Published : 21 Dec 2014 09:42 AM
Last Updated : 21 Dec 2014 09:42 AM

பாஜகவை பலப்படுத்தாமல் ஓயமாட்டேன்: சென்னையில் அமித்ஷா சூளுரை

பாரதிய ஜனதா கட்சி பலவீனமாக உள்ள தமிழகம், கேரளம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தாமல் ஓயமாட்டேன் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட மைதானத்தில், பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்பதை குறிக்கும் வகையில் புனித ஜார்ஜ் கோட்டை போல பொதுக்கூட்ட மேடையை பாஜகவினர் வடிவமைத்திருந்தனர். பொதுக்கூட்டத்தில், பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்டு பேசியதாவது:

‘தமிழில் பேச முடியாததால் மன்னிப்புக் கோருகிறேன். நான் தமிழ் கற்றுவருகிறேன். விரைவில் உங்களிடம் தமிழிலேயே பேசுவேன். தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் 2 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றாலும், 19 சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம். இதை வைத்து 2016-ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்பதில் எந்தவித அச்சமும் இல்லை என்று சொல்வேன்.

மோடி பதவியேற்ற 6 மாதத்தில் என்ன செய்துவிட்டார் என்று ராகுல் காந்தி கேட்கிறார். நான் அவரிடம் கேட்கிறேன், 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மக்களுக்கு என்ன செய்தது.

தமிழகத்தில் குடும்ப அரசியலை ஒழிக்க வேண்டும் என்ற விருப்பம் தமிழக மக்களுக்கு இருக்கிறது என்றால் பாஜக நிச்சயம் வெற்றி பெரும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்த காங்கிரஸ் மற்றும் திமுக, 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். இதற்கு, அவர்கள் மக்கள் மத்தியில் பதில் கூற வேண்டும்.

ஆனால், பாஜக ஆட்சி பொறுப்பெற்ற 6 மாதத்தில் 7 முறை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

7 கடலோர மாநிலங்களில் பாஜக பலமில்லாமல் உள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். தமிழகம், கேரளம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தாவிட்டால் அங்கு ஆட்சியை பிடிக்க முடியாது. இந்த மாநிலங்களில் பாஜகவை பலப்படுத்தாமல் ஓயமாட்டேன்’ என்று அமித்ஷா பேசினார்.

முன்னதாக பேசிய பாஜகவின் தமிழ் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‘தமிழகத்தில் திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால வரலாற்றை பாஜக மாற்றியமைக்கும். 2016-ல் 122 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியமைக்கும்’ என்றார்.

கூட்டத்தின்போது அமித்ஷா முன்னிலையில், சினிமா இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகைகள் காயத்ரி ரகுராம், குட்டி பத்மினி உள்ளட்டோர் பாஜகவில் இணைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x