்னிடமிருந்து துப்பாக்கியை பிடித்துக் கொண்டு சுடுவியா என்று கேட்டு அநாகரிகமாக நடந்து கொண்டு கேலி செய்தார். அப்போது அவருக்கும் எனக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில்தான் நான் சுட நேர்ந்தது. சுட்ட பின்னர் நான் அதிர்ச்சியடைந்தேன். இதையடுத்து என்னுடன் இருந்த சக வீரர்கள் எனது துப்பாக்கியை பறித்தனர். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் பலியான ராஜ்குமாரின் உடலை செவ்வாய்க்கிழமை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் அஜீஸ்நகரில் புதன்கிழமை நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு ஆறுதல் கூறினார். மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் தர்வாண்டையாரும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x