Published : 04 Jan 2016 04:17 PM
Last Updated : 04 Jan 2016 04:17 PM
இந்தியாவின் தெற்கு முனையான ராமேசுவரத்தை வீரர் ஸ்காட் கெல்லி சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
அமெரிக்கக் கடற்படையிலிருந்து ஓய்வு பெற்ற பொறியாளரான ஸ்காட் கெல்லி (51) விண்வெளி வீரராக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தியவர்.
ஸ்காட் கெல்லி கடந்த மார்ச் முதல் வாரத்திலிருந்து தொடர்ச்சியாக ஒரு வருட காலத்துக்கு ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தற்போது தங்கியுள்ளார். கடந்த அக்டோபர் 16, அன்றோடு 383 நாட்கள் விண்ணில் இருந்த ஒரே வீரர் என்ற சாதனையை ஸ்காட் கெல்லி புரிந்தார். வருகிற மார்ச் மாதம் 3ஆம் தேதி தனது ஆய்வுகளை முடித்து விட்டு பூமிக்கு திரும்புகிறார்.
தற்போது சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக 286-வது நாட்களை கடந்துள்ள ஸ்காட் கெல்லி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மன்னார் வளைகுடா கடல், பாக்ஜலசந்தி கடல், பாம்பன் பாலம், ராமேசுவரம் தீவு, குருசடைத் தீவு, மண்டபம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி விண்வெளியிலிருந்து புகைப்படமாக எடுத்து 'இந்தியாவின் தெற்கு முனையும் அதன் நீலக் கடலும்' என்று தலைப்பிட்டுள்ளார்.
தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் வலைப்பக்கங்களில் கெல்லி பகிர்ந்த இந்தப் படம் தற்போது ஆயிரக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT