Published : 23 Sep 2013 10:09 AM
Last Updated : 23 Sep 2013 10:09 AM

இலங்கை மாகாணத் தேர்தல் முடிவுகள் - தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு

இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி இருப்பது தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இலங்கை வடக்கு மாகாணத் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளன.

இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற மாகாண சபை தேர்தலில், வடக்கு மாகாணத்தில் உள்ள மொத்தம் 36 இடங்களில் 28 இடங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

இந்தத் தேர்தல் முடிவு குறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மு.கருணாநிதி (திமுக)

அதிகாரத்தை நோக்கி:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த வெற்றி குறித்து மகிழ்ச்சிய டையவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசிய அவர், இந்த தேர்தல் வெற்றியால் அங்குள்ள தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்க முடியாது. எனினும் அதிகார பகிர்வுக்கு முதல் கட்டமான ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 13-வது சட்ட திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றிட புதிய அரசும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் உறுப்பினர்களும் பாடுபடுவார்கள் என நம்புகிறேன்

டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்)

மக்கள் தீர்ப்பு:

இலங்கையில் ராஜபட்சே அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் அளித்துள்ள மிக முக்கியமான தீர்ப்பு இது. இந்தத் தீர்ப்பை இலங்கை அரசு உண்மையிலேயே மதிக்குமானால், தமிழர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ராணுவமயத்தையும், சிங்களமயத்தையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் அவர்களது பிற உடைமைகளைத் திருப்பித் தர வேண்டும்.

இந்தத் தேர்தல் முடிவானது இலங்கை அரசுக்கு மட்டுமின்றி இந்திய அரசுக்கும் மிக முக்கியமான செய்தியை அளித்துள்ளது. இனிமேலாவது இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, இலங்கைத் தமிழர்கள் விரும்பக் கூடிய, நியாயமான அரசியல் தீர்வு பெற்றுத் தருவதற்காக சர்வதேச சமுதாயத்தின் ஆதரவைப் பெற்றிட பாடுபட வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

சுயாட்சிக்கான வெற்றி:

உரிய அதிகாரங்களுடன் கூடிய மாகாண சுயாட்சி தேவை என்ற தங்களது எண்ணத்தை இந்தத் தேர்தல் மூலமாக இலங்கைத் தமிழர்கள் உலகுக்கு எடுத்துக் கூறியுள்ளனர். மக்களின் இந்தத் தீர்ப்புக்கு இலங்கை ஆட்சியாளர்கள் மதிப்பளிக்க வேண்டும். மக்களின் மகத்தான நம்பிக்கையைப் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரப் பரவலுக்கான பேச்சுவார்த்தையை இனி இலங்கை அரசு நடத்திட வேண்டும். 13-வது அரசியல் சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, அதிகாரப் பரவல் அளித்திடுமாறு இலங்கை அரசை இந்தியா நிர்பந்திக்க வேண்டும்.

பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க)

ஒன்றுபட்ட மக்கள் சக்தி:

மிகப் பெரிய யுத்தம் மற்றும் அழிவுக்குப் பிறகும் கூட தங்களால் ஒன்றுபட்டு நிற்க முடியும் என்பதையும், தங்கள் சக்தியைக் காட்ட முடியும் என்பதையும் ஜனநாயக வழியில் தமிழ் மக்கள் நிரூபித்துள்ளனர்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இனியாவது ஜனநாயக முறைப்படி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்களை வழங்கிட இலங்கை அரசு முன்வர வேண்டும். அது இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும்.

அதேபோல் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காக அளித்து வரும் அனைத்து உதவிகளையும் இனி வடக்கு மாகாண அரசுக்கு அளித்து, அவர்கள் மூலமாகவே தமிழ் மக்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்திட இந்திய அரசு முன்வர வேண்டும்.

வைகோ (ம.தி.மு.க.)

சிறிய வெளிச்சம்:

தந்தை செல்வா காலத்தில் இலங்கை அரசு அறிவித்த மாகாணாக் கவுன்சில் அதிகாரங்களோ, அதிபர் ஜெயவர்த்தனா காலத்தில் மீண்டும் அறிவிக்கப்பட்ட மாவட்ட கவுன்சில் அதிகாரங்களோ கூட இப்போதைய மாகாண சபைகள் மூலம் கிடைக்காது. எனினும் இருண்ட வானத்தின் ஒரு மூலையில் சிறிய வெளிச்சம் தெரிவது போல, தற்போதைய மாகாண சபை தேர்தல் முடிவுகள் இலங்கை தமிழ் மக்களின் மன நிலையை, எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கின்றன.

ராமதாஸ் (பா.ம.க.)

கோரிக்கையில் உறுதி:

இந்தத் தேர்தலில் பதிவான சுமார் 5 லட்சம் வாக்குகளில் 80 சதவீத வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பெற்றுள்ளது. 2005-ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பின் வெற்றிகளாகக் குவித்து வந்த ராஜபட்சே கட்சி, முதல் முறையாக இப்போது படுதோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் தமிழர்கள் தங்களின் கோரிக்கைகளில் எவ்வளவு உறுதியாக உள்ளனர் என்பதை உலக சமுதாயம் உணர்ந்து கொள்ள முடியும். தமிழர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அவர்கள் வாழும் பகுதியிலிருந்து இலங்கை அரசு ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்.

கி.வீரமணி (தி.க.)

ஆறுதல் செய்தி:

இலங்கை மாகாணத் தேர்தல் முடிவு வரவேற்க வேண்டிய, ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது. யாழ்ப்பாணம் பகுதியில் மட்டும் மொத்தம் உள்ள 16 இடங்களில் 14 இடங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இலங்கை அரசின் அடக்குமுறை, அச்சுறுத்தல்களையெல்லாம் மீறி, தமிழர்கள் தங்கள் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளனர். இது இலங்கை அரசுக்கு எச்சரிக்கை தரும் செய்தி.

தொல்.திருமாவளவன் (விசிக)

ஒற்றுமை வெளிப்பாடு:

அதிகாரப் பகிர்வுக்கான இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் இந்தத் தேர்தல் முடிவு ஒரு மிக முக்கிய நிகழ்வு. இலங்கைத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கின்றனர் என்பதை இந்தத் தேர்தல் மூலம் அவர்கள் வெளிப்படுத்தி விட்டனர்.

அந்த ஒற்றுமையை மேலும் முன்னெடுத்துச் செல்வது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கடமை. தமிழ் மக்கள் அளித்திருக்கும் இந்த மகத்தான ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை அரசின் மீதான சர்வதேச நெருக்குதல்களை அதிகப்படுத்த கூட்டமைப்பு பாடுபட வேண்டும்.

இவ்வாறு தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தத் தேர்தல் முடிவானது இலங்கை அரசுக்கு மட்டுமின்றி இந்திய அரசுக்கும் மிக முக்கியமான செய்தியை அளித்துள்ளது.

இனிமேலாவது இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, இலங்கைத் தமிழர்கள் விரும்பக் கூடிய, நியாயமான அரசியல் தீர்வு பெற்றுத் தருவதற்காக சர்வதேச சமுதாயத்தின் ஆதரவைப் பெற்றிட பாடுபட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x